நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் நுபுர் ஷர்மா பேசிய கருத்துக்கள் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தது, பல இஸ்லாமிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக இந்தியாவிடம் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தன. இந்திய வெளியுறவில் ஒரு கரும்புள்ளிகளாக இந்த சம்பவங்கள் இருந்தன. நுபுர் ஷர்மாவை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்தது பாஜக.
வட இந்தியாவில் நுபுர் ஷர்மாவின் பேச்சைக் கண்டித்து இஸ்லாமியர்கள் பெரிய போராட்டங்களை நடத்தினார்கள். அந்தப் போராட்டங்கள் சில இடங்களில் வன்முறையாகவும் மாறியது.
உத்தரப்பிரதேசத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் ஏற்பட்ட வன்முறைக்கு ஜாவேத் முகமதுவும் அவரது மகள் அஃப்ரீன் பாத்திமாவும்தான் காரணம் என்று உத்தரப்பிரதேச காவல்துறையினரால் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
பொதுவாய் ஒரு வழக்கில் புகார் தெரிவிக்கப்பட்டால், அவர் குற்றம் செய்திருக்கலாம் என்று காவல்துறை கருதினால் அவரைக் கைது செய்வார்கள். ஆனால் உபி அரசு அப்படி செய்யவில்லை. அவர்கள் வாழும் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது.
விதிமுறைகளை மீறி வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன என்று அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
வீடுகளை இடிப்பதற்கு முன் நடந்த சோதனையின் போது ஆட்சேபனைக்குரிய கருத்துகள் அடங்கிய போஸ்டர்களும் இருந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
”12 போர் பிஸ்டல் மற்றும் 315 போர் பிஸ்டல் துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள், நீதிமன்றத்துக்கு எதிரான ஆட்சேபனைக்குரிய கருத்துகள் அடங்கிய போஸ்டர்களும் இருப்பது சோதனை மூலம் கண்டறியப்பட்டது” என்று அந்தப் பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் குமார் தெரிவித்திருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை ஜாவேத் முகமதுவின் வழக்கறிஞர் மறுக்கிறார்.
சமீபகாலமாக பாஜக ஆளும் மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபவர்களின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பதாக வீடுகளை இடிப்பதற்கு அம்மாநில அரசுகள் காரணம் கூறினாலும் புல்டோசரை பயன்படுத்துவது அரசியல் ரீதியான காரணங்களுக்கு என்பது சந்தர்ப்ப சூழலைப் பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது.
”பிரயாக்ராஜ் ஜாவேத் முகமது வீடு இடிக்கப்பட்ட சம்பவத்தில் அரசின் உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. விதிகளை மீறி வீடு கட்டப்பட்டிருப்பதாக சனிக்கிழமை மாலையில் நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. ஞாயிறு முற்பகலில் விளக்கம் வரவில்லை என்று இடித்துத் தள்ளப்படுகிறது. வீடு ஜாவேத் பெயரில் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். ஆனால் நோட்டீஸ் அவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது” என்கிறார்கள் ஜாவேத்தின் ஆதரவாளர்கள்.
மே 10 ஆம் தேதியே வீடு கட்டுவதில் நடந்திருக்கும் விதி மீறல்கள் குறித்து ஜாவேத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மே 25 ஆம் தேதிக்குள் அவர் பதிலளித்திருக்க வேண்டும். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. அதனால் இந்த நடவடிக்கை என்கிறார்கள் அரசு ஆதரவாளர்கள்.
அரசு தரப்பு வாதங்களை கடுமையாக எதிர்க்கிறார் ஜாவேத்தின் மகள் ஃபாத்திமா. “விதிகளை மீறி வீடு கட்டப்பட்டிருந்தால் முன்பே எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் எங்களுக்கு அனுப்பபடவில்லை” என்கிறார் அவர்.
காலை 11 மணிக்கு வீட்டுக்கு வந்த அரசு அதிகாரிகள், வீட்டு ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து வீட்டிலுள்ள பொருட்களை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நான்கு மணி நேரத்தில் இரண்டு மாடி வீட்டை இடித்து தள்ளியிருக்கிறார்கள்.
முகமது ஜாவேதின் வீட்டை இடித்தது சட்டத்திற்கு புறம்பான செயல் என வழக்கறிஞர்கள் குழு ஒன்று அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த வீடு அவரது மனைவி பெயரில் உள்ளது என்றும். அவருக்கு எந்தவித நோட்டீஸும் வழங்கப்படவில்லை என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை வைத்துப் பார்க்கும்போது வீட்டை இடித்து தள்ளுவதற்காக அவசர அவசரமாய் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்பது புரிகிறது.
விதி மீறல்களுக்காக கட்டிடங்கள் இடிக்கப்படுவது புதிதல்ல, ஆனால் அவை போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்ட பின்னே இடிக்கப்படும். ஆனால் சமீபத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் செய்தவர்களின் வீடுகள் இடிக்கப்படுவது அதிகமாகியிருப்பது அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் டெல்லியில் ஷாஹீன் பாக் பகுதியில் பல வீடுகள் புல்டோசர்களால் தரை மட்டமாக்கப்பட்டன. இவை விதிகளை மீறி கட்டப்பட்டவை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. ஷாஹீன் பாக் பகுதியில் தான் அரசுக்கு எதிரான போராட்டங்களும் அதிக அளவில் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற புல்டோசர் சம்பவங்கள் மத்திய பிரதேச மாநிலத்திலும் நடந்திருக்கின்றன.
”இது முற்றிலும் சட்டத்துக்கு எதிரானது. விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தாலும் ஞாயிற்றுக் கிழமையில், வீட்டின் உரிமையாளர்கள் போலீஸ் கஸ்டடியில் இருக்கும்போது அவர்கள் வீட்டை இடிப்பது என்பது அனுமதிக்க இயலாத செயல். இந்தியாவில் பல கோடி இருப்பிடங்கள் விதிகளை மீறிதான் கட்டப்பட்டிருக்கின்றன என்பதையும் நாம் பார்க்க வேண்டும்’ என்று கூறுகிறார் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர்.
இடிக்கப்படும் வீடுகள் ஒரு மதத்தை சார்ந்தவர்களாக இருப்பது இந்தியாவின் ஒற்றுமையை அசைத்துப் பார்க்கும் செயலாகவும் மாறும் அபாயம் இருக்கிறது.
போராட்டக்காரர்களை ஒடுக்க சட்டப்பூர்வமான பல வழிகள் இருக்கின்றன. ஆனால் வாழும் வீடுகளை இடிக்கும் புல்டோசர் அரசியலை கையிலெடுப்பது நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் உதவாது என்பதை அரசுகள் புரிந்துக் கொள்ள வேண்டும்.