நடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்வது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் லட்சியம். ஆனால் கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை அந்த கூட்டணியின் லட்சியம் மிகச் சிறியது. அந்த மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளில் குறைந்தபட்சம் ஒரு தொகுதியிலாவது ஜெயிக்க வேண்டும் என்பதே பாஜகவின் லட்சியமாக இருக்கிறது. கேரளாவின் வரலாறு அப்படி. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை ஒரு தொகுதியில்கூட தாமரை மலராத மாநிலமாக கேரளா இருக்கிறது.
தமிழகத்தில் எப்படி திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகள் மாறி மாறி ஜெயிக்கிறதோ, அப்படித்தான் கேரளாவில் இடதுசாரி கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் மாறி மாறி ஜெயித்து வருகின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் இந்த இரு கூட்டணிகளில் ஏதாவது ஒன்று வென்று வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களைப் பிடிக்க, இடதுசாரி கூட்டணி 1 இடத்தில் வெற்றி பெற்றது. பாஜக தலைமையிலான கூட்டணிக்கு இந்த தேர்தலில் 13 சதவீதம் வாக்குகள் கிடைத்தது. ஆனால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை.
எப்பாடு பட்டாவது கேரளாவில் தாமரையை மலரவைத்து விடுவது என்ற லட்சியத்துடன் போராடி வரும் பாஜக, இந்த தேர்தலில் அங்குள்ள திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர் தொகுதிகளை குறிவைக்கிறது. திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சரும், தொழிலதிபருமான ராஜீவ் சந்திரசேகரையும், திருச்சூரில் பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபியையும் களம் இறக்கியுள்ளது. இதில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 30 சதவீதம் வாக்குகளைப் பெற்ற திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. ஆனால் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளின்படி பாஜகவுக்கு வாக்கு சதவீதம் சற்று உயர்ந்தாலும் இம்முறையும் அங்கு ஒரு தொகுதியில்கூட தாமரை மலரப்போவதில்லை என்றே தெரியவருகிறது.
நோட்டாவுக்கு கீழே ஒரு காலத்தில் வாக்குகளைப் பெற்ற தமிழகத்தில்கூட வலுவாக காலூன்றியுள்ள பாஜகவால், கேரளாவில் பலம்பெற முடியாதது ஏன்?
கேரள மாநிலத்தின் மக்கள் தொகையில் கணிசமானவர்கள் சிறுபான்மை சமுதாயத்தினராக இருப்பதே இதற்கு காரணம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
கேரள மாநிலத்தின் மக்கள் தொகையில் இந்துக்கள் 55 சதவீதம் பேரும், இஸ்லாமியர்கள் 27 சதவீதம் பேரும், கிறிஸ்துவர்கள் 18 சதவீதம் பேரும் உள்ளனர். இதில் சிறுபான்மை சமூகத்தினரிடம் 45 சதவீத வாக்குகள் இருப்பதுதான் பாஜகவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 45 சதவீத சிறுபான்மை இன மக்களில் வெறும் 2 சதவீதத்தினர் மட்டுமே பாஜக கூட்டணிக்கு வாக்களித்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்துக்களின் ஓட்டு 55 சதவீதம் இருந்தாலும் அந்த வாக்குகளை பாஜகவால் முழுமையாக கைப்பற்ற முடியாத சூழல் உள்ளது. இந்துக்களில் பெருவாரியாக இருக்கும் நாயர் மற்றும் ஈழவர் சமுதாயத்தின் தலைவர்கள் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணியில் முக்கிய பதவிகளை வகிப்பதே இதற்கு காரணம்.
குறிப்பாக கேரள மக்கள் தொகையில் 23 சதவீதம் பேர் ஈழவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இந்த ஈழவர் சமுதாயத்தினர் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆதரிப்பவர்களாக உள்ளனர். அடுத்த பெரிய சமுதாயமான நாயர் சமுதாயத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களாக உள்ளனர். இதனால் இந்துக்களின் ஓட்டை இந்த 2 கூட்டணியும் பங்கு போடுகின்றன.
இந்த சூழலில் இப்போது புது முயற்சியாக கிறிஸ்துவ வாக்குகளை, குறிப்பாக வலதுசாரி சிந்தனை கொண்ட கிறிஸ்தவ மக்களின் வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சித்து வருகிறது. இந்துப் பெண்கள் மட்டுமல்லாது கிறிஸ்துவ பெண்களையும் லவ் ஜிகாத் என்ற பெயரில் மதம் மாற்ற முயற்சிகள் நடப்பதாக அக்கட்சி பிரச்சாரம் செய்கிறது. அங்குள்ள ஒரு சில தேவாலயங்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை போட்டுக் காட்டி அவர்களின் மனதை மாற்றும் முயற்சிகளில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் பெரிதும் மதிக்கும் அம்மாநில முன்னாள் முதல்வர் ஏ.கே.அந்தோணியின் மகனையும் தங்கள் வேட்பாளராக்கி உள்ளது.
ஆனால் இந்த முயற்சிகளுக்கு கிறிஸ்தவர்களின் மற்றொரு பிரிவினரே கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். கேரளா ஸ்டோரி படத்தை போட்டதற்கு எதிராக மணிப்பூர் பற்றிய டாக்குமெண்டரியை தேவாலயங்களில் போட்டு அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.