விஜய் நடிக்கும் ஒவ்வொரு பட அறிவிப்பின்போதும், ‘படத்தின் இயக்குநர் யார்?’ என்ற கேள்விக்கு அடுத்ததாக அவரது ரசிகர்கள் கேட்கும் கேள்வி ‘படத்தின் நாயகி யார்?’ என்பதுதான்.
பிரபுதேவாவே வியக்கும் வண்ணம் நடனத்தில் விஜய் அசத்தி வருவதால், படத்தில் அவருக்கு இணையாக ஆடும் ஒருவர் நாயகியாக இருக்க வேண்டுமே என்ற கவலை ரசிகர்களுக்கு. அத்துடன் அந்த நடிகை இளமையாகவும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுபவராகவும் இருக்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த வகையில் ‘விஜய் 66’ படத்தின் நாயகி யாராக இருக்கும் என்று பட்டிமன்றம் நடத்தாத குறையாக விவாதித்துக்கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள்.
வம்சி பைடிபல்லி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் இப்படத்தில் மகேஷ்பாபுவின் மகள், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
அப்போதும், “அதெல்லாம் கிடக்கட்டும். ஹீரோயின் யாரு?” என்ற கேள்விதான் ரசிகர்களிடையே எழுந்தது.
ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாக முதலில் செய்தி பரவியது. ஆனால், ஏனோ இந்தச் செய்தியை விஜய் ரசிகர்கள் ரசிக்கவில்லை. “வேற யாரையாவது நடிக்க வைத்தால் நல்லா இருக்குமே” என்று முணுமுணுத்தார்கள்.
இந்த சூழலில் இப்போது ‘விஜய் 66’ படத்தில் திஷா பதானி, விஜய்யின் ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். ‘தளபதி 66’ குடும்ப பாணியில் காதல் படமாக உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.