ஆத்தூரில் இளம் பெண் காணாமல் போகும் புகாரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் காஸ்ட்ரோ களத்தில் இறங்குகிறார். அதே நேரத்தில் சென்னையில் இருந்து கோவை செல்லும் ஆம்னி பேருந்தில் ஒரு பெண்ணை டார்ச்சர் செய்வதாகப் புகார் வருகிறது.
அந்தப் பேருந்தை மடக்கும்போது பயணி ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அந்தப் பயணியைக் கொன்றது யார்? டார்ச்சருக்கு உள்ளான பெண் யார்?, காணாமல் போன பெண் என்ன ஆனார்? இந்த மூன்று சம்பவங்களின் பின்னணியில் இருப்பது யார்? என்பதை 10 மணி நேரத்தில் துப்பு துலக்குவதுதான் படத்தின் கதை.
பத்து மணி நேரத்திற்குள் இந்த கொலையாளிகளை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக சிபிராஜ் வருகிறார். அவரது பார்வையும், தாடியும் பாத்திரத்திற்கு நன்றாக இருக்கிறது. கொலையாளி யார் என்கிற பரபரப்பு நமக்குள் வருகிறது. ஒரு கொலையை கண்டுபிடிக்கப் போய் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் தொடர்ந்து நடக்கும் காட்சிகள் ஒவ்வொரு தடயமாக சிபிராஜ் கண்டுப்பிடிப்பது தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் எப்போது க்ளைமேக்ஸ் வரும் என்று தோன்றுகிறது. சிபிராஜ் இயக்குனர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்திருக்கிறார். ஆனாலும் ஐயப்பன் கோவிலுக்குப் போகும் போலீஸ் என்பது பல படங்களில் பார்த்தாச்சு.
விடிந்தால் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஊரில், 3 போலீஸாரை சுட்டுக் கொன்று விட்டால் என்ன பரபரப்பு தொற்றிக்கொள்ளும்? உயரதிகாரிகள் குவிந்துவிட மாட்டார்களா? ஆனால், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரே எல்லாவற்றையும் டீல் செய்கிறார். கடைசியில் அனைத்துக் குற்றச் சம்பவங்களையும் ஒரு புள்ளியில் இணைத்து யூகிக்கவே முடியாத ஒரு காரணத்தைச் சொல்லியிருப்பதை. பாடல், காமெடி போன்ற ‘விஷயங்களை இயக்குநர் தவிர்த்திருப்பது நல்லது.
சப் இன்ஸ்பெக்டராக கஜராஜின் நடிப்பில் குறையில்லை. ராஜ் ஐயப்பா, ஜீவா ரவி, திலீபன், சரவண சுப்பையா, தங்கதுரை, குரோஷி உள்பட துணைக் கதாபாத்திரங்களும் தேவையான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். த்ரில்லர் படத்துக்குரிய பின்னணி இசையை கே.எஸ்.சுந்தரமூர்த்தி வழங்கியிருக்கிறார். ஜெய் கார்த்திக்கின் கேமரா, இரவுக் காட்சிகளை அழகாகப் படம் பிடித்திருக்கிறது.