தற்போது பரவலாகப் பேசப்பட்டு வரும் தேசிய பங்குச் சந்தை ஊழல் மற்றும் சித்ரா ராமகிருஷ்ணா உட்பட இந்த ஊழல் தொடர்பான கைதுகள், இந்த வழக்கு விசாரணை நிலையை அறிய, சுபாஷ் அகர்வால் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டிருந்தார். இதற்கு பதிலளிக்க செபி மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து செபி, “இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது. செய்திகளை வெளியிடுவதால் நிர்வாக கட்டுப்பாடுகளில் பாதிப்பு ஏற்படும். எனவே, இது குறித்து தற்போது எந்த தகவலையும் வெளியிட முடியாது”என்று கூறியுள்ளது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்: போக்குவரத்து துறை எச்சரிக்கை
அரசு போக்குவரத்து ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகின்ற மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளார்கள். இந்நிலையில், ‘வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்று ஊழியர்களை எச்சரித்துள்ளது போக்குவரத்து துறை. மேலும், இந்த இரு நாட்களில் விடுப்பு அளிக்கவும் அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.
மீண்டும் உயரும் தங்கம் விலை!
தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்று தங்கம் 1 சவரன் 38,648க்கும், 1 கிராம் 4,831க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று (வெள்ளி) காலை நிலவரப்படி 1 சவரனுக்கு 296 ரூபாய்கள் அதிகரித்து 38,832க்கும், கிராம் 1க்கு 31 ரூபாய் அதிகரித்து, 4,854ஆகவும் உள்ளது. வெள்ளி, கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து, 73.80காசுகளுக்கும், கட்டி வெள்ளி கிலோ 73,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முதல்வர் துபாய் பயணம்: அண்ணாமலை விமர்சனம்
தமிழக பட்ஜெட் ஏமாற்றமளிப்பதாகவும் அதற்காக அரசைக் கண்டித்தும் பாஜக சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசும்போது, “இது திமுக தொண்டர்களை வளர்க்க போடப்பட்ட பட்ஜெட்” என்றார். மேலும், “துபாயில் ஒரு வருடமாக நடந்து கொண்டிருக்கும் பொருட்காட்சி முடிவடைய இன்னும் 5 நாட்கள் இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழக பெவிலியனை திறக்க சென்றுள்ளது வேடிக்கையாக உள்ளது” என்றும் கூறினார்.
‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் வெளியானது!
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரன் ஆகிய பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. 500 கோடி பட்ஜெட்டில் 4 மொழிகளில் மிகப் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் என்பதால், ரசிகர்களிடையே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.