இந்தியாவில் புதிய குடியுரிமை சட்டத்தை கொண்டு வரும் வகையில், மக்களவையில் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் போலி பாஸ்போர்ட், போலி விசா பயன்படுத்தி நுழைந்தாலோ, தங்கியிருந்தாலோ, இந்தியாவை விட்டு வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டாலோ, அதிகபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-24-ம் நிதி ஆண்டில் இந்தியாவுக்கு மொத்தம் 98.40 லட்சம் வெளிநாட்டினர் வந்துள்ளனர். இந்தியாவுக்குள் நுழையும் பாஸ்போர்ட் சட்டம் (1920), வெளிநாட்டினர் பதிவு சட்டம் (1939), வெளிநாட்டினர் சட்டம் (1946), குடியுரிமை சட்டம் ஆகிய 4 சட்டங்களால் தற்போது வெளிநாட்டினர் வருகை நிர்வகிக்கப்படுகிறது. இந்த சட்டங்களின்படி, வெளிநாட்டினருக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன.
கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ சிகிச்சை ஆகியவற்றுக்காக நீண்ட கால விசாவில் வரும் வெளிநாட்டினர், 14 நாட்களுக்குள் வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றால் 24 மணி நேரத்தில் பதிவு செய்ய வேண்டும். இது மட்டுமின்றி, அந்தமான் நிகோபார் தீவுகள், ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்வதானால் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
சட்டம் கொண்டுவர திட்டம்: இதுபோன்ற பழைய சட்டங்களை ரத்து செய்துவிட்டு, புதிய குடியுரிமை சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, மக்களவையில் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதாவை (2025) மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 11-ம்
தேதி தாக்கல் செய்தது.
இந்த புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பற்றிய விவரம்: இந்தியாவில் போலி பாஸ்போர்ட், போலி விசா பயன்படுத்தி ஒருவர் நுழைந்தாலோ, தங்கியிருந்தாலோ அல்லது இந்தியாவை விட்டு வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டாலோ, 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
விசா காலம் முடிந்து இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்காணிக்க உதவும் வகையில் ஓட்டல்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவை வெளிநாட்டினர் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். அதேபோல, இந்தியாவுக்கு பயணியர் வாகனங்களை இயக்கும் சர்வதேச விமான நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்கள் ஆகியவை தங்களது ஊழியர்கள், பயணிகளின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
மத்திய அரசுக்கு அதிகாரம்: வெளிநாட்டினரின் வருகையை ஒழுங்குபடுத்தவும், தேவைப்பட்டால் அவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவும் இந்த புதிய சட்டம் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. வெளிநாட்டினர் மற்றும் குடியுரிமை சம்பந்தமான அனைத்து விவரங்களையும் விரிவாக நிர்வகிக்க இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் பல நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. சட்டங்களை எளிதாக்குவது, தேவையற்ற அம்சங்களை நீக்குவது, எளிதாக தொழில் செய்வதை ஊக்குவிப்பது, நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள், பொருளாதார வளர்ச்சி, சுற்றுலாவை மேம்படுத்துவது ஆகியவற்றை கருத்தில் கொண்டும் இந்திய புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: சட்டவிரோத குடியுரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், விசா காலம் முடிந்து இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்காணிக்கவும் இந்த மசோதா உதவும். வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், அனைத்து விதமான விசாக்களையும் வெளிநாட்டினருக்கு வழங்க முடியும். குடியுரிமை பிரிவு 167 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு 7 பிரிவுகளின்கீழ் மின்னணு விசாக்களை வழங்க முடியும்.