சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் பாலா. பின்னர், நந்தா, பிதாமகன், நான்கடவுள், அவன் இவன் , பரதேசி, தாரைதப்பட்டை, நாச்சியார், வர்மா ஆகிய படங்களை இயக்கினார். இப்போது அருண்விஜய் நடிக்கும் வணங்கான் படத்தை இயக்கிய வருகிறார். மாநாடு, நாகராஜசோழன் எம்ஏ, போன்ற படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி படத்தை தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
வணங்கான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி படம் ரிலீஸ். இந்நிலையில், சென்னை வர்த்தக மையத்தில் டிசம்பர் 18ம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டுவிழா விமர்சையாக நடக்க உள்ளது. பாலா படம் சம்பந்தப்பட்ட விழா நடந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த விழா பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம், சற்றே யோசித்து பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க உள்ளார். ஆம், வணங்கான் படத்தின் இசை வெளியீட்டுவிழாவுடன் பாலாவுக்கு பாராட்டுவிழாவும் நடத்த முடிவு செய்து இருக்கிறார்.
பாலா அப்படியென்ன சாதனை செய்து விட்டார் என்று யோசிக்கிறீர்களா? இந்த ஆண்டு பாலாவின் சினிமா பயணத்தில் வெள்ளி விழா ஆண்டு, 1999ம் ஆண்டுதான் அவர் இயக்கி, தமிழில் பெரிய சாதனை படைத்த சேது வெளியானது. ஆகவே, வணங்கான் இசை வெளியீட்டுவிழாவுடன், பாலாவின் 25 ஆண்டு கால கலைச்சேவையை பாராட்டி, ஒரு பிரமாண்டமான பாராட்டு விழாவை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. பொதுவாக இது போன்ற பொன்னாடை போர்த்துதல், புகழ்ந்து பேசுதல், பாராட்டுவிழா இதெல்லாம் பாலாவுக்கு அதிகம் பிடிக்காது. ஆனாலும், படக்குழுவின் வற்புறுத்தல் காரணமாக பாராட்டுவிழாவுக்கு ஓகே சொல்லிவிட்டாராம்
டிசம்பர் 18, 2024ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் அந்த இரட்டிப்பு விழாவில், பாலாவால் அறிமுகப்படுத்தப்பட்ட, அவரால் சினிமாவில் முன்னேற்றம் அடைந்த, அவரை நேசிக்கும் நண்பர்கள் திரளாக கலந்துகொள்கிறார்கள். பாலா கூச்சப்படும் அளவுக்கு புகழ்ந்து தள்ளப்போகிறார்கள்.
இப்போதைய நிலவரப்படி அந்த விழாவில் இயக்குனர் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர்கள் லிங்குசாமி, மிஷ்கின், சமுத்திரக்கனி, ராம் மற்றும் ஏ.எல். விஜய் ஆகியோர் கலந்துகொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஆனாலும், ஒட்டு மொத்த கோலிவுட்டும் அவங்க 2 பேர் வருவாங்க, மனதார வாழ்த்துவாங்களா என்று கோரசாக கேள்வி கேட்கிறது. 1) சேது படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆன விக்ரம்.2) நந்தா படத்தின் மூலம் புது வாழ்க்கை பெற்ற சூர்யா.
இவங்க இரண்டுபேருக்கும் முறைப்படி அழைப்பு அனுப்பப்படும், ஆனால், வருவாங்களா என தெரியாது என்று கூறப்படுகிறது. காரணம், தனது மகன் துருவ் விக்ரமை பாலாதான் அறிமுகப்படுத்த வேண்டும் என்று விரும்பிய விக்ரம், வர்மா பட வாய்ப்பை பாலாவுக்கு கொடுத்தார். அந்த படம் வெளியாகவில்லை. ஆனால், பாலா, விக்ரம் இடையே ஏற்பட்ட மனகசப்பால் அவர்கள் அதிகம் பேசுவது இல்லை என்று கூறப்படுகிறது. வணங்கான் படத்தில் முதலில் நடித்தவர் சூர்யா. ஆனால், படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் அவர் விலக, அவருக்கு பதில் அருண்விஜய் ஹீரோ ஆனார். சூர்யாவும், பாலாவும் திசையில் செல்வதில்லை என்ற முடிவில்லை இருக்கிறாராம்.