‘நாம் வாழ்க்கையில் பெரிய இலக்குகளை வைத்துக்கொள்வதைவிட, நேற்று இருந்ததைவிட இன்று ஒரு சதவிகிதம் வளர்ச்சியடைய வேண்டும் என்ற சின்னஞ்சிறு இலக்கை நிர்ணயித்து நம் வாழ்க்கையை நகர்த்தினால் வெற்றி பெறுவது சுலபம” என்று, 20 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் செய்துள்ள இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜவஹர் பழனியப்பன் கூறினார்.
சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெற்று வரும், 48வது புத்தகக் காட்சியில் நேற்று (05-01-25), மணிமேகலை பிரசுரம் சார்பில் 48 நூல்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த மேடையில் முதல் நிகழ்வாக, 20 ஆயிரம் இருதய அறுவை சிகிச்சைகளுக்கு மேல் செய்துள்ளவரும் குமுதம் நிறுவனர், ஆசிரியர் எஸ்.ஏ.பி.யின் மகனுமான மருத்துவர் ஜவஹர் பழனியப்பன் அவர்களுக்கு மருத்துவ மாமணி விருது வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சால்வை அணிவித்து மருத்துவர் ஜவஹர் பழனியப்பனுக்கு இந்த விருதினை வழங்கினார். சென்னை மேயர் பிரியா இந்த நிகழ்வில் உடனிருந்தார்.
தொடர்ந்து 48 நூல்கள் வெளியிடப்பட்டன. ‘தினமலர்’ நாளிதழின் இணைப்பான, ‘வாரமலர்’ இதழில், அந்துமணி எழுதிய, பா.கே.ப., என்ற, ‘பார்த்தது கேட்டது படித்தது’ நுாலின் – 23ஆம் பாகத்தை, மருத்துவர் ஜவஹர் பழனியப்பன் வெளியிட, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா பெற்றுக்கொண்டார்.
வாழ்வில் வெற்றிபெற இதை செய்யுங்கள்
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் பேசுகையில், ”என் தந்தை எஸ்.ஏ.பி. அண்ணாமலை ‘குமுதம்’ இதழை 1947ஆம் ஆண்டு தொடங்கினார். எட்டு லட்சம் பிரதிகள் என்ற சாதனையைத் தொட்டு, இந்தியாவில் அதிகம் விற்பனையான இதழ் என்ற பெருமையையும் தமிழ் இதழான ‘குமுதம்’ பெற வைத்தார். அப்போது இரண்டாவது இடத்தில் மலையாள பத்திரிகையான ‘மலையாள மனோராமா’வும் மூன்றாவது மற்றும் அதற்கடுத்த இடங்களில் இந்தி பத்திரிகைகளும் இருந்தன.
இந்த ஒன்றாவது இடம் என்ற பெருமையை ‘குமுதம்’ அடையக் காரணம், இதழின் ஒவ்வொரு பக்கமும் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதில் என் தந்தை ஆசிரியர் எஸ்.ஏ.பி. கவனமாக இருந்ததுதான். இன்றைய இளைஞர்களின் கவனக் குவிப்பு நேரம் என்பது மூன்றே விநாடிகள் தான். ரீல்ஸ், ஷார்ட்ஸ் பார்க்கும்போது மூன்று விநாடிகளில் அவர்களுக்கான சுவாரஸ்யம் இல்லையென்றால் அடுத்த ரீல்ஸுக்கு போய்விடுவார்கள். இதையே அக்காலத்திலேயே என் தந்தையார் நன்றாகப் புரிந்துகொண்டு ஒவ்வொரு பக்கத்திலும் வாசகர்களை ஈர்க்கக்கூடிய ஒரு விஷயம் இருக்கவேண்டும் என்று சிரத்தை எடுத்துக்கொள்வார். அந்த சுவாரஸ்யம் இல்லையென்றால் வாசகர்கள் சுலபமாக அந்த பக்கத்தை கடந்து சென்றுவிடுவார்கள். அப்படிப்பட்டது தான் வாழ்க்கையும். நாம் ஒவ்வொரு வினாடியையும் உணர்ந்து அனுபவிக்க, புத்தகங்கள் அவசியம்.
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான முதல் பத்திரிகை என்பதுடன் உலகம் முழுவதும் சென்ற முதல் தமிழ் பத்திரிகை என்ற பெருமையும் ‘குமுதம்’ இதழுக்கு உண்டு. சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஐரோப்பா என உலகம் முழுவதும் ‘குமுதம்’ இதழைக் கொண்டு சென்றதும் என் தந்தையாரின் சாதனை.
என் தந்தையின் நூலகத்தில் 30 ஆயிரம் நூல்கள் இருந்தன. அந்த நூல்களைப் படித்துவிட்டு அவர் மட்டும் வைத்துக்கொள்ளாமல், சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒரு வீடு வாங்கி, ‘புக் ஃபிரண்ட்ஸ் லைப்ரரி’ என்ற பெயரில் ஒரு நூலகமாக்கினார். மற்றவர்களும் அந்த நூல்களை வாசிக்கும்படி செய்தார். மட்டுமல்லாமல் வாராவாரம் அந்த நூலகத்தில் ஒரு கூட்டம் நடத்துவார். துறை சார்ந்த ஒரு பிரபல நபரை அழைத்துப் பேச வைப்பார். தொடர்ந்து புத்தகங்கள் குறித்த உரையாடல் என அந்த கூட்டம் நடைபெறும்.
என் தந்தையின் இந்த புத்தகக் காதல் டிஎன்ஏவாகவே எனக்கும் கடத்தப்பட்டுள்ளது. எனவே, நானும் ஒரு புக் லவ்வராக இன்று இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
சென்ற வருடம் 47ஆவது புத்தகக் காட்சிக்கு 15 லட்சம் பேர்கள் வந்திருந்தார்கள். 19 கோடி ரூபாய் அளவுக்கு நூல்கள் விற்பனையானது. இந்த வருடம் கூட்டத்தைப் பார்க்கும்போது சென்ற வருடத்தைவிட அதிகமாக இருக்கும் என்று கணிக்கிறேன். சோஷியல் மீடியா காலத்துக்குப் பின்னரும் அவ்வளவு பேர் புத்தகம் படிப்பதை விரும்புகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இது ஒரு புக் லவ்வராக எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
தற்போது உலகளவில் தன்னம்பிக்கை நூல்களே அதிகளவில் விற்பனையாகின்றன. அதிலும் ‘The Atomic Habits’ என்ற நூல் 2018 முதல் கடந்த 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து ‘நியூயார்க் டைம்ஸ்’ பெஸ்ட் செல்லரில் டாப் 5இல் ஒன்றாக இருக்கிறது. ஜேம்ஸ் கிளியர் எழுதிய இந்த நூலை 2 கோடி பேர் இதுவரை படித்துள்ளார்கள்.
நாம் பெரிய இலக்குகளை வைத்துக் கொள்வதைவிட, நேற்று இருந்ததைவிட இன்று ஒரு சதவிகிதம் வளர்ச்சியடைய வேண்டும் என்ற சிறிய இலக்கை நிர்ணயித்து நம் வாழ்க்கையை நகர்த்தினால் வெற்றி பெறுவதும் சுலபம் என்ற தகவலைச் சொல்கிறார் ஜேம்ஸ் கிளியர்.
அடுத்ததாக ஜேம்ஸ் கிளியர் சொல்லும் முக்கியமான விஷயம். ஒரு காரியத்தைச் செய்யவிடாமல் நம்மைத் தடுப்பது நம்மிடம் உள்ள தள்ளிப்போடும் பழக்கம். நேரமில்லை என்ற ஒரு காரணத்தைச் சொல்லுவோம். இப்படி நேரமில்லை என்று தள்ளிப்போடாமல் அதற்குக் குறைந்தது 5 நிமிடங்கள் ஒதுக்குங்கள். பின்னர் அந்த காரியமே உங்களை அதைச் செய்ய வைக்கும். தள்ளிப்போடும் பழக்கத்தைத் தடுக்க சுலபமான வழி இது என்கிறார் ஜேம்ஸ் கிளியர்.