இளையராஜாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கும் முயற்சியை ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்பாகவே தனுஷ் ஆரம்பித்துவிட்டார்.
இளையராஜாவிற்கும் தன்னுடைய வாழ்க்கையை ஒரு படமாக எடுக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. ஆனால் அதை அவர் வெளிக்காட்டி கொள்ளவில்லை. தனுஷ் அப்படியொரு எண்ணத்துடன் வரவே, உடனே உற்சாகமாகி விட்டார்.
ஆரம்பத்தில் இந்தப் படத்தை தனுஷ் இயக்குவதாகதான் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. இளையராஜாவாக தனுஷ் நடிக்க இருப்பதாக சொன்னதோடு, இயக்கவும் இருப்பதாக தனுஷ் கூற, பேச்சுவார்த்தை அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தது.
ஆனால் நான்கைந்து முறை நடைபெற்ற சந்திப்புகளுக்குப் பிறகு, தனுஷ் நடிக்க, வேறொரு இயக்குநரை வைத்து இயக்கவும் முடிவானது. அப்போதுதான், தனுஷ் அருண் மாதேஸ்வரன் பெயரை முன்வைத்திருக்கிறார். தனுஷ் நடித்து அருண் மாதேஸ்வரன் இயக்கிய ‘கேப்டன் மில்லர்’ படம் சரியாக போகவில்லை. இருப்பினும் அருண் மாதேஸ்வரன் மீது நம்பிக்கை வைத்து, இளையராஜாவிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான் என தனுஷிடம் இளையராஜா பச்சைக்கொடி காட்டிவிட்டார்.
இப்படிதான் இளையராஜாவின் பயோபிக் உருவானது.
அடுத்து இசையின் ஞானியாக இருக்கும் இளையராஜாவின் வாழ்க்கையைப் படமாக எடுத்தால், அதற்கு யாரை இசையமைப்பாளராக களத்தில் இறக்குவது என்று பேச்சு எழுந்திருக்கிறது.
‘உங்களை விட வேறு யாரும் இந்த கஷ்டமான பணியை செய்ய முடியாது’ என்று தனுஷ் சொல்லிவிட்டாராம். நானே என்னுடைய பயோபிக் படத்திற்கு இசையமைத்தால் நன்றாக இருக்குமா என்று ஒரு கணம் யோசித்தாராம் இளையராஜா. ஆனால் தனுஷ் இளையராஜாவை சம்மதிக்க வைத்துவிட்டாராம்.
ஆனால் இப்படம் குறித்த அறிவிப்பு விழாவின் போது வெளியிட்ட போஸ்டரில் இசையமைப்பாளர் யார் என்ற விவரம் மட்டும் குறிப்பிடப்படவில்லை.
எல்லோருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று இசையமைப்பாளர் இளையராஜா என்று குறிப்பிடாமல் விட்டுவிட்டார்களாம்.