இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் வெளிவந்த பக்காவான ஆக்ஷனும், அசத்தலான காதலும் கலந்த படம் ‘ரன்’.
அதில் மீரா ஜாஸ்மினுடைய அண்ணன் அதுல் குல்கர்னி. பெரிய தாதா. ஒரு சில காட்சிகளில் அதுல் குல்கர்னிக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும். கைகளில் நரம்பு முறுக்கேறும். லேசாக குனிந்தபடி அடுத்து என்ன செய்வது என்று நினைக்கும் அதுல் குல்கர்னி, மெதுவாக எதிர்பக்கம் கண்களை மட்டும் உயர்த்தி பார்ப்பார். அவர் கண்கள் செல்லும் பக்கம் விஜயன் இருப்பார்.
‘தம்பி கொஞ்சம் பொறுங்க. அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று அதுல் குல்கர்னியை ஆசுவாசப்படுத்துவார்.
உடனே அதுல் குல்கர்னி அமைதியாகி விடுவார். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பார்.
சில இடங்களில் அதுல் குல்கர்னியின் கண்களைப் பார்த்த உடனேயே, அவர் மனதிற்குள் நினைப்பதை அவர்களது அடிப்பொடிகளின் கூட்டத்திற்கு கட்டளையிடுவார் விஜயன்.
இப்படியொரு பெரியவர் ஒருவர், பலமிக்க நபருடன் இருப்பதை பல படங்களில் இருப்பதைப் பார்த்திருக்கிறோம்.
சினிமாவில் மட்டுமில்லாமல், யதார்த்த வாழ்க்கையிலும் சில பெரிய தலைகளுக்குப் பக்கத்தில் இப்படி ஒருவர் இருப்பார். அந்த வகையறாவைச் சேர்ந்தவர் இந்த புஸ்ஸி ஆனந்த். இவரை தன்னுடனேயே வைத்திருக்கும் அந்த பவர்ஃபுல்லான ஹீரோ விஜய்.
விஜய் என்னும் மாஸ் ஹீரோவுக்கு, அவரது ரசிகர்களைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க, விஜயின் நிழலாக இருக்கிறார் புஸ்ஸி ஆனந்த். விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர்.
விஜயின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் இருந்து, தளபதியாக முக்கியத்துவம் பெறும் வரையிலும், கூடவே இருந்து வழிநடத்தியவர் விஜயின் அப்பா இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். இன்று இவருக்கு பதிலாக அந்த இடத்தை தக்கவைத்திருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்.
விஜயிடமும், அவரது ரசிகர்களிடையேயும் இவ்வளவு செல்வாக்கு பெற்றிருக்கும் புஸ்ஸி ஆனந்த் யார் என்ற கேள்வி உங்கள் மனதிற்குள் எழலாம்.
யார் இந்த புஸ்ஸி ஆனந்த் என்பதை பார்ப்போம்.
உங்களது ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் கூகுள் மேப்பில் ‘புஸ்ஸி’ என்று டைப் செய்தால், அது பாண்டிச்சேரியில் இருப்பதைக் காட்டும். முன்னாள் ப்ரெஞ்ச் ஆளுநர் புஸ்ஸி என்பவரின் நினைவாக இப்பகுதிக்கு அவரது பெயரை வைத்துவிட்டார்கள்.
இந்த புஸ்ஸி பகுதிக்குள் நுழைந்தால், மீனவர்கள் அதிகம் வசிக்கும் மீனவக் குடியிருப்பு என்பதை உணர முடியும். இங்குள்ள இளைஞர்களிடையே விஜய்க்கு மவுசு ரொம்பவே அதிகம்.
இப்படியொரு சூழலில், இந்தப் பகுதிக்குள் அடியெடுத்து வைக்கிறார் ஆனந்த். இவர் பாண்டிச்சேரியின் முன்னாள் அமைச்சர் அஷ்ரப்பின் உதவியாளர். ரியல் எஸ்டேட் பிஸினெஸ் செய்து வந்த ஒரு சாதாரண புதுச்சேரி குடிமகன்.
பள்ளிப்படிப்பு மட்டுமே படித்த ஆனந்துக்கு தனது பாஸ் அஷ்ரப்பை போலவே அரசியலிலும் களம் காணவேண்டுமென்ற ஆசை உள்ளுக்குள் இருந்தது.
அதை எப்படி சாதிப்பது என்று யோசித்த ஆனந்த், புஸ்ஸி பகுதியில் இருக்கும் விஜய் ரசிகர்கள் மூலம் அங்குள்ளவர்களுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்தால், எல்லோர் மத்தியிலும் எளிதில் பிரபலமாகி விடலாம் என கணக்குப் போட்டார். அவர் நினைத்தது போலவே அது நிகழ்ந்தது.
அங்குள்ள மக்கள் மத்தியில் ஆனந்த் பிரபலமானார். இதனால் விஜய் ரசிகர்களும் அவரை தங்களது கெளரவத் தலைவராக்கி அழகுப் பார்த்தார்கள்.
ஆனந்தின் பெயர் சென்னை சாலிக்கிராமம் ஷோபா கல்யாண மண்டபத்தில் இயங்கி வந்த விஜய் தலைமை ரசிகர் மன்றம் எதிரொலிக்க ஆரம்பித்தது.
இந்நிலையில் புதுச்சேரி காங்கிரஸில் ரங்கசாமிக்கும், கண்ணனுக்கும் இடையே மோதல் உருவானது. இதனால் புதுச்சேரி அரசியல் நிலவரம் கலவரமானது.
கண்ணன் கோபித்து கொண்டு காங்கிரஸை விட்டு வெளியேறி, புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். அரசியலில் சாதிக்க வேண்டுமென ஆசைப்பட்ட ஆனந்த், இந்த கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.
இதனால், ஆனந்திற்கு 2006 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸுக்கு புஸ்ஸி தொகுதியில் வெற்றி கிடைத்தது. அங்குப் போட்டியிட்ட ஆனந்த் சட்டமன்ற உறுப்பினரானார்.
அதேவேகத்தில் சாதாரண ஆனந்த், ‘புஸ்ஸி ஆனந்த்’ ஆனார்.
புதுச்சேரிக்கு வந்துப் போகும் எஸ்.ஏ. சந்திரசேகரிடம், புஸ்ஸி ஆனந்த் புகழை விஜய் ரசிகர்கள் போட்டு வைக்க, இன்றைக்குள்ள புஸ்ஸி ஆனந்தாக செல்வாக்கு பெறுவதற்கான அச்சாரம் அங்கு போடப்பட்டது.
விஜய்க்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட புஸ்ஸி ஆனந்திற்கு சீக்கிரமே கிடைத்தது அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் பதவி.
2011-ல் நடைபெற்ற தேர்தலில் புஸ்ஸி ஆனந்த் தோல்வியை தழுவியதால், தனது கவனம் முழுவதையும் விஜய் ரசிகர் மன்றம் மீது திருப்பிவிட்டார். அதற்கு ஒரு காரணமும் இருந்தது. எஸ்.ஏ. சந்திரசேகருக்கு விஜயை எப்படியாவது தமிழ்நாட்டு அரசியலில் களமிறக்கிவிட வேண்டுமென்ற ஆசை இருந்தது. இதையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்த புஸ்ஸி ஆனந்த், விஜய் அரசியலுக்கு வந்தால், தமிழ்நாடு அளவில் முக்கியத்துவம் பெறலாம் என்று கணக்குப் போட்டார்.
அதற்கேற்ற வகையில், விஜய் நடித்த ‘காவலன்; படம் வெளியாவதில் சிக்கல்கள் உண்டாயின. இதனால் கோபத்தில் கொந்தளித்த விஜய் ரசிகர்கள், ’நாளைய முதல்வரே’ என்று விஜயை அரசியலுக்கு வரும்படி போஸ்டர்கள் அடித்து குரல் கொடுத்தனர்.
அந்த நேரத்தில் இந்த பஞ்சாயத்தை விஜய் கொஞ்சம் கூட ரசிக்கவில்லை. இதனால் கோபமான விஜய், இப்படி போஸ்டர் அடித்து சிக்கல்களை பெரிதாக்கும் ரசிகர்களை மன்றங்களிலில் இருந்து நீக்குங்கள் என்று புஸ்ஸி ஆனந்திற்கு கட்டளைப் போட்டார் விஜய்.
புஸ்ஸி ஆனந்த் நீக்கிய ரசிகர்கள் அனைவருமே எஸ்.ஏ.சி.யுடன் நீண்ட காலம் பயணித்தவர்கள். விஜய் மன்ற நிர்வாகிகளாக பல ஆண்டுகள் செயல்பட்டவர்கள். 1993-ல் திருச்சியில் விஜய் ரசிகர் மன்றத்தை தொடங்கி, தலைமை மன்ற தலைவராக இருந்தவர் ஆர்.கே.ராஜா. இவர் எஸ்.ஏ.சி.யின் வலதுகரமாக இருந்தவர். இவரையும் கொஞ்சம் கூட யோசிக்காமல் மன்ற பொறுப்புகளிலிருந்து தூக்கியடித்தார் புஸ்ஸி ஆனந்த்.
இந்த நடவடிக்கைகளின் மீது எஸ்.ஏ.சி.க்கு கடும் அதிருப்தி. இதன் தொடர்ச்சியாகவே எஸ்.ஏ.சி., ‘விஜய்யை சுற்றி கிரிமினல்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து மகனை மீட்பது தந்தையாகிய என் கடமை’ என்று வருத்தமுடன் கூறினார்.
ரசிகர்களை மன்றத்திலிருந்து நீக்கிய புஸ்ஸி ஆனந்திற்கும், விஜய் அரசியலுக்கு வரவேண்டுமென்று ஆசைப்பட்ட எஸ்.ஏ.சி-க்கும் இடையே மறைமுகப் போர் உண்டானது.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட ரசிகர்கள், போட்டியிட்ட 169 தொகுதிகளில் 115 இடங்களில் வெற்றி பெற்றனர். இந்த வெற்றி புஸ்ஸியை விஜயின் அருகிலேயே பிஸியாக இருக்க வைத்துவிட்டது.
இந்த அருகாமை விஜயையும் அவரது பெற்றோரையும் கொஞ்சம் கொஞ்சமாக விலக வைத்திருக்கிறது.
இன்று பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை இயக்கும் தளபதியின் மூத்த சேனாதிபதியாகி இருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்.
விஜய்க்கு அடுத்து நான்தான் என்பதையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். இதற்கு விஜய் ரசிகர்கள் இவரது காலில் விழுவதையும், அவர் கண்டும் காணாமல் இருப்பதையும் விஜய் ரசிகர்களே குறிப்பிடுகிறார்கள்.
அடுத்து விஜயின் அரசியல் பிரவேசத்திற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் செய்த வேலை, விஜய் ரசிகர்களை ‘வருங்கால முதல்வர் விஜய்’ என்று பனையூர் அலுவலகத்தில் கோஷமிட வைத்து ஒரு அரங்கேற்றத்தை நிகழ்த்தியதுதான்.
அதாவது விஜய் அரசியலில் இறங்குகிறார் என்பதையும் தனது பாணியிலேயே சொல்லாமல் சொல்லிவிட்டார் புஸ்ஸி ஆனந்த்.