யார் பாடியது என்று தெரியாமலேயே ஒரு சில பாடல்கள் நம் மனதில் நிலைத்திருக்கும். அப்படி 90-களில் தமிழக இளைஞர்களின் மனதில் நிலைத்து நின்ற பல பாடல்ககளின் குரலுக்கு சொந்தக்காரர் பாடகர் கேகே ( Krishnakumar Kunnath – KK ).
“ஸ்டிராபெர்ரி கண்ணே”, “பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது”, ”நினைத்து நினைத்து பார்த்தேன்” ”அண்டங்காக்கா கொண்டக்காரி”, ”காதல் வளர்த்தேன்… காதல் வளர்த்தேன்”, ”காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னைக் காணும்வரை” உட்பட 90-ஸ் கிட்ஸ் இளைஞர்களின் தேசிய கீதமாக விளங்கிய 50-க்கும் மேற்பட்ட தமிழ் பாடல்களைப் பாடியவர் கிருஷ்ணகுமார் குன்னத் (கேகே).
இசையை தன் உயிராகக் கருதிய கேகே கொல்கத்தாவில் நேற்று நடந்த கல்லூரி விழாவில் தனது இசைக் கச்சேரியை நடத்தியிருந்தார். அதன் பிறகு அறைக்கு திரும்பியவர் மயங்கி விழுந்து மாரடைப்பால் காலமானார்.
53 வயதிலேயே திரையிசையில் பல சாதனைகளைப் படைத்த கேகேவைப் பற்றி நாம் அறிந்திராத சில தகவல்கள்:
கேகேயின் குடும்பம் முதலில் டெல்லியில் வசித்து வந்தது. இசையுலகில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் முன் ஓட்டல் துறையில் கேகே பணியாற்றியுள்ளார்.
கேகேயின் மனையின் பெயர் ஜோதி கிருஷ்ணா. இருவரும் பள்ளி காலத்திலிருந்தே காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
ஏதாவது வேலையிலிருந்தால்தான் மகளை திருமணம் செய்து தருவேன் என்று ஜோதி கிருஷ்ணாவின் பெற்றோர்கள் கூறியதால் சேல்ஸ் மேன் வேலைக்கு சென்றார் கேகே.
திருமணத்துக்குப் பிறகு அந்த வேலை பிடிக்காததால் விட்டுவிட்டார். கேகேக்கு ஒரு மகன், ஒரு மகள் என்று இரண்டு குழந்தைகள்.
பின்னர் மனைவி மற்றும் அப்பாவின் வற்புறுத்தலால் இசையில் மீண்டும் கவனம் செலுத்தினார். திரைப்படங்களில் பாடுவதற்கு முன்பே 3,500-க்கும் மேற்பட்ட ஜிங்கிள்ஸ்களை (விளம்பரப் பாடல்கள்) கேகே பாடியுள்ளார்.
கேகேயின் பாடல் திறமையை முதலில் அடையாளம் கண்டது பாடகர் ஹரிஹரன்தான்.
டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் கேகே பாடுவதைக் கேட்ட ஹரிஹரன், அவரிடம் சினிமாவுக்கு முயற்சி செய்யுமாறு கூறியிருக்கிறார். மேலும் டெல்லியில் இருந்து மும்பைக்கு வீட்டை மாற்றிக்கொள்ளுமாறும் அவர்தான் வற்புறுத்தி உள்ளார்.
கேகேயின் குரல் வளத்தைப் பற்றி கேள்விப்பட்ட ஏஆர் ரஹ்மான், தான் இசையமைத்த ‘காதல் தேசம்’ திரைப்படத்தில் வரும் ‘ஹலோ டாக்டர்’ என்ற பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார். இதுதான் அவர் பாடிய முதல் தமிழ் பாடல். இதைத்தொடர்ந்து தனது இசையில் மேலும் பல பாடல்களை கேகேவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார்.
இந்தியில் முதல் முதல் முறையாக மாச்சீஸ் என்ற படத்தில் ‘சோட் ஆயே ஹம் வோ கலியான்’ என்ற பாடலை கேகே பாடியுள்ளார். விஷால் பரத்வாஜ் இசையமைத்த இந்த பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
1999-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக கே.கே. பாடல் பாடியுள்ளார்.
கேகேவுக்கு மிகவும் பிடித்த பாடகர் கிஷோர்குமார். தன்னை பாடத் தூண்டியவர் கிஷோர் குமார்தான் என்று பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேகே முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லை. “ஒருசில நாட்கள் இசைப்பள்ளியில் படித்தாலும், பின்னர் அதைத் தொடரவில்லை. பாடல்களை கேட்டு கேட்டுத்தான் முறைப்படி பாட கற்றுக்கொண்டேன்” என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கேகே. குறிப்பாக அக்காலத்தில் தனது அம்மா டேப் ரெகார்டரில் கேட்ட மலையாளப் பாடல்கள் தன்னை இசையில் ஈடுபாடு கொள்ளத் தூண்டியதாக கேகே கூறியுள்ளார்.
தமிழைத் தவிர இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடா, பெங்காலி, மலயாளம், குஜராத்தி மற்றும் அஸ்ஸாமி மொழிகளில் கேகே பாடியுள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று மாலை இசைக் கச்சேரி முடிந்ததும் ஓட்டல் அறைக்கு திரும்பியிருக்கிறார். நெஞ்சுப் பகுதியில் பாரமாயிருக்கிறது என்று கூறியிருக்கிறார். சிறிது நேரத்தில் மயங்கி விழவும் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். போகும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். காரணம் ஹார்ட் அட்டாக் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் மொழியில் குறிப்பிட வேண்டுமென்றால் மையோகார்டியல் இன்ஃபார்க்ஷன் (myocardial infarction). இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் ஏற்பட்ட ரத்த கட்டினால் இந்த நிலை ஏற்படுகிறது.
கேகே தன் உடலை சரியாக பராமரித்து வந்திருந்தார் என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
காலையில் 3 அல்லது 4 கிளாஸ் தண்ணீர் அருந்துவாராம். அதனைத் தொடர்ந்து முட்டைகளும் பழங்களும் சாப்பிடுவாராம். தானிய வகைகளில் செய்யப்பட்ட உணவுகளே அவரது காலை உணவாக இருந்திருக்கிறது. மதிய உணவு காய்கறிகளும் கீரைகளும். இரவு உணவு சப்பாத்தியும் பருப்பு கூட்டும். அரிசியை மிக அரிதாகவே சேர்த்துக் கொள்வாராம். இந்த உணவுப் பழக்கம் தவிர தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தையும் கேகே வைத்திருந்திருக்கிறார். கார்டியோ வகையிலான உடற்பயிற்சிகளை தினமும் செய்திருக்கிறார். இத்தனை கவனமாக உடலை பேணி வந்தவருக்கு ஹார்ட் அட்டாக் என்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
சமீபகாலமாக இளம் வயது மரணங்கள் நிகழ்கின்றன. மிக பிரபலமான உதாரணம் கன்னட திரைநட்சத்திரம் புனீத் ராஜ்குமாரின் மரணம். அவரும் தன் உடலை கவனமாக பராமரித்தவர்.
கேகே, புனித் ராஜ்குமார் போன்றவர்களின் மரணம் பல கேள்விகளை எழுப்புகிறது.
கொரோனா வைரஸ் மனிதர்களை தாக்கினால் அவர்களது இதயம் பலவீனமாகிவிடுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்கள் இதயம் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். கொரோனாவிலிருந்து மீண்டவர்களில் 52 சதவீதம் பேருக்கு இதயப் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.
மாரடைப்புக்கான அறிகுறிகளை புறம்தள்ளுவதும் இறப்புக்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தோள்பட்டை, முதுகு, கைகள், மார்பு பகுதிகளில் வலி அதிகரித்தால் உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது. இந்த வலியுடன் வேர்வையும் அதிகரித்தால் நிச்சயம் மருத்துவமனை செல்ல வேண்டும். ஆனால் உடல் தரும் இந்த அறிகுறிகளை பொருட்படுத்தாமல் இருப்பது உயிருக்கே பாதிப்பாக மாறுகிறது.