வழக்கம் போல் ஒரு பாரில் மூன்று பீர்கள் உடன் ஆரம்பமாகிறது வெங்கட் பிரபுவின் ‘மன்மதலீலை.’
2010 திருமணத்திற்கு முன்பு, 2020 திருமணத்திற்கு பின்பு – என அசோக் செல்வன் வாழ்க்கையின் இரு காலகட்டத்தில் நடக்கும் ஒரே மாதிரியான ‘அடல்ட்’ சம்பவங்களும் அந்த லீலைகளால் உருவாகும் ரகளைகளும்தான் இந்த ‘மன்மதலீலை’.
படத்தின் முதல் பாதியில் அசோக் செல்வன் சம்யுக்தாவையும் ரியா சுமனையும் ‘ஒன் நைட் ஸ்டாண்ட்’ சமாச்சாரத்தில் மடக்குவதற்காக பேசும் பேச்சும், அதற்கு வெங்கட் பிரபு ஆங்காங்கே வைத்திருக்கும் ‘டச்’சும்தான் இருக்கிறது. சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் இருவருக்கும் அசோக் செல்வன் கொடுக்கும் இரண்டு ‘அழுத்தமான’ ப்ரெஞ்ச் கிஸ்கள்தான் டைட்டிலுக்கேற்ற ஹைலைட்; மற்றபடி வேறெதுவுமில்லை.
இடைவேளைக்குப் பிறகுதான் ரகளை ஆரம்பமாகிறது. ஒன் நைட் ஸ்டாண்ட் நினைத்தது மாதிரியே சியர்ஸில் தொடங்கி கச்சிதமாக முடிய, ஒரு பக்கம் சம்யுக்தாவின் கணவர் ஜெயப்பிரகாஷ் வர, மறுபக்கம் அசோக் செல்வனின் மனைவி ஸ்மிர்தி வெங்கட் வர, அடுத்து என்ன நடக்கிறது என்பதை த்ரில்லர் பாணியில் காட்டியிருக்கிறார் வெங்கட் பிரபு.
சம்யுக்தா – அசோக் செல்வன், ரியா சுமன் – அசோக் செல்வன் என இரு காலகட்டத்தில் நடப்பதை ஒரு சீக்வல் ஆர்டரில் அடுத்தடுத்து காட்டும் முயற்சியில் எடிட்டர் வெங்கட் ராஜனின் கட்டிங் ஸ்டைல் கவர்கிறது. ஆனால், ஒரே மாதிரியான சம்பவங்கள் இரண்டு முறை நடப்பதாகக் காட்டுவது கொஞ்ச நேரத்தில் சலிப்புத் தட்டுகிறது. தமிழ் அழகனின் ஒளிப்பதிவில் கேமரா இரு ஹீரோயின்களையும் ‘முழுமையாக’ காட்டுகிறது. அதற்கேற்றவாறு பிரேம்ஜியின் பின்னணி இசையும் கைகொடுக்கிறது.
படம் முழுக்க அசோக் செல்வன் ‘களத்தில்’ ஆடியிருக்கிறார். நடிப்பில் ஸ்மிர்தி வெங்கட்டும் ஜெயப்பிரகாஷூம் கேஷூவல். சம்யுக்தா ஹெக்டேவும் ரியா சுமனும் சென்ஸ்ஷுவல்.
சம்யுக்தாவுடன் இருக்கும் போது ஜெயப்பிரகாஷ் வந்துவிட, ‘உனக்கு காதலனா இருக்கலாம்னு நினைச்சேன், இப்படி கள்ளக்காதலன் ஆக்கிட்டீயே’ என்று அசோக் செல்வன் சொல்லும் காட்சியிலும், ஜெயப்பிரகாஷ் சம்யுக்தா பற்றி சொல்லும் போது, ‘இவளை உஷார் பண்ணலாம்னு நினைச்சா, அவ தான் என்னை உஷார் பண்ணிட்டா’ என்று அசோக் செல்வன் கமெண்ட் அடிக்கும் போதும் திரையரங்கில் கைத்தட்டல், சிரிப்பு சத்தம் கேட்கிறது.
சினிமாவில் கதாநாயகன் நல்லவராக, வல்லவராகதான் இருக்கவேண்டுமென்ற க்ளிஷேவை மீண்டும் உடைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. திரைக்கதையில் ‘VP’ ஒரு ப்ராண்ட் என்பதை மற்றொரு முறை நிரூபித்திருக்கிறார்.
ஒரே மாதிரியாக, கண்ணாடியின் பிரதிபலிப்பைப் போல இருமுறை காட்சிகள் க்ளைமாக்ஸ் வரை தொடர்வது ஓவர் டோஸ். இதனால், வெங்கட் பிரபுவின் ‘QUICKIE’ என்று இரண்டு மணி நேரத்தில் கதையைச் சொன்னாலும் சுவாரஸ்யம் மிஸ்ஸிங்.
ஆகமொத்தம் படம் பார்த்த ‘ஹேங் ஒவர்’ திரையரங்கிற்கு வெளியே வந்தபிறகு இல்லை. வெங்கட் பிரபு பாணியில் சொல்வதென்றால் சரக்கு ஒரிஜினல்தான்; ஆனால், மிக்ஸிங், சைட் டிஷ் சமாச்சாரங்கள் சரியில்லை’.