No menu items!

ஆம் ஆத்மி சாதித்தது எப்படி?

ஆம் ஆத்மி சாதித்தது எப்படி?

ஊழலுக்கு எதிரான மக்களின் மனநிலையை பயன்படுத்திக் கொண்டு ஊழலுக்கு எதிரான ஒரு அரசியல் கட்சியை உருவாக்க வேண்டும் என்பதுதான் அரவிந்த் கெஜ்ரிவாலின் எண்ணம்.


ந்திய அரசியலில் புதிய கட்சிகள் தோன்றுவது அதிசயமல்ல. ஆச்சர்யமல்ல.

ஆனால் வழக்கமான அரசியலாக இல்லாமல் மாற்று அரசியலை முன் வைத்து வெற்றி பெறுவது ஆச்சர்யம். அதிசயம்.
அப்படியொரு ஆச்சர்ய அதிசயக் கட்சிதான் ஆம் ஆத்மி கட்சி.

இந்தக் கட்சியின் கதாநாயகர் அரவிந்த் கெஜ்ரிவால். தற்போதைய டெல்லி முதலமைச்சர். அரசியல் கட்சி துவக்குவதற்கு அரசியலிலேயே ஊறி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசு அதிகாரியாக இருந்தால்கூட கட்சி ஆரம்பித்து வெற்றி பெற இயலும் என்று உலகுக்கு காண்பித்தவர். தேவை நிறைய சமூக ஆர்வம் மட்டுமே என்று நிருபித்தவர்.

ஆம் ஆத்மி கட்சியைப் பற்றி பார்ப்பதற்கு முன் அதன் நிறுவனரான அரவிந்த் கெஜ்ரிவாலின் பின்னணியைப் பார்த்துவிடுவோம்.

குடும்பம் – படிப்பு

அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தது ஹரியானா மாநிலத்தில் சிவானி என்ற சிறு நகரத்தில். அப்பா என்ஜினியர். அம்மா வீட்டு நிர்வாகி. ஒரு தம்பி, ஒரு தங்கை. அளவான குடும்பம். போதுமான வசதி. அப்பா பல நகரங்களில் பணி புரிந்துவிட்டு ஹிஸ்ஸார் நகரில் நிலை கொண்டார். இந்தப் பின்னணியில்தான் அரவிந்த் கெஜ்ரிவாலின் பள்ளிப் பருவம் கழிந்தது. படிப்பில் சுட்டி. அதனால் அவரால் ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று ஐஐடி காராக்பூரில் மெக்கானிகல் என்ஜினியரிங் படித்தார்.

படிக்கும் போது அவரிடமிருந்து அரசியல் ஆர்வமோ போரட்டக் குணமோ வெளிப்பட்டதில்லை என்கிறார்கள் அவருடன் ஐஐடியில் படித்தவர்கள்.

ஐஐடி படிப்பு முடித்ததும் அவருடைய நண்பர்கள் பலர் அமெரிக்காவுக்கு பறக்க அரவிந்த் கெஜ்ரிவால் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் ஜம்ஷெட்புர் தொழிற்சாலையில் பணிக்கு சேர்கிறார். அப்போது அவருக்கு வயது 21. இங்குதான் அவருடைய வாழ்க்கை மாறத் துவங்குகிறது. அடித் தட்டு மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வருகிறது. தன்னை சமூக நல பிரிவுக்கு மாற்றுமாறு நிறுவனத்திடம் கேட்க டாடா நிறுவனம் மறுக்கிறது.

தனியார் நிறுவனத்தில் பணி புரிவதைவிட அரசுத் துறையில் வேலை கிடைத்தால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கருதிய அரவிந்த் கெஜ்ரிவால் ஐஏஎஸ் தேர்வுகளுக்கு படிக்கலாம் என்று முடிவு செய்கிறார். டாடா நிறுவனப் பணியை விடுகிறார். துணிச்சலான முடிவுதான். அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கை முழுவதும் இப்படி பல துணிச்சலான முடிவுகள் இருக்கின்றன.

அன்னை தெரசா சந்திப்பு

மனம் இப்படி அலைபாய்ந்துக் கொண்டிருக்கும் சூழலில் கொல்கத்தாவில் அன்னை தெரசாவை சந்திக்கிறார். கொல்கத்தா ஆதரவற்றோர் இல்லத்தில் பணிபுரிய விருப்பம் என்று கெஜ்ரிவால் கூற, அன்னை தெரசா அவரை ஆசிரமத்தில் தன்னார்வ தொண்டராக சேர்த்துக் கொள்கிறார்.

ஐஐடியில் படித்துவிட்டு அன்னை தெரசா இல்லத்தில் ஆதரவற்றோருக்கான பணி. அங்கு ஒருமுறை அன்னை தெரசா ஊழியர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, ‘ இங்கே வரும் ஆதரவற்றோருக்கு ஏதாவது தொழில் கற்றுக் கொடுத்தால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே பார்த்துக் கொள்வார்களே, இங்கே இல்லத்திலேயே தங்க வைக்க வேண்டிய அவசியம் இல்லையே? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அன்னை தெரசா, ‘ அது அரசாங்கம் செய்ய வேண்டியது. என்னுடைய வேலை இங்கு வரும் ஆதரவற்றவர்களுக்கு ஆறுதல் தருவது’ என்று பதிலளித்தார். இந்த பதிலும் தன் வாழ்க்கையை மாற்றியது என்று குறிப்பிடுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். அரசு வேலைக்கான ஆர்வம் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அதிகரித்தது.

ராமகிருஷ்ணா மடங்களில் தொண்டாற்றிய அனுபவமும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உண்டு. சமூக சேவையில் ஈடுபட்டுக் கொண்டே சிவில் சர்வீஸ் தேர்வுகளையும் எழுதிக் கொண்டிருந்தார். அந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று அவருக்கு ஐஆர்எஸ் பணி கிடைத்தது. முதல் வேலை வருமானவரித் துறையில். அவருடைய வாழ்க்கை வேகமெடுக்கத் துவங்கியது.

ஐஆர்எஸ் பணி

வருமானவரித் துறையில் வேலைப் பார்த்துக் கொண்டே சமூகப் பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் அரசுப் பணி அலுப்புத் தர நீண்ட விடுமுறை எடுத்தார். மீண்டும் பணியில் சேர்ந்தார். அவரது விடுமுறை கால ஊதியம் குறித்து சர்ச்சைகள் எழுந்தன. 11 வருடங்கள் அரசுப் பணியில் இருந்த கெஜ்ரிவால் 2006ல் ஐஆர்எஸ் வேலையை ராஜினாமா செய்தார். ஐஐடி வேலையை உதறியவர் இப்போது ஐஆர்எஸ் வேலையையும் கை கழுவுகிறார்.


பொதுப் பிரச்சினைகளுக்காக போராடும் முழு நேரப் போராட்டக்காரராக மாறினார் கெஜ்ரிவால். இந்தக் காலக் கட்டத்தில அவருக்கு திருமணமும் முடிந்திருந்தது. குடிமைப் பணி பயிற்சியின் போது தன்னுடன் பயிற்சி பெற்ற சுனிதாவைக் காதல் திருமணம் செய்திருந்தார். அவர் வருமானவரித் துறை பணியில் இருந்தார். கணவரின் அத்தனை முயற்சிகளுக்கு துணையாகவும் நின்றார்.

தன்னார்வ அமைப்புகள்

அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் வளர்ச்சிக்கு அவர் நடத்திய பல தன்னார்வ அமைப்பு அனுபவங்கள் உதவின.

அரசு பணியில் இருக்கும்போதே பரிவர்த்தன் என்ற அமைப்பை அவரும் அவரது நண்பர் மணிஷ் சிசோடியா போன்றவர்களும் இணைந்து புது டெல்லியில் ஆரம்பித்தார்கள். அடிதட்டு மக்களின் அரசுத் துறை சார்ந்த பிரச்சினைகளைக் களைவதுதான் இந்த அமைப்பின் நோக்கம். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. லஞ்சத்தாலும் ஊழலாலும் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த அமைப்புக்கு தெரிவித்தால் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடி தீர்வு தேடித் தருவார்கள். இந்த அமைப்பைத் துவங்குவதற்கு நண்பர்களும் உறவினர்களும் பண உதவி செய்தார்கள்.

தகவல் அறியும் உரிமை சட்டத்துக்காக அரவிந்த் கெஜ்ரிவாலும் அவரது தோழர்களும் முன்னெடுத்த போராட்டங்களும் பலரின் கவனத்தைக் கவர்ந்தன. 2001ல் டெல்லி மாநில அரசு தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அந்தச் சட்டத்தை பயன்படுத்தி அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்களை வெளிப்படுத்த துவங்கினார் அரவிந்த் கெஜ்ரிவால். கபிர் என்ற ஒரு அமைப்பையும் இவர்கள் தொடங்கி நடத்தி வந்தார்கள்.


2006ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மகசேசே விருது கிடைத்தது. பொது நலனுக்காக தன்னலம் இல்லாமல் செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் முக்கியமான சர்வதேச விருது. இந்து விருதுடன் வழங்கப்பட்ட தொகையைக் கொண்டு மற்றொரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கினார் கெஜ்ரிவால்.

அன்னா ஹசாரே

இந்த இடத்தில் அன்னா ஹாசாரே என்ற பெரியவரைப் பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அவர்தான் அரவிந்த் கெஜ்ரிவாலை அடுத்தக் கட்டமான அரசியலுக்கு நகர்த்தியவர்.

அன்னா ஹசாரே. ஊழலுக்கு எதிராக போராடியவர்களில் முக்கியமானவர். லோக்பால் சட்டத்துக்காக தொடர் போராட்டங்களை நடத்தியவர். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைய ஒரு காரணமாக இருந்தவர். 2011 ஆண்டில் புது டெல்லியில் அவர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்கள் இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்த, ஊழலுக்கு எதிராக வந்த இந்தியன் தாத்தா என்று வர்ணிக்கப்பட்டார். ஏனென்றால் அந்தப் போராட்டத்தை துவக்கும்போது அவருக்கு வயது 74.

ஹசாரே பிறந்தது மகராஷ்டிராவில். முழுப் பெயர் கிசான் பாபுராவ் ஹசாரே. வீட்டில் மூத்த மகனாக பிறந்ததினால் மூத்த என்பதை குறிக்கும் அன்னா என்ற அடைமொழி அவரது பெயருடன் ஒட்டிக் கொண்டது.

15 வருடங்கள் இந்திய ராணுவத்தில் ராணுவத்தில் பணியாற்றி, பிறகு தனது சொந்த கிராமமான ரலேகன் சித்தி திரும்பிய ஹசாரே, அந்த கிராத்தை ஒரு முன் மாதிரி கிராமமாக மாற்ற முயற்சித்தார். மிகவும் வறண்ட, ஏழ்மை நிறைந்த கிராமம் அது. அங்கே மதுவையும் புகையிலையையும் ஊர் மக்களின் உதவியுடன் தடை செய்தார். கிராமக் கோயிலை சீரமைத்து அங்கு மது, புகையிலைக்கு எதிராக ஊர் மக்களை உறுதி ஏற்க செய்தார். உள்ளூர் குளத்தை சீரமைத்தார். பள்ளி, வங்கி உருவாக நடவடிக்கை எடுத்தார். ஒரு மசாலா திரைப்படத்தில் நாயகன் ஒரே பாடலில் மக்களை மாற்றுவது போன்று ஹசாரே அந்தக் கிராமத்தை மாற்றினார். ஆனால் சினிமாவைப் போல் ஒரே பாடலில் இந்த மாற்றங்கள் நடக்கவில்லை. பத்தாண்டுகளில் நடந்தது.

அரசுத் துறைகளில் இருக்கும் ஊழலும் லஞ்சமும்தான் பல திட்டங்கள் மக்களை அடையாமல் இருக்க காரணம் என்று இந்தக் கிராமச் சேவையின் போது கண்டுக் கொண்டார் ஹசாரே. லஞ்சம், ஊழலுக்கு எதிராக தனது போராட்டங்களை முன்னெடுக்கத் துவங்கினார்.

1991ல் ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை துவக்கினார். மகராஷ்டிராவில் அரசு அலுவலங்களில் நடக்கும் ஊழல்களை எதித்து போராட்டங்களை நடத்த துவங்கினார். வழக்குகளைத் தொடுத்தார். இவரது போராட்டங்கள் மக்களுக்கு நல்ல செய்தியையும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கு கெட்ட செய்தியையும் கொடுத்தது.

அரசுத் துறையின் தகவல்கள் மக்களுக்கு தெரியாததினால்தான் மக்கள் இருட்டிலேயே இருக்கிறார்கள். தகவல்களை அறியும் உரிமை அவர்களுக்கு இருந்தால் இன்னும் விழிப்புணர்வு பெறுவார்கள் என்று கருதிய ஹசாரே அடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கான போராட்டங்களை முன்னெடுக்கத் துவங்கினார். அதற்கடுத்த போராட்டம் ஊழல் செய்யும் பெரிய தலைகளைத் தண்டிக்க வகை செய்யும் ஜன் லோக்பால் சட்டத்துக்கான போராட்டம். இந்தப் போராட்டங்களின் நீட்சீதான் டெல்லியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம்.

இந்தப் புள்ளியில்தான் அன்னா ஹசாரேயும் அரவிந்த் கெஜ்ரிவாலும் இணைகிறார்கள்.

ஜன் லோக்பால் போராட்டம்

2011ஆம் வருடம் இந்திய அரசியலில் முக்கியமான வருடம். மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பல ஊழல் புகார்களில் சிக்கியிருந்தது. 2ஜி, நிலக்கரி, காமன்வெல்த் போட்டி என எந்தப் பக்கம் திரும்பினாலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள். 2010ல் நடந்த காமன்வெல்த் போட்டிகளின் போது எழுந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் உலக நாடுகளில் இந்தியாவின் நன்மதிப்பை குறைத்தன. மக்களின் கோபம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

இந்தியாவில் ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால் ஊழலில் ஈடுபடும் மிக உயர் பொறுப்பிலிருப்பவர்களை தண்டிப்பதுதான். ஆனால் அவர்களை தண்டிக்க இந்தியாவில் உருப்படியான அமைப்பு இல்லை. அதனால் ஜன்லோக்பால் அமைப்பை கொண்டு வர வேண்டும் என்று அன்னா ஹசாரே விரும்பினார். பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என அனைத்து அதி முக்கியமாவவர்களையும் விசாரிக்க அதிகாரம் கொண்ட அமைப்பாக இந்த அமைப்பு இருக்கும். அதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கினார்.

தொடர் ஊழல் செய்திகளினால் அதிர்ந்து போயிருந்த மக்கள் அன்னா ஹசாரே போராட்டத்துக்கு பெருமளவில் ஆதரவு தந்தார்கள். மக்கள் மட்டுமல்ல, பல பிரபலங்கள் அன்னா ஹசாரேக்கு ஆதரவு கரம் நீட்டினார்கள். இன்று புதுச்சேரி ஆளுநராக இருக்கும் கிரண்பேடி அன்னா ஹசாரேயுடன் இணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர். தமிழகத்தின் ஜல்லிக் கட்டுப் போராட்டம் போல் இந்தியா முழுவதும் திரும்பிப் பார்த்த போராட்டமாக அது அமைந்தது.

இந்த போராட்டத்தில் அன்னா ஹசாரேயுடன் இணைந்து போராடியவர் அரவிந்த் கெஜ்ரிவால். அவருடன் சந்தோஷ் ஹெக்டே, சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன் போன்ற சமூக ஆர்வம் மிக்க பிரபலங்களும் இணைந்தார்கள். அன்னா ஹசாரேயின் முதல் உண்ணாவிரதப் போராட்டம் 98 மணி நேரம் நீடித்தது. கோரிக்கைகளை ஏற்பதாக மத்திய அரசு அறிவித்த பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது.

ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த லோக்பால் மசோதா வலுவில்லாமல் இருக்கிறது என்று மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார் ஹசாரே. இந்த முறையும் மக்களிடமிருந்து பிரமாண்ட ஆதரவு. ஆகஸ்ட் 16-ல் திஹார் ஜெயிலில் துவங்கிய உண்ணாவிரதப் போராட்டம் 28 ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் நிறைவுற்றது. லோக்பால் மசோதா உருவானது. கூடவே அரவிந்த் கெஜ்ரிவால் என்ற அரசியல்வாதியும் உருவானார்.

அன்னா ஹசாரேயின் போராட்டத்துக்கு கிடைத்த மக்கள் ஆதரவு கெஜ்ரிவாலை கட்சி ஆரம்பித்து தேர்தல் அரசியலுக்கு வர தூண்டியது. ஆனால் அன்னா ஹசாரே தேர்தல் அரசியலை ஏற்கவில்லை. சமரசங்கள் நிறைந்த தேர்தல் அரசியல் போராட்டங்களின் வீச்சை குறைத்துவிடும் என்று கருதினார். அரசியல் அதிகாரம் இல்லாமல் போரட்ட இலக்குகளை சாதிக்க முடியாது என்பது கெஜ்ரிவாலின் கருத்து. இருவரும் பிரிந்தனர்.

ஆம் ஆத்மி கட்சி

ஊழலுக்கு எதிரான மக்களின் மனநிலையை பயன்படுத்திக் கொண்டு ஊழலுக்கு எதிரான ஒரு அரசியல் கட்சியை உருவாக்க வேண்டும் என்பதுதான் அரவிந்த் கெஜ்ரிவாலின் எண்ணம். அவருடன் இருந்த நண்பர்களும் ஆதரவு தெரிவிக்க 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஆம் ஆத்மி கட்சி உருவானது. ஆம் ஆத்மி என்றால் சாமனிய மனிதன் என்று அர்த்தம்.

ஊழல் எதிர்ப்பு, தேர்தல் நிதியில் வெளிப்படைத் தன்மை, சமூக நீதி, மதச் சார்பின்மை, விஐபி கலாச்சாரம் ஒழிப்பு இவையெல்லாம் ஆம் ஆத்மி கட்சியின் சில முக்கிய கொள்கைகள்.

சாமானியர்களுக்காக துவக்கப்பட்ட கட்சி அடுத்த வருடமே டெல்லி மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தது. அனால் அதிக நாட்கள் நீடிக்காத அந்த ஆட்சி மீண்டும் மிகப் பெரிய வெற்றியுடன் 2015 டெல்லி மாநில ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.

ஆம் ஆத்மியின் தேர்தல் வரலாறு

கட்சி ஆரம்பித்து ஒரு வருடத்துக்குள்ளாகவே டெல்லி சட்டபேரவைக்கு தேர்தல் வந்தது.காங்கிரஸ், பாஜக என்ற இரண்டு வலிமையான தேசியக் கட்சிகளுடன் புத்தம் புதிய கட்சியான ஆம் ஆத்மி போட்டியிட்டது. மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி 28 இடங்களில் வெற்றிப் பெற்றது. பாஜக 31 இடங்களிலும் காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றிப் பெற்றது. யாருக்கும் பெரும்பான்மை இல்லை. பாஜக ஆட்சியமைக்க மறுத்த நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது ஆம் ஆத்மி. ஆனால் ஆட்சி 49 நாட்கள்தாம் நீடித்தது. சட்டப் பேரவையில் ஆம் ஆத்மி கொண்டு வந்த ஜன லோக்பால் மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க மறுக்க ஆட்சி கவிழ்ந்தது.

2015ல் மீண்டும் டெல்லிப் சட்டப் பேரவைக்குத் தேர்தல். இந்த முறை யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் ஆம் ஆத்மி மிகப் பெரிய வெற்றி பெற்றது. 70 தொகுதிகளில் 67 தொகுதிகளைப் பிடித்தது. ஆட்சி அமைத்தது.

இதற்கிடையே 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆம் ஆத்மி போட்டியிட்டது. டெல்லியில் மட்டுமில்லாமல் நாட்டின் பல பகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். 3.37 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்று பிரதமரானார். தேர்தல் முடிவில் நாடு முழுவதிலும் மொத்தமாக 2 சதவீத வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி பெற்றது. பஞ்சாப் மாநிலத்திலிருந்து 4 ஆம் ஆத்மி வேட்பாளர்கள் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். டெல்லி சட்டபேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மியால் நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலவில்லை. காரணம் 2014 தேர்தலில் வீசிய மோடி அலை.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதிலும் 40 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. ஆனால் பஞ்சாபில் சங்குரூர் தொகுதியில் மட்டும் வெற்றிப் பெற்றது.

ஆம் ஆத்மி சர்ச்சைகள்

கட்சி துவங்கி 10 வருடங்கள்தாம் கடந்திருக்கின்றன. ஆனால் அதற்குள் பல சர்ச்சைகள்.

முதல் 49 நாள் ஆட்சியின் போது காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி அமைப்பதா என்ற விமர்சனங்கள் ஆம் ஆத்மி கட்சியின் மீது எழுந்தது. காங்கிரஸ் கட்சியின் ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுத்துதானே ஆட்சிக்கு வந்தீர்கள் என்ற் கேள்வி எழுப்பப்பட்டது. நாங்கள் சும்மா ஆதரவு கேட்கவில்லை 18 நிபந்தனைகளுடன் தான் ஆதரவைப் பெற்றிருக்கிறோம் என்று பதில் சொன்னார் கெஜ்ரிவால்.

வித்தியாசமான கட்சி என்று ஆரம்பிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சிக்குள்ளும் கோஷ்டி பூசல்கள் உண்டு. ‘ ஆம் ஆத்மியில் தனி நபர் துதி பாடுவது அதிகரித்து விட்டது’ என்று கட்சியில் நிறுவனர்களின் ஒருவரான பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்து கட்சிக்குள் சிக்கலை உண்டு பண்ணியது. அவர் அரவிந்த் கெஜ்ரிவாலைதான் குறிப்பிடுகிறார் என்பது எல்லோருக்கும் புரிந்தது. 2015 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியிலிருந்து பிரசாந்த் பூஷனும் யோகேந்திர யாதவ்வும் நீக்கப்பட்டர்கள்.

ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த வெளிநாட்டு நிதி குறித்த சர்ச்சைகள் இன்று தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிதி குறித்து விளக்கம் தருமாறு தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

ஆம் ஆத்மியின் எதிர்காலம்

சர்ச்சைகள் இருந்தாலும் வழக்கமான கட்சிகளிலிருந்து ஆம் ஆத்மி வித்தியாசமான கட்சிதான். ஊழல் ஒழிப்பை முன் வைத்து வளர்ந்த கட்சி. மாற்று அரசியலை முன் வைத்து முன்னேறிய கட்சி. இந்தியா முழுவதிலும் செல்வாக்கு பெற வேண்டும் என்பதுதான் இந்தக் கட்சியின் நோக்கம். இன்று பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

ஆனால் நகர்புற மக்களின் மனதைக் கவர்ந்த அளவு கிராமப் புற மக்களின் கவனத்தை ஆம் ஆத்மி ஈர்க்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. மக்கள் தொகை குறைந்த. நகர்புற வாக்களர்கள் நிறைந்த டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மியால் இந்தியா முழுவதிலும் பரவ முடியுமா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...