No menu items!

2024 ஜொலித்த விளையாட்டு நட்சத்திரங்கள்!

2024 ஜொலித்த விளையாட்டு நட்சத்திரங்கள்!

இந்த ஆண்டில் இந்தியா விளையாட்டுத் துறையில் பல சாதனைகளை படைத்தது. அதில் குறிப்பிட்ட சில சாதனைகளைப் படைத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த முக்கியமான சில விளையாட்டு வீரர்களைப் பார்ப்போம்… 

குகேஷ்:

11 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் கையை விட்டுப் போன சர்வதேச செஸ் சாம்பியன் பட்டத்தை இந்த ஆண்டு மீட்டுக் கொண்டுவந்தார் குகேஷ்.

 மிக இளம் வயதில் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ள குகேஷ், சென்னையைச் சேர்ந்த செஸ் வீர்ர் ஆவார். குகேஷின் அம்மா பத்மா, ஒரு மைக்ரோ பயாலஜிஸ்ட். அவரது அப்பா ரஜினிகாந்த், காது மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர். வேலம்மாள் பள்ளியில் படித்த குகேஷ், தனது 7 வயது முதல் பள்ளியிலேயே செஸ் பயின்று வந்துள்ளார். அங்கு அவருக்கு செஸ் பயிற்சி அளித்த பாஸ்கர் என்ற ஆசிரியர் கூறும்போது, “7 வயதில் செஸ் பயிற்சிக்கு வந்த குகேஷ், 6 மாதங்களிலேயே அதன் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு மிகச் சிறந்த செஸ் வீர்ர் ஆகிவிட்டார். அப்போதே அவருக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் இருப்பது எனக்குத் தெரிந்தது” என்கிறார்.

வேலம்மாள் பள்ளியில் ஆரம்பகட்ட பயிற்சியை முடித்த குகேஷ், பின்னர் விஜயானந்த் என்ற பயிற்சியாளரிடம் அடுத்த கட்ட பயிற்சிக்காக சேர்ந்தார். அவரிடம் பயிற்சி பெற ஆரம்பித்த நாள் முதல் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்துள்ளார் குகேஷ். 2015-ல் ஆசிய ஸ்கூல் செஸ் சாம்பியன்ஷிப், கேண்டிடேட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் பட்டங்களை குகேஷ் வென்றார். 2018-ம் ஆண்டில் நடந்த ஆசிய இளையோர் செஸ் போட்டியில் குகேஷ் 5 பதக்கங்களை வெல்ல, அனைவரின் பார்வையும் அவர் மீது திரும்பியது.

தன் 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற குகேஷ், கேண்டிடேட் செஸ் உள்ளிட்ட பல சர்வதேச போட்டிகளில் வெற்றிக்கொடி நாட்டினார். இப்போது சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதன்மூலம் மிக இளம் வயதில் இப்பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் தனது 22 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது. அதை இப்போது தனது 18 வயதில் முறியடித்துள்ளார் குகேஷ்.

ஜெய்ஸ்வால்:

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்த ஆண்டு மட்டும் யஷஷ்வி ஜெய்ஸ்வால் அடித்த ரன்கள் 1478. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ச்ச்சின் டெண்டுல்கர் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் ஓராண்டில் அவரைவிட அதிக ரன்களை குவித்துள்ளார். 2010-ம் ஆண்டில் சச்சின் குவித்த ரன்கள் 1562.

கிரிக்கெட் உலகில் இப்போது ரசிகர்களின் கனவு நாயகனாக இருக்கும் ஜெய்ஸ்வால், கிரிக்கெட் பற்றி கனவு கண்டது  12 வயதில். உத்தரப் பிரதேசத்தில் உள்ள படோஹி எனும் கிராமத்தில் கிரிக்கெட் ஆடத் தொடங்கிய ஜெய்ஸ்வால்,   அந்த ஊரில் இருந்தால், தன் கிரிக்கெட் கனவுகளை நனவாக்க முடியாது என்று நினைத்தார்.  இந்திய கிரிக்கெட்டின் தொட்டிலான மும்பைக்கு புறப்பட்டார். பானி பூரி கடையில் வேலை பார்த்துக்கொண்டே கிரிக்கெட் பயிற்சி பெற்றார்.

  பயிற்சி பெற்றுவரும் மைதானத்தின் கிரவுண்ட்ஸ்மேனின் டெண்டில் தங்கிக்கொண்ட ஜெய்ஸ்வால், அங்கு பானி பூரி விற்கும் ஒருவரிடம் உதவியாளராக சேர்ந்தார். அவரிடம் வேலை பார்த்து கிடைக்கும் வருமானத்தை வைத்து சாப்பிட்டார்.  இந்த சமயத்தில் யாராவது நண்பர்கள் வந்தால், அவர்களுக்கு தான் பானி பூரி கடையில் வேலை பார்ப்பது தெரியக் கூடாது என்பதற்காக ஒளிந்துகொள்வாராம். அப்படி கஷ்டப்பட்டு கிரிக்கெட் கற்ற பலன்தான் இன்று இந்திய கிரிக்கெட்டின் உச்சாணிக் கொம்பில் அவரை ஏற்றி வைத்துள்ளது.

மனு பாகர்:

ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்லவே எல்லோரும் தடுமாறிக்கொண்டு இருக்கும்போது, 2024 ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்களை அள்ளி வந்திருக்கிறார் மனு பாகர்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜஜ்ஜார் மாவட்டத்தில் 2002-ம் ஆண்டு பிறந்தவர் மனு பாகர். அவரது அப்பா ராம் கிஷண் பாகர் மெர்ச்சண்ட் நேவியில் தலைமை பொறியாளராக பணியாற்றி வந்தார்.

மனு பாகர் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெறத் தொடங்கியது தனது 14 வயது முதல்தான். அதுவரை ஹூயன் லங்லாங் என்ற மணிப்பூரி தற்காப்பு கலையில்தான் மனு பாகர் பயிற்சி பெற்று வந்தார். இதைத்தவிர குத்துச்சண்டை, டென்னிஸ் மற்றும் ஸ்கேட்டிங் போட்டிகளிலும் மனு பாகர் தனது சிறு வயதில் ஆர்வம் காட்டி வந்தார். அந்த விளையாட்டுகளில் அவர் தேசிய அளவில் சில பதக்கங்களையும் வாங்கியிருக்கிறார்.

தனது 14 வயதில், துப்பாக்கி சுடுதலில் முழு ஆர்வம் செலுத்தப் போவதாக தனது தந்தையாரிடம் மனு பாகர் கூறியுள்ளார். உடனே அவரது தந்தை, இந்த விளையாட்டுக்கு தேவையான துப்பாக்கி உள்ளிட்ட சில கருவிகளை 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கிக் கொடுத்துள்ளார்.

துப்பாக்கி சுடும் போட்டியில் பயிற்சி பெறத் தொடங்கிய 1 ஆண்டிலேயே அதில் தேர்ச்சி பெற்ற மனு பாகர், அதன் பின் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை அள்ளியுள்ளார். அதன் உச்சம்தான் இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் அவர் வென்ற 2 பதக்கங்கள்.

காசிமா:

அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெற்ற 6-வது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை காசிமா 3 தங்கப் பதங்களை வென்று சாதித்திருந்தார்.

சென்னையின் புது வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு எளிய குடும்பத்தில் ஆட்டோ டிரைவரின் மகளாக பிறந்தவர் காசிமா. பல்வேறு தடைகளைத் தாண்டி அவர் கேரம் விளையாட்டில் சாதனை படைத்திருக்கிறார்.

“6 வயது முதல் பயிற்சி எடுத்து வருகிறேன். 7 வயதில் தேசிய அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தேன். எனது அப்பாதான் கோச்சிங் கொடுத்து வருகிறார். தமிழ்நாடு கேரம் சங்க செயலாளர் மரிய இருதயமும் எனக்கு கோச்சிங் கொடுக்கிறார். என் வீட்டின் சுவர், கண்ணாடி என எல்லா இடத்திலும் ‘I’m a world champion one day’ என எழுதி வைத்திருப்பேன்” என்று பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார் காசிமா. அந்த லட்சிய வெறிதான் இன்று அவருக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...