No menu items!

இஸ்ரோ தலைவராக தமிழர்!

இஸ்ரோ தலைவராக தமிழர்!

இஸ்ரோ அமைப்பின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் ஜனவரி 14 ஆம் தேதி முறைப்படி பதவியேற்றுக் கொள்கிறார். அடுத்த 2 ஆண்டுகள் அல்லது மறு அறிவிப்பு வரும்வரை அவர் இப்பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன், இஸ்ரோவில் புகழ்பெற்ற விஞ்ஞானியாக உள்ளார். விண்வெளித் துறையில் 1984-ம் ஆண்டு முதல் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட வி.நாராயணன், இந்திய விண்வெளித்துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி57, சூரியன் குறித்த ஆய்வுக்கான ஆதித்யா எல்1 திட்டம், ஜிஎஸ்எல்வி எம்கே 3, சந்திரயான் 2 மற்றும் 3 உள்ளிட்ட திட்டங்களில் முக்கிய பங்காற்றி உள்ளார். நாராயணன் தலைமையிலான எல்பிஎஸ்சி குழு, இஸ்ரோவின் பல்வேறு திட்டங்களுக்கு 183 திரவ உந்துவிசை திட்டம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை வழங்கியுள்ளது.

தற்போது திருவனந்தபுரம் அடுத்த வலியமாலாவில் இயங்கி வரும் திரவ உந்துவியல் மையத்தின் இயக்குநராக கடந்த 6 ஆண்டுகளாக வி.நாராயணன் பணியாற்றி வருகிறார். முன்னதாக   கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் இஸ்ரோவின் தலைவராக கன்னியாகுமரியைச் சேர்ந்த சிவன் பதவி வகித்தார்.

இது கூட்டுப்பணி – நாராயணன்

இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன், “மிக முக்கியமான பொறுப்பை பிரதமர் மோடி எனக்கு கொடுத்திருக்கிறார். இஸ்ரோவுக்கு அடுத்தடுத்து சில முக்கிய திட்டங்கள் உள்ளன. இஸ்ரோ பணி எனது தனிப்பட்ட பணி அல்ல, அனைவருடைய கூட்டுப் பணி” என்றார்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இஸ்ரோ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.நாராயணனுக்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் உளம்நிறைந்த வாழ்த்துகள். தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் இஸ்ரோ-வில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் எனில், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

சந்திரயான் 2, சந்திரயான் 3, ஆதித்யா எல்1, ககன்யான் என உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்குக் காரணமான பல விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பங்களித்த – தொடர்ந்து பங்களித்து வரும் நாராயணின் தலைமையில் இஸ்ரோ உறுதியாகப் புதிய உயரங்களைத் தொடும்! நாராயணனின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...