ஒவ்வொரு வருடமும் டிசம்பர் இறுதி வந்துவிட்டால், ’பழையன கழிதலும் புதியன புகுதலும்’ முக்கியத்துவம் பெற்றுவிடும். இந்த சமாச்சாரத்தில் சினிமாவும் விதிவிலக்கு அல்ல.
2022-, வருடத்தில் நடிப்பு, கவர்ச்சி என கோதாவில் இறங்கிய நடிகைகளில் பட்டியல் பெரிதாக இருந்தாலும், லேட்டஸ்ட் வரவுகளில் கவனத்தை ஈர்த்திருப்பது என்னவோ ஒரு சிலர்தான்.
வழக்கமாக சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர்களைதான் டாப் 10 லிஸ்ட்டில் சேர்ப்பது வழக்கம். ஆனால் கோவிட்டுக்கு பிறகு ஒடிடி-யும் களத்தில் இருப்பதால், ஒடிடி-யில் அறிமுகமான புதுமுகங்களையும் கணக்கில் எடுப்பதே நியாயமானதாக இருக்கும்.
அப்பேர்பட்ட ஒரு சிலரைப் பற்றி பார்க்கலாம்.
இதோ உங்களுக்காக 2022-ல் கவனத்தை ஈர்த்த Wow 10 அறிமுக நடிகைகளின் பட்டியல்.
அதிதி ஷங்கர்
பெரிய இடத்துப் பிள்ளை. அதனால் ‘நிபோடிசம்’ இருக்கிறதா என்ற கேள்வியும் எழலாம். ஆனாலும் நன்றாகவே ஆட்டம் போடுகிறார். சிறப்பாகவே பாட்டும் பாடுகிறார்.
முதல் படமான ‘விருமனில்’ இன்றைக்கு மார்க்கெட்டில் கிராக்கி இருக்கும் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். பிரம்மாண்டமாக படமெடுக்கும், பாடலுக்கும் மாடர்ன் காஸ்ட்யூமுக்குமே கோடிகளைக் கொட்டும் ஷங்கரின் மகள், அதற்கெல்லாம் அவசியமே இல்லாத கிராமத்துப் பெண்ணாக பாவாடை தாவணியில் அறிமுகமாகி இருக்கிறார். டாக்டருக்கு படித்தவர் ஸ்டெதஸ்கோப்பிற்கு ஓய்வு கொடுத்து விட்டு ‘மதுரை வீரன்’ பாடலை பாடியதன் மூலம் மைக்கை கையிலெடுத்து இருக்கிறார்.
விருமனில் இவரது கதாபாத்திரம் தேன்மொழி அந்தளவிற்கு பிரமாதமாக ஆழமாக இல்லாவிட்டாலும், இவரது டான்ஸ் மூவ்மெண்ட்கள் சோஷியல் மீடியா ரீல்ஸூக்கு நன்றாக தீனிப்போட்டிருக்கின்றன.
ஷங்கரின் மகள் என்பதால், அடுத்து சிவகார்த்திகேயன் உடன் ‘மாவீரன்’ படத்திலும் வெயிட்டான சம்பளத்தில் கமிட்டாகிவிட்டார்.
இந்த பின்னணி அவருக்கு தொடர்ந்து கைக்கொடுக்குமா என்று கேள்வி எழலாம்.
‘ஒரு அப்பாவாக, நான் நடிப்பதில் அவருக்கு இஷ்டமில்லை. ஆனால் ஒரு இயக்குநராக ஒகே சொல்லியிருக்கிறார் அப்பா. நடிக்க ஆசை. முயற்சி பண்றேன்.
செட்டாகவில்லை என்றால் உயர் படிப்பை தொடர்வேன் என்று அப்பாவுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்.
அப்பாவுடைய படங்கள் என்னுடைய வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை கொடுத்திருக்கின்றன. ‘அந்நியன்’ படத்தில் விக்ரம் நடிப்பைப் பார்த்துதான் எனக்கும் நடிக்க வேண்டுமென்ற ஆசை வந்தது.
அப்பா இயக்குநர் என்பதால் சுலபமாக வாய்ப்பு கிடைத்துவிட்டது. அதை என்னால் மறுக்க முடியாது. ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காது. அதற்கேற்ற மாதிரி நடிப்பில் என்னுடைய திறமையை வளர்த்து கொள்வேன். சீக்கிரமே சூர்யா, விஜயுடன் ஜோடியாக நடிக்க வேண்டுமென்பதே என்னுடைய ஆசை’ என்று பிரம்மாண்டமான விருப்பத்தை வைக்கிறார் அதிதி ஷங்கர்.
கீர்த்தி ஷெட்டி
மங்களூர் மங்கை. வெறும் 20 தான் இவரது வயது. 2019-ல் நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பமே ஹிர்த்திக் ரோஷனின் ‘சூப்பர் 30’ வாய்ப்பு. அடுத்து வாய்ப்புகளுக்காக இவர் ஃப்ளைட்டை பிடித்தது ஹைதராபாத்திற்கு.
நம்மூர் விஜய் சேதுபதி வில்லனாக தெலுங்கில் பேசிய ‘உப்பண்ணா’ பெரிய ஹிட். இங்கேதான் கீர்த்தி ஷெட்டியின் கேரியர் டேக் ஆஃப் ஆனது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் தமிழிலும், தெலுங்கிலும் வெளியான ’வாரியர்’ படத்தில் இங்கே அறிமுகம். ‘புல்லட்’ பாடலுக்கு இவர் ஆடிய ஆட்டம் இளசுகளின் மனதில் புல்லட்டாய் தாக்கியது.
சட்டென்று பாலாவும் சூர்யாவும் இணைந்து திட்டமிட்ட ‘வணங்கான்’ பட வாய்ப்பு இவரது கைவசம் வந்தது.
பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இவருக்கு தெலுங்கிலும் இப்போது சறுக்கல். வாரியரும் இங்கே காலை வாரி விட்டது.
நம்பிக்கையளித்த ‘வணங்கான்’ அவரது ஹிட்டுக்கான படங்களின் வரிசையில் தற்போது ‘அடங்கான்’ ஆகி இருக்கிறது.
கன்னடம், தெலுங்கு, தமிழ் என ஒரு செளத் ரவுண்ட் டூர் அடித்தவர் இப்பொழுது மலையாளத்தில் டோவினோ தாமஸூக்கு ஜோடியாக கமிட்டாகி இருக்கிறார்.
‘வணங்கான்’ இவருக்கு கைக்கொடுத்தால், கீர்த்தி ஷெட்டிக்கும் இங்கே ரசிகர் மன்றம் உருவாகலாம்.
ஸ்ரீநிதி ஷெட்டி
பிரம்மாண்டமான பட்ஜெட், ஏ.ஆர். ரஹ்மான் இசை, விக்ரம் இரண்டு கெட்டப் என ஏகப்பட்ட எதிர்பார்புகளுடன் வெளியாகி, சீறாமல் அப்படியே சுருண்டுப் படுத்த ’கோப்ரா’வில் தான் ஸ்ரீநிதி ஷெட்டி தமிழுக்கு அறிமுகமானார்.
கேஜிஎஃப் சீரிஸ் படங்களில் நடித்ததன் மூலம் பான் – இந்தியா நடிகையாக முகம் தெரிந்தவராகி இருக்கிறார்.
ஸ்ரீநிதி ஷெட்டிக்கு இப்பொழுது 30 வயது. இவர் ஒரு ஃபேஷன் மாடலும் கூட. அழகி பட்டங்களின் கிரீடங்களை சுமந்து கொண்டிருப்பவர். மிஸ். சூப்ராநேஷனல் இந்தியா பட்டத்தை 2016-ல் தனது உடல்வாகினால் வாகை சூடியவர்.
கேஜிஎஃப் கொடுத்த புகழை வைத்து அப்படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட கோப்ராவில் இரண்டு மடங்கு சம்பளம் வாங்கியதாக ஒரு பேச்சு இருக்கிறது.
ஆனால் கைவசம் இப்போது கால்ஷீட் காலியாகதான் இருக்கிறது. புதிய படங்களில் கமிட்டானதாக தெரியவில்லை.
சித்தி இதானி
2022-ல் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கும் சித்தி இதானி, ஏற்கனவே குஜராத்தி, தெலுங்குப் படங்களில் நடித்தவர். பக்கத்துவீட்டு கல்லூரிப் பெண்ணை போலவே இருக்கிறார். சடக்கென்று மனிதனை கவிழ்த்துவிடும் வசீகரமான கன்னக்குழியுடன் வந்திருப்பவர், கெளதம் வாசுதேவ் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் ’நடிக்கவும்’ செய்திருக்கிறார்.
சித்தி இதானி முதலில் கமிட்டானது இயக்குநர் சசியின் ‘நூறு கோடி வானவில்’ படத்தில்தான். ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து கொண்டிருந்தார். ஆனால் சிம்புவுடன் நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ முதலில் ரிலீஸாகி விட்டது.
கோவிட் கோரத்தாண்டவம் ஆடியபோது, சென்னை வளசரவாக்கத்தில் வசமாக சிக்கி கொண்டவர்தான் இந்த சித்தி. அதனால் இவருக்கு தமிழும் கொஞ்சம் கொஞ்சம் வருகிறது.
இவரது அம்மா ஒரு டிவி நடிகை. அப்பா வாய்ஸ் ட்ரெய்னர். அதனால் சினிமாவில் இவர் நுழைய பிரச்சினை இல்லாமல் போய்விட்டது. குஜராத்தில் நாடகங்களில் நடித்த சித்தி இதானிக்கு, ஒரு 102 டிகிரியில் உடல் கொதித்து கொண்டிருந்தது. இவர்தான் நாடகத்தின் நாயகி. அதனால் வேறு வழியே இல்லை. அவர் நடித்தே ஆகவேண்டும். ஒரு மாத்திரையைப் போட்டுக்கொண்டு நடித்து முடித்தார்.
இப்படியொரு மெனக்கெடலான கேரக்டர் சித்தி என்பதால் இவருக்கு சினிமாவில் கதாநாயகியாக கீரத்தி அதிகமிருக்கும் என நம்பலாம்.
இப்பொழுது முத்தையாவின் இயக்கத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக களத்தில் இறங்கியிருக்கும் காதர் பாட்ஷா என்கிற முத்துலிங்கம்’ இவர் கைவசம் இருக்கிறது.
சோபிதா துலிபாலா
இவரது அறிமுகப்படமே சூப்பர் டூப்பர் ஹிட். டைரக்டர் மணி ரத்னம். படத்தின் பெயர் பொன்னியின் செல்வன்.
ராஜ ராஜ சோழனை காதலிக்கும் வானதி கதாபாத்திரத்தில், ராட்சஸ மாமனே என அசத்தியவர்.
சோபிதா ஒரு சூப்பர் மாடல். மிஸ்.எர்த் இந்தியா பட்டத்து அழகி. கிளுகிளுப்பான காலண்டர் என கொண்டாடப்பட்ட கிங் ஃபிஷர் ஸ்விம் சூட் கேலண்டர்களில் 2014-ல் சூட்டைக் கிளப்பியவர்.
இதைப் பார்த்து அனுராக் காஷ்யப், 2016-ல் இவரை சினிமாவுக்குள் கொண்டு வந்தார்.
தெலுங்கில் வட்டமடித்தவர் அங்கே வேறு ஒரு காரணத்திற்காக அதிகம் முணுமுணுக்கப்பட்டிருக்கிறார்.
சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவும், சோபிதாவும் நெருக்கமாக நின்று கொண்டு எடுத்த புகைப்படம் வைரலானது. வெளிநாட்டில் எடுத்தப் படம். வெளிநாட்டில் இவர்கள் இருவருக்கும் என்ன வேலை என இவர்கள் பெயர்கள் ட்ரெண்ட்டிங்கில் அடிப்பட்டது.
‘மேட் இன் ஹெவன்’ தொடரில் நடித்தவர் நாக சைதன்யாவுக்கு புது சொர்க்கத்தைக் காட்டிவிட்டார் என்று கமெண்ட்கள் களைக்கட்டின.
தமிழுக்கு கொஞ்சம் மாறுப்பட்ட முகம் என்றாலும், கவர்ச்சியில் திகட்ட வைக்கிறார் என்பதால் இவருக்கு வெப் சிரீஸ்களில் ஜாக்பாட் வாய்ப்புகள் அடிக்கலாம்.
மாள்விகா ஷர்மா
தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் ஒரு கவர்ச்சிகரமான க்ரிமினாலஜி எக்ஸ்பர்ட். அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். ஆனால் கோர்ட் பக்கம் போகாமல் கோலிவுட் பக்கம் வந்திருக்கிறார்.
‘காஃபி வித் காதல்’ படத்தில் அறிமுகம்.
சுந்தர்.சி படத்தில் நட்சத்திரங்களின் எண்ணிக்கை எப்பொழுதும் ஒரு குட்டி கிராமமே விருந்திற்கு வந்தது போல கலகலவென இருக்கும். அதனால்தான் மாள்விகா ஷர்மாவுக்கு மட்டும் எக்ஸ்ட்ராவாக ஒரு அறிமுகம். காஃபி வித் காதல் படத்தில் இவர் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருப்பார்.
மொழி பிரச்சினை. அதனால் லிப் சிங்க் பெரிதாக இல்லை. ஆனால் அது தமிழ் சினிமாவில் பிரச்சினை இல்லை.
ரசிகர்களுக்கு அவசியமான கவர்ச்சியில் இவர் தாராளமயமாக்கல் கொள்கையை கடைப்பிடிப்பவர். அதனால் இவரை விரைவில் ஒரு படத்தில் எதிர்பார்க்கலாம்.
தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தலா ஒரு படம் என தனது கைவசம் இரண்டு படங்களை வைத்திருக்கிறார். அதனால் இந்த கவர்ச்சி சுனாமி எந்த மொழி சினிமாவை தாக்கும் என்பது அப்போதைய பாக்ஸ் ஆபிஸ் டிப்ரெஷனை பொறுத்தது.
ஹனியா நஃபீஸா
2022- டிசம்பரின் இறுதியில் அவசர அவசரமாக இப்பட்டியலில் இடம்பிடித்திருப்பவர். லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படுவதால் கெத்து காட்டி வரும் ’நயன்தாராவின் ப்ரமோஷன் பேட்டிகள்’ எல்லாம் கிடைக்குமளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘கனெக்ட்’ படத்தில் நடித்திருக்கிறார் என்பது இவருக்கு ஒரு பிஸினெஸ் கார்ட்.
நயன்தாராவின் மகளாக நடித்திருக்கிறார். நடிப்பில் பேய்த்தனமாக இருக்கிறார்.
ஹனியா ஒரு பாடகி என்பதால் ஆண்ட்ரியாவைப் போல, ரம்யா நம்பீசனைப் போல பாடிக்கொண்டே நடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
அடுத்தடுத்த படங்களில் இவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பொறுத்தே இந்த ஹனிக்கு சினி வாழ்க்கை அமையும்.
சஞ்சனா
இவர் ஒடிடி-யில் அறிமுகமாக நுழைந்திருக்கும் செங்கல்பட்டு அழகி. முழுப்பெயர் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி.
சமீபகாலமாக ஒடிடி-யில் மிரட்டும் புஷ்கர் – காயத்ரியின் ’வதந்தி’ வெப் சிரீஸில் நடித்திருப்பதன் மூலம் வரவேற்பை பெற்றிருக்கிறார்.
விஸ்காம் மாணவி. தமிழ்நாட்டைச் சேர்ந்த யூட்யூப்பர். ’When a 90s kid loves a 2K kid’ ‘வீடியோ, யூட்யூப்பில் இவருக்கென்று ஒரு அடையாளத்தை கொடுத்தது.
சிறு கதைகள், கவிதைகள் எழுதுவது, ஓவியம் வரைவது, என ஒரு கலா ரசனையுள்ள நாயகி சினிமாவுக்கும் தயாராக இருக்கிறார்.
கோபிகா ரமேஷ்
இந்த அம்மணியும் புஷ்கர் – காயத்ரியின் வெப் சிரீஸ் அறிமுகம்தான்.
பெரும் வரவேற்பை பெற்ற ‘சுழல்’ வெப் சிரீஸில் சுழலை உருவாக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கோபிகா ரமேஷ்.
மலையாள சினிமாவில் தெரிந்த முகம். ‘தண்ணீர்மாதன் தினங்கள்’ படத்தில் இவரது கதாபாத்திரம் ஸ்டெப்பி பேசப்பட்டது.
இவர் ஒரு மாடலும் கூட.
சினிமாவிலும் பரீட்ச்சயம் இருப்பதால், தமிழ் சினிமாவிலும் இவருக்கு இனி வாய்ப்புகள் அமையலாம்.
மீதா ரகுநாத்
’முதல் நீ முடிவும் நீ’ வெப் சிரீஸில் நடித்திருக்கும் மீதா ரகுநாத், இசையமைப்பாளர் தர்புகா சிவாவின் உறவினர்.
தனது முதல் வெப் சிரீஸிலேயே அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் மீதா ரகுநாத்.
பார்ப்பதற்கு இயல்பான அழகு. உணர்ச்சிகளை முகப்பாவத்தில் வெளிக்காட்டும் திறமை இவரது பலம்.
பாலு மகேந்திரா, மகேந்திரன் பாணியிலான இயக்குநர்களுக்கான நடிகையாக அடையாளம் காணப்பட இவருக்கு வாய்ப்புகள் அதிகம்.
இதுவரையில் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிட்டவில்லை.