ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றதற்கான 5 காரணங்களைப் பார்ப்போம்…
ஜடேஜாவின் கேப்டன்ஷிப் பிரஷர்
ஜடேஜாவை பொறுத்தவரை 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணிக்கு சில ஆட்டங்களில் கேப்டனாக இருந்ததைத் தவிர வேறு எப்போதும் அவர் கேப்டனாக இருந்ததில்லை. இதனால், அவரும் எந்தப் பிரஷரும் இல்லாமல் கவலையற்ற மனிதராக இருந்தார். எந்தக் கணத்தில் மைதானத்தில் இறங்கினாலும், தனது வேலை சிக்சர்களையும் பவுண்டரிகளையும் அடிப்பது மட்டுமே என்ற மனநிலைதான் அவருக்கு இருக்கும்.
கடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ஜடேஜா 37 (ஒரு எக்ஸ்ட்ரா பந்தையும் சேர்த்து) ரன்களை அடித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட ஜடேஜா நேற்று தனது தலையில் ஏதோ பாறாங்கல்லை வைத்ததுபோல் இறுக்கமாக இருந்தார். அதுவும் ராயுடு ரன் அவுட் ஆன பிறகு அவரது ஆட்டத்தின் ஸ்டைலே மாறிப் போனது. ஒரு குடும்பத்தைக் காக்க வேண்டிய பொறுப்பை சுமக்கும் மூத்த மகனைப் போல் அநியாயத்துக்குப் பொறுப்பாக ஆடினார். இதனால், அவரது ஸ்டிரைக் ரேட் அடிவாங்க, சென்னையின் ரன்ரேட் அதிவேகமாக சரிந்தது.
தேவையற்ற டாட் பால்கள்
சென்னை அணியின் சிறப்பம்சமே அதிரடியான பேட்டிங்தான். விக்கெட்கள் விழுந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அதிரடியாக ரன்களைக் குவிப்பது சென்னை வீரர்களின் வழக்கம். ஆனால், நேற்று அதைக் காண முடியவில்லை. 50-க்கும் மேற்பட்ட பந்துகளில் ரன் எடுக்காமல் டாட் பாலாக விட்டு சென்னை வீரர்கள் தங்கள் மீது பளுவை ஏற்றிக்கொண்டனர். பிராவோ, சாண்ட்னர் போன்ற வீரர்கள் அடுத்து இருப்பது தெரிந்தும் தோனியும் ஜடேஜாவும் சில ஓவர்கள் அநியாயத்துக்கு ‘டொக்’ வைத்தனர். நேற்றைய தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்.
சொதப்பிய அணித்தேர்வு
துடிப்பான இளம் வீரர்கள் அணியிலிருந்தும் அவர்களை நம்பாமல் ஏற்கெனவே ஐபிஎல் தொடரில் ஆடி அனுபவம் உள்ள வீரர்களை ஆடவைப்பது சென்னைக்கே உரிய வழக்கம், இது நேற்றும் நடந்தது. 2 மாதங்களுக்கு முன் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறந்த ஆல்ரவுண்டராக கலக்கியவர் ஹங்கர்கேகர். இத்தொடரில் இந்திய அணியின் தொடக்க பந்துவீச்சாளராகவும் சிக்கர்களைப் பறக்கவிடும் பினிஷராகவும் ஹங்கர்கேகர் இருந்தார். சில கோடிகள் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் வாங்கப்பட்டிருந்தாலும், நேற்றைய ஆட்டத்தில் அவருக்குப் பதிலாக ஐபிஎல் தொடரில் சில போட்டிகள் ஆடிய சிவம் துபே பயன்படுத்தப்பட்டிருந்தார், ஆனால், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என 3 பிரிவுகளிலும் அவர் எதையும் செய்யவில்லை, இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
மொயின் அலியின் விசா பிரச்சினை
இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிதும் நம்பியிருந்த வீரர் மொயின் அலி. அதிரடி பேட்ஸ்மேனான அவர் சிறப்பான சுழற்பந்து வீச்சாளரும்கூட. அவரை மூன்றாவது பேட்ஸ்மேனாக ஆட வைப்பதுதான் சென்னை அணியின் திட்டம். ஆனால், விசா கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த 2 நாட்களுக்கு முன்தான் அவரால் இந்தியா வர முடிந்தது, தற்போது பயோ பபிளில் இருப்பதால் முதல் போட்டியில் அவரால் ஆட முடியவில்லை. இது சென்னை அணியைப் பாதித்தது.
சொதப்பிய பவர் பிளே
பவர் பிளே எனப்படும் முதல் 6 ஓவர்கள் அணியின் வெற்றி வாய்ப்புகளைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த ஓவர்களில் அதிக ரன் குவிக்கும் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். நேற்றைய ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் அவுட் ஆனதுமே சென்னை சூப்பர் கிங்ஸ் பெட்டிக்குள் போன பாம்பாக மாறிவிட்டது. பவர் பிளேவில் சென்னை அணியால் 36 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இப்படி ஆரம்பத்திலேயே எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு சென்னை அணி பணிய, அவர்களின் உற்சாகம் அதிகரித்தது. இதனால், அவர்கள் மேலும் சில விக்கெட்களை வீழ்த்த சென்னை அணி மேலும் சறுக்கியது.