நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த செப்டம்பர் 30ம் தேதி அவர், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனை காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிகிச்சை பெற்றிருந்த நிலையில், அன்றைய தினம் இரவு 10.30 மணியளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ சோதனையில் ரஜினிக்கு ரத்த நாளத்தில் அடைப்பு கண்டறியப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படுள்ளது. தொடர்ந்து ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை, மருத்துவர்கள் சாய் சதீஷ், விஜய் சந்திரன், பாலாஜி ஆகியோர் அடங்கிய குழுவினர் கண்காணித்து வந்தனர். இதனிடையே சிக்சை முடிந்து ஐசியுவில் இருந்த ரஜினிகாந்த் கண்விழித்து பேசியதாகவும், தனக்கு சிகிச்சியளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ரஜினிகாந்த், ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டு இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையின் விவரம் வருமாறு;
நான் மருத்துவமனையில் இருக்கும் போது, நான் சீக்கிரம் உடல்நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும், நலவிரும்பிகளுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
மற்றும் நான் நலம் பெற பிரார்த்தனைகள் செய்த, மனதார வாழ்த்திய என் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் ரஜினிகாந்த் கூறி இருக்கிறார்.
அறிக்கைக்கு முன்னதாக எக்ஸ் வலை தள பக்கத்தில் பிரதமர் மோடி,முதல்வர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளுநர் ஆர்.என். ரவி, எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.