ரஜினி காந்தின் அடுத்த படமான ‘தலைவர் 169’ பற்றி கோலிவுட்டில் அடுத்தடுத்த பேச்சுகள் உலா வரத் தொடங்கியுள்ளன.
’கோலமாவு கோகிலா’, ’டாக்டர்’ ’பீஸ்ட்’ படங்களின் இயக்குநர் நெல்சன், இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான ப்ரீப்ரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
கதை, திரைக்கதை வேலைகள் ஒருபக்கமும், நட்சத்திரத் தேர்வு மற்றொரு பக்கமும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இப்படத்தின் கதை திரைக்கதை சமாச்சாரங்களில் இயக்குநர் நெல்சனுக்கு ஆதரவுக்கரம் நீட்ட ரஜினியை வைத்து ஹிட் படங்களைக் கொடுத்த கே.எஸ். ரவிக்குமாரும் இப்பட குழுவில் இணைகிறாராம்.
சமீபத்திய பீஸ்ட் படம் மீதான விமர்சனங்களால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள்.
இப்படத்தை பான் – இந்தியா படமாக வெளியிடும் எண்ணமிருப்பதால் அதற்கேற்ற வகையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்களை நடிக்க வைக்க இருக்கிறார்களாம்.
ரஜினிக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று ஒரு பெரிய டிஸ்கஷன் போய் கொண்டிருந்தது. ஆலியா பட், காத்ரீன கைஃப், திபீகா படுகோன் என பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களின் பெயர்கள் முதலில் அடிப்பட்டன. ஆனால் இவர்கள் எல்லோருக்கும் தற்போதுதான் திருமணம் நடந்து முடிந்திருப்பதால், ஷூட்டிங்கில் கால்ஷீட் பிரச்னை வருமோ என்று யோசிக்கிறார்களாம். இடையில் இவர்கள் குழந்தைப் பெற்று கொண்டால் பிறகு ஷூட்டிங்கை பாதியில் விடவேண்டியிருக்கும் என்று யோசித்திருக்கிறார்கள்.
இதனால் ரஜினியின் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயைக் கேட்கலாம் என்று முடிவாகி இருக்கிறதாம்.
’எந்திரன்’ படத்தில் ரஜினிக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்திருப்பதால், அந்த மேஜிக்கை இந்த முறையும் பிரம்மாண்டமாக நிகழ்த்திவிடலாம் என இயக்குநர் தரப்பு களமிறங்கி இருக்கிறதாம்.
அநேகமாக வெகுவிரைவில் ரஜினியின் ஜோடி ஐஸ்வர்யா ராய் என்ற தகவல் ஆகஸ்ட் மாதத்தில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பாக்ஸ் ஆபிஸில் கேஜிஎஃப்-2 இரண்டாமிடம்!
இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையைத் தக்க வைத்திருக்கிறது ‘பாகுபலி -2’
பாகுபலியில் தொடங்கிய தென்னிந்திய படங்களின் வசூல் வேட்டை உலகளாவிய மார்க்கெட்டை வைத்திருக்கும் ஹிந்திப்படங்களுக்கு இணையாக கடும் போட்டியைக் கொடுத்து வருகின்றன.
அமீர்கானின் ‘டங்கல்’ வசூலைக் குவித்து புதிய சாதனையைப் படைத்தது. ஆனால் அடுத்து வந்த ‘பாகுபலி -1’ வசூல் வேட்டையில் தென்னிந்தியப்படங்களாலும் சாதிக்க முடியுமென்ற கருத்தை உருவாக்கியது.
ஆனால் அடுத்து வந்த ‘பாகுபலி -2’ இந்திய பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி [நெட் கலெக்ஷன்] என்ற இலக்கை எட்டியது. இதனால் அதிகம் கலெக்ஷன் ஆன படம் என்ற பெருமையை ‘பாகுபலி -2’ பெற்றது.
இந்நிலையில் கேஜிஎஃப்-2 வெளியானது. இப்படம் பாகுபலியின் சாதனையை முறியடிக்குமா என ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் ஆவலோடு எதிர்பார்த்தது. ஆனால் கேஜிஎஃப்-2 படத்தின் வசூல் வேட்டை ஏறக்குறைய முடிவை நெருங்கியிருப்பதாக கூறுகிறார்கள்.
வட இந்தியாவில் இப்படம் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் ஓடினாலும் வசூலில் பெரிய இலக்கத்தைத் தொடவில்லையாம். இந்தியாவில் வெளியான அனைத்து மொழிகளையும் சேர்த்து இதுவரையில் நெட் கலெஷனாக 790 கோடியை கேஜிஎஃப்-2 வசூலித்திருப்பதாகவும் பேச்சு அடிப்படுகிறது.
இதனால் இந்தியாவில் இதுவரையில் அதிகம் வசூலித்தப்படங்களின் டாப்-10 பட்டியலில், பாகுபலி-2 க்கு பிறகு கேஜிஎஃப்-2 இடம்பெற்றிருக்கிறது. பாகுபலி-2 படத்தை இயக்கிய ராஜமெளலியின் ‘ஆர் ஆர் ஆர்’ படம் 750 கோடி வசூலைக் குவித்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.