விக்ரம் 2. திரை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம். கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம். படம் குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்கள் கமலும் லோகேஷும்.
”படத்துக்கு இதுவரை ஆதரவு கொடுத்ததற்கும் இனி கொடுக்கப் போகும் ஆதரவுக்காகவும்தான் இந்த சந்திப்பு…தமிழுக்கு முதல் மரியாதை தந்துவிட்டு இதே போன்று இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு செய்தியாளர்களையும் சந்திக்கப் போகிறேன்” என்று ஆரம்பித்தவர் ஒரு கண்டிஷனும் போட்டார்.
“இந்த சந்திப்பு விகரம் 2 படத்தை பற்றி மட்டுமே. அரசியல் கேள்விகளுக்கு இப்படியே இரண்டு சாலைகள் தள்ளி இருக்கும் ஆழ்வார்பேட்டை ஆபிசுக்கு வாங்க’ என்றார் சிரித்துக் கொண்டே.
முதல் கேள்வியே அதிரடியாக இருந்தது.
’ஜூன் 3 கலைஞர் கருணாநிதி பிறந்த நாள். அன்றுதான் விக்ரம் 2 ரீலீஸ் செய்கிறீர்கள். ஏதாவது காரணம் உண்டா?”
“ கலைஞரைப் பத்தி சொல்வதற்கு ஆயிரம் பக்கங்கள் போதாது. திட்டமிடல் எதுவும் இல்லை. மே 29ல் வெளியிடலாம் என்று நினைத்தோம். ஆனால் சில வேலகள் முடியாமல் இருந்ததால் ஜூன் 3க்கு தள்ளி வைக்கப்பட்டது. இது எதேச்சையாக நடந்த விஷயம்” என்று சொல்லிய கமல், கலைஞரிடம் ஏற்பட்ட அனுபவங்களையும் கூறினார். “கலைஞரிடம் என் கதைகளை சொல்லியிருக்கிறேன். தசவாதாரம் கதையை முழுமையாக கேட்டு நல்லாருக்கு என்று சொன்னார். கதையை கேட்டுட்டு மாற்றங்கள்கூட சொல்வார். ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கு ஏன் நிறைய காலம் எடுக்குதுனு கேட்டார். நானே எழுதுறேன் என்றேன். உடனே, ஏன் நீ எழுதுறனு கேட்டார். எழுத தெரிஞ்சவங்க ரொம்ப கம்மி என்றேன். எழுதத் தெரிஞ்சவனெல்லாம் சினிமாவுக்கு எழுத முடியாது, சினிமாவுக்குனு எழுத தெரியனும் என்றார் அவர். அது உண்மை. சினிமாவுக்கு எழுதுவது தனி கலை. அதில் கலைஞர் முன்னோடியானவர்” என்று கலைஞர் புகழ் பாடினார் கமல்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
”அன்று விக்ரமை இயக்கிய ராஜேசேகருக்கு இருந்த நம்பிக்கை இன்று லோகேஷுக்கும் இருக்கிறது. அன்றைய விக்ரம் எப்படி இன்று வரை முன்னுதாரணமாக இருக்கிறதோ, அதே போன்று இந்த விக்ரம்2வும் இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிறந்த முன்னுதாரண படமாக இருக்கும் என்று இளம் இயக்குநர்கள் சொன்னால் அதுதான் லோகேஷுக்கு கிடைக்கும் பெரிய சம்பளம். அந்த சம்பளத்தை என்னால் கொடுக்க இயலாது. விக்ரம் 3 எடுத்தாலும் அதற்கும் லோகேஷ் கனகராஜ்தான் இயக்குநர். இந்தியன் 2வும் நடக்கும் அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்துக் கொண்டிருக்கிறது”
திடீரென்று புதிய கலைஞர்களுடம் விக்ரம் 2ல் பயணித்திருக்கிறீர்கள். என்ன காரணம்? இந்த அனுபவம் எப்படியிருக்கிறது?
“இது புதிதல்ல, தொடர்ந்து இப்படிதான் இருக்கிறேன். 16 வயதினிலே எடுக்கும்போது அந்த டைரக்டருக்கு லோகேஷ் மாதிரிதான் அவருக்கும் வயது மிக குறைவு. பாலுமகேந்திரா கோகிலா எடுக்கும்போது அவர் மிக இளமையானவர். பரதனும் அப்படிதான்”
அன்றைய விக்ரம்க்கும் இன்றைய விக்ரம்க்கும் 36 வருட இடைவெளி இருக்கு. இரண்டாம் பாகத்துக்கு ஏன் இத்தனை இடைவெளி?
“விக்ரம்ன்ற பேரைக் கேட்டது இயக்குநர் லோகேஷ். அதை அந்த விக்ரமின் இரண்டாம் பாகம்னு நீங்கள் நினைப்பது உங்கள் நம்பிக்கை. அந்த விக்ரம் எடுக்கும்போது ஒரு சின்ன லைன் ஒண்ணு யோசிச்சிருந்தேன். அது ரொம்ப அட்வான்சாக இருக்கிறதுனு அப்போ சொன்னாங்க. சுஜாதா ரொம்ப ரசிச்சாரு. ஆனா ராஜசேகர் இப்ப வேண்டாம்னு சொன்னார். அதனால சுஜாதாகிட்ட வேற கதையைக் கேட்டோம். அப்ப விட்டுப் போன கதையை லோகேஷ்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்த போது தன்னோட கதையை விட்டுட்டு இதை கையில எடுத்துக்கிட்டாரு”
விக்ரம் 2 பட விளம்பரத்துல புலி, சிங்கம், கரடினு படங்கள் போட்டுட்டு மானும் வாழனும்னு சொல்லியிருக்கிங்க. விக்ரம் 2 நாட்டுல நடக்கிற கதை. நாடு காடு மாதிரி இருக்குனு குறியீடு வச்சிருக்கிங்களா?
இதற்கு லோகேஷ் பதிலளித்தார்.”சார் சொன்ன காடு க்ரைம் காடு.” என்று அதன் குறியீட்டை விளக்கினார்.
பத்தல பத்தல் பாட்டுல ஒன்றியம்னு குறிப்பிட்டிருக்கிங்களே? அதுக்கு அடுத்த வரியில திருடன் கையில சாவினு சொல்லியிருக்கிங்க. யாரு திருடன்?
“படத்தப் பாருங்க புரியும். அது படத்துக்கான எழுதுன பாட்டு. தமிழில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் சொல்லலாம். இதுவும் ஒன்றியம்தான் பத்திரிகையாளர்கள் எல்லோரும் கூடியிருக்கும் ஒன்றியம். இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வைத்துள்ள சங்கம்கூட ஒரு ஒன்றியம் தான். எந்த ஒன்றியத்துல தவறுகள் நடந்தாலும் படத்துக்கு பிரச்சினைகள் வரும். பாதிப்புகள் வரும். படம் வெளிவந்த பிறகு, இதற்கான அர்த்தங்கள் தெரியும்”
விஜய் சேதுபதி, சூர்யா, ஃபகத் ஃபாசில் போன்றவர்கள் உங்களை குருநாதராக பார்க்கிறோம் என்கிறார்களே?
“இவர்கள் என் ரசிகர்கள்தாம். குருநாதர் என்பது நான் பாலசந்தரிடம் வைத்திருந்தது. நான் பாலசந்தரிடம் பணியாற்றியபோது அவர் என்னிடம் எல்லா வேலைகளையும் வாங்குவார். கிளாப் அடிப்பேன். லோகேஷன் போய் பார்க்க சொல்லுவார். மழை காட்சியில் வாளியில் தண்ணீர் பிடித்து மேலிருந்து ஊற்றுவேன். அதுதான் குருபக்தி. இவர்கள் எல்லோரும் என் ரசிகர்கள். என்னை ரசித்துப் பார்ப்பவர்கள்” என்றார் கமல்.