போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்த பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களும் பங்கேற்றுள்ளனர்.
சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில், போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்குகள் தொடங்கின. வாடிகன் பேராலயத்தில் போப் பிரான்சிஸ் உடலுக்கு திருப்பலி செய்துவைக்கப்பட்டது.
வாடிகன் சிட்டியில் உள்ள செயிண்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் இறுதிச் சடங்கும், ரோம் நகரில் உள்ள சாண்டா மரியா மாகியோரே பசிலிகாவில் போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கமும் செய்யப்படவிருக்கிறது.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட ஏராளமான உலக நாடுகளின் தலைவர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்றுள்ளனர். 50 நாடுகளின் தலைவா்கள் உள்பட 130 முக்கியப் பிரதிநிதிகள் போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றுள்ளனர்.
வாடிகனில் நடைபெறும் போப் பிரான்சிஸ் (88) இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக ரோம் நகருக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெள்ளிக்கிழமை சென்றடைந்தாா். அவரது உடலுக்கு நேற்று இறுதி மரியாதை செலுத்திய நிலையில், இன்று நடைபெறும் இறுதிச் சடங்கிலும் பங்கேற்றுள்ளார்.
2013-ஆம் ஆண்டு மாா்ச் 13-ஆம் தேதி 266-ஆவது போப்பாக பிரான்சிஸ் தோ்வு செய்யப்பட்டாா். அவா், 1,300 ஆண்டுகளில் முதல் முறையாக தோ்வு செய்யப்பட்ட ஐரோப்பியா் அல்லாத போப் ஆவாா்.
கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக நிமோனியா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் நீண்ட சிகிச்சைக்குப் பிறகு அண்மையில் வீடு திரும்பிய நிலையில் அவா் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் வாடிகன் சதுக்கத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.