ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக போலீஸார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இக்கொலையில் ஏற்கெனவே 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், நேற்று மலர்க்கொடி என்ற வழக்கறிஞர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யார் இந்த மலர்க்கொடி?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட வழக்கறிஞரான மலர்க்கொடி திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்தவர். இவரது கணவர் தோட்டம் சேகர். சென்னை திருவல்லிக்கேணி பார்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சேகர், தோட்டம் சேகர் என அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டவர். சென்னையில் பிரபல ரவுடியாக வலம்வந்த அவர், அதிமுகவின் பிரசார பாடகராகவும் இருந்தார். அவர், 2001-ம் ஆண்டு மயிலாப்பூர் சிவகுமார் என்பவரால் கொல்லப்பட்டார்.
தோட்டம் சேகரின் 3-வது மனைவிதான் மலர்க்கொடி. அவருக்கு அழகுராஜ், பாலாஜி என்ற 2 மகன்கள் உள்ளனர். தோட்டம் சேகர் இறந்தபோது சிறுகுழந்தைகளாக இருந்த அவர்களை, அப்பாவின் கொலைக்கு பழிவாங்க வேண்டும் என்று சொல்லியே மலர்க்கொடி வளர்த்ததாக கூறப்படுகிறது. மேலும் கணவர் இறந்த பிறகு மலர்க்கொடியும் சட்டம் படித்து வழக்கறிஞராகி இருக்கிறார்.
மலர்க்கொடியின் மகன்கள் அழகுராஜும் பாலாஜியும் வளர்ந்து இளைஞர்களான பிறகு, அதங்கள் அப்பாவின் கொலைக்கான பழிவாங்கல்களை தொடங்கியுள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு திருவல்லிக்கேணியில் தோட்டம் சேகர் கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அப்பாஸ் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அப்பாஸின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக 2019-ம் ஆண்டு மலர்க்கொடி மீதும், அழகுராஜ் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதிலிருந்து அவர்கள் தப்பினர்.
இதைத்தொடர்ந்து 2021-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் ரவுடி சிவகுமார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக இவர்களில் தோட்டம் சேகரின் மகன்கள் அழகுராஜ், பாலாஜியும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அப்போது அழகுராஜ் கொடுத்த வாக்குமூலத்தில், தாம் 5 வயது குழந்தையாக இருந்த போது தந்தை தோட்டம் சேகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அந்தப் படுகொலைக்கு காரணமானவர் என்பதாலேயே சிவகுமாரை வெட்டிக் கொன்றோம் என தெரிவித்திருந்தார்.
ரூ.50 லட்சம் பரிமாற்றம்
இந்த சூழலில்தான் இப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மலர்க்கொடி கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கெனவே கைதான அருள் என்பவரிடம் நடந்த விசாரணையைத் தொடர்ந்து மலர்க்கொடி கைது செய்யப்பட்டுள்ளார்.
பொன்னை பாலுவின் மைத்துனரான அருள், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். அவரின் மொபைல் போன் தொடர்புகள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு செய்த்தில் மலர்க்கொடியுடன் அவர் அடிக்கடி பேசிவந்ததும், கூலிப்படையினருக்கு, மலர்க்கொடி வாயிலாக, 50 லட்சம் ரூபாய் வரை கைமாறியதும் தெரியவந்தது. இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அதிமுகவில் இருந்து நீக்கம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மலர்க்கொடி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, மலர்கொடி சேகர், (திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர் ) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.