No menu items!

மூத்த அமைச்சருக்கு கிடைத்த ஷாக் – மிஸ் ரகசியா

மூத்த அமைச்சருக்கு கிடைத்த ஷாக் – மிஸ் ரகசியா

கையில் ஸ்வீட் பாக்ஸுடன் ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“இதென்ன புதுசா ஸ்வீட் பாக்ஸெல்லாம் கொண்டுவர்றே? இன்னைக்கு உனக்கு பிறந்த நாள்கூட கிடையாதே? கல்யாணம் ஏதும் பிக்ஸ் ஆயிடுச்சா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. வரும்போது அதிமுக ஆபீஸ் வழியா வந்தேன். இன்னைக்கு எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் இல்லையா. அதான் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்தாங்க. உங்களுக்கு பிடிக்குமேன்னு கொண்டு வந்தேன்.”

“வழக்கமா எடப்பாடி இப்படி பெரிய அளவுல பிறந்தநாள் கொண்டாட மாட்டாரே… இந்த வருஷம் என்ன புதுசா கொண்டாட்டம்?”

“அதிமுக முழுசா தன்னோட கைக்கு வந்த பிறகு கொண்டாடற முதல் பிறந்த நாள் இல்லையா. அதான் கொண்டாட்டங்கள் சூப்பரா இருக்கணும்னு ரத்தத்தின் ரத்தங்களுக்கு உத்தரவு போட்டிருக்காரு. கூடவே தன்னோட பிறந்தநாளை யாரெல்லாம் உற்சாகமா கொண்டாடறாங்கன்னும் நோட் பண்ணிட்டு இருக்காராம்.”

“அமைச்சரவை மாற்றம் பற்றி ஏதாவது நியூஸ் இருக்கா?”

“நாசரோட சேர்த்து அமைச்சர்கள் காந்தியையும், கயல்விழி செல்வராஜையும் மாத்த முதல்வர் யோசிச்சிட்டு இருந்தாராம். இதைப்பத்தி சிலர்கிட்ட அவர் விவாதிச்சிருக்காரு. ஆனா அவங்க அதை லீக் பண்ணிட்டாங்க. இதனால உஷாரான அந்த ரெண்டு அமைச்சர்களும் கிச்சன் கேபினட்ல தங்களுக்கு நெருக்கமானவங்க மூலமா முதல்வருக்கு நெருக்குதல் கொடுத்தாங்கனு ஒரு செய்தி இருக்கு. அமைச்சரவை மாற்றம் இதோடு நிற்கவில்லை. முதல்வர் வெளிநாட்டு பயணம் முடிந்து வந்ததும் தொடருமாம். இன்னும் சில அமைச்சர்கள் மீது முதல்வருக்கு அதிருப்தி இருக்கு. அதுக்கான ஆக்ஷன் தொடரும் என்கிறார்கள்”

“நிதியமைச்சர் பொறுப்புல இருந்து தன்னை மாத்தினதுக்கு பிடிஆர் பெரிய அளவுல ஏதும் பிரச்சினை செய்யலையே? எப்படி சாமாதானப்படுத்துனாங்க?”

“இலாகா மாற்றம் பத்தி முன்கூட்டியே பிடிஆர்கிட்ட முதல்வர் குடும்பத்தை சேர்ந்த முக்கியமானவர் பேசியிருக்கிறார். ‘இலாகா மாற்றத்தை அமைதியா ஏத்துக்கங்க. இப்போதைக்கு எந்த பிரச்சினையும் வேண்டாம். நீங்க ஆடியோவில பேசினதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. பல பேர் இப்படி தப்பா பேசுறாங்க. அதுக்காக ராஜினாமா எல்லாம் செய்யாம. கொடுக்கற துறையை வாங்கிக்கங்க. உங்களுக்கு என்ன செய்யணும்னு தெரியும். நம்புங்க’ன்னு அவர் சொல்லியிருக்கார். அதனாலதான் பிடிஆர் எந்த பிரச்சினையும் செய்யாம இருக்கார். ஆனா இன்னொரு மூத்த அமைச்சருக்குதான் ஷாக். கொதிச்சுப் போயிருக்கார்.”

“யார் அந்த மூத்த அமைச்சர்?”

“அமைச்சர் துரைமுருகன்தான். கனிமவளத் துறையை தன்னிடமிருந்து எடுக்கப் போறதா அதிகாரிகள் மூலம் கேள்விப்பட்ட அமைச்சர் துரைமுருகன், ‘கனிம வள இலகாவை என்கிட்ட இருந்து எடுக்கக்கூடாது. அமைச்சரவை மாற்றம் பற்றி பொதுச் செயலாளரான என்கிட்ட விவாதிக்க மாட்டீங்களான்னு முதல்வர்கிட்ட வாக்குவாதம் செஞ்சிருக்கார். ஆனால் முதல்வர் தன்னோட முடிவுல உறுதியா இருந்ததால வேற வழியில்லாம ஒத்துக்கிட்டார்னு சொல்றாங்க.”

“வேற யாருக்கும் அதிருப்தி இல்லையா?”

“உதயநிதி ஸ்டாலினுக்கு கொஞ்சம் வருத்தம்னு பேசிக்கறாங்க. மனோ தங்கராஜிடம் இருந்த ஐடி துறையை பிடிஆருக்கு மாத்தினதை அவர் ரசிக்கல. குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா, அதிமுகன்னு ரெண்டு கட்சிகளையும் சமாளிச்சு திமுகவை முன்னிலைப்படுத்தும் வேலையை மனோ தங்கராஜ் பிரமாதமா செய்யறார். அவருக்கு எதுக்கு இப்படி ஒரு தண்டனைன்னு வாக்குவாதம்கூட செஞ்சிருக்கார். ஆனால் முதல்வர் இதற்கு பதில் சொல்லலை. அதேசமயம் மனோ தங்கராஜ் கிட்ட நிலைமையை எடுத்து சொல்லி அவரை சமாதானம் செஞ்சிருக்கார் முதல்வர்.”

“மாநில உயர்நிலை கல்வி குழு உறுப்பினர் ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் நேசன், முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் மேல புகார் சொல்லி அந்தக் குழுவில் இருந்து வெளியேறி இருக்காரே?”

“இந்த விஷயத்துல உதயச்சந்திரன் மேல முதல்வருக்கு வருத்தம்னு சொல்லிக்கறாங்க. சில அமைச்சர்களும் அவர் மேலே புகார் சொல்லியிருக்காங்க. ஆனால் அந்த அதிகாரி மேல முதல்வருக்கு தனிப்பட்ட பிரியம் இருக்கிறதுனால என்ன செய்யறதுனு தவிச்சுக்கிட்டு இருக்கிறார். விரைவில் நிதித் துறைக்கு மாற்றப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள்?”

“என் மேல இன்னும் கேஸ் போடுங்கனு முதல்வருக்கு அண்ணாமலை சவால் விட்டிருக்கிறாரே”

”இப்ப திமுகவுல அவரப் பத்திதான் பேச்சு. அவரை எப்படி சமாளிக்கிறதுனு தீவிரமா யோசிச்சுக்கிட்டு இருக்காங்க. அண்ணாமலைக்கு மத்திய அரசின் சப்போர்ட் இருக்கிறதுனால தடாலடியா எதையும் செய்ய முடியல. ஆடியோவை கண்டுக்காமலே போயிருக்கலாம். அவர் பாட்டுக்கு பேசிட்டு இருந்திருப்பார். அவரோட வலைல நாமே போய் விழுகிறோம்னு அரசியலுக்கு அப்பாற்பட்ட சிலர் முதல்வர்கிட்ட சொல்லியிருக்காங்க. ஆனா, அண்ணாமலைக்கு பதில் சொல்லாம கடந்து போனா அது நல்லாருக்காதுனு சில அதிகாரிகள்தாம் முதல்வரை உசுப்பிவிட்டிருக்காங்கனு அறிவாலயத்துல சொல்றாங்க”

“அண்ணாமலை இப்போ உற்சாகமா இருப்பாரே?”

“உற்சாகம் கொஞ்சம் குறைவுதான். கர்நாடகத் தேர்தல் அவருக்கு கொஞ்சம் டென்ஷன் கொடுத்துருக்கு. ஆனாலும் சமாளிச்சிக்கிட்டு இருக்கிறார்.”

“வெளில தெம்பா இருந்தாலும் கட்சிக்குள்ள அவருக்கு எதிர்ப்பு குறையலனு சொல்றாங்களே?”

“உண்மை. இப்ப அண்ணாமலை மேல கமலாலயத்தில் புது சர்ச்சை கிளம்பி இருக்கு. அவரோட இசட் பாதுகாப்பு படை காவலர்களுக்குன்னு தனியா ஒரு வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்திருக்கிறார். அவங்களோட சாப்பாட்டுக்காக தினமும் 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்யறார்னு சொல்றாங்க. இத்தனைக்கும் இதெல்லாம் அரசாங்கமே பார்த்துக்கும். இருந்தாலும் அரசு கொடுக்கற பணத்தை அவங்க தங்கள் செலவுக்கு பயன்படுத்திக்கட்டும்னு சொல்லி அந்த செலவை அண்ணாமலை பார்த்துக்கறாராம். இந்தப் பணத்தை ஒரு தொழிலதிபர் ஸ்பான்சர் பண்றதாவும், இது எதிர்காலத்துல பிரச்சினை கொடுக்கலாம்னும் கமலாலயத்துல பேசிக்கறாங்க.”

’”தினம் 25 ஆயிரமா?”

“ஆமாம். அப்ப மாசம் எவ்வளவுனு கணக்குப் போட்டுக்குங்க”

“அவ்வளவு பணத்தை சும்மா ஒரு தொழிலதிபர் செலவு பண்ணுவாரா? நம்புற மாதிரி இல்லையே?”

“என் காதுல விழுந்த விஷயங்களை சொல்றேன். நம்புனா நம்புங்க” என்று கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...