பொங்கலுக்கு ஷங்கர் இயக்கிய ‘கேம்சேஞ்ஜர்’, சுந்தர்.சியின் ‘மதகஜராஜா’, பாலாவின் ‘வணங்கான்’, கிருத்திகா இயக்கிய ‘காதலிக்க நேரமில்லை’. கிஷன்தாஸ் நடித்த ‘தருணம்’, விஷ்ணுவர்தன் இயக்கிய ‘நேசிப்பாயா’, ஷேன் நிகாம் நடித்த ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. இந்த படங்களில் ஜெயித்தது எது என்று சினிமா வட்டாரத்தில் விசாரித்தோம்…
இந்தாண்டு பொங்கலுக்கு அஜித்தின் ‘விடாமுயற்சி’தான் பெரிய படமாக வர இருந்தது. சில சூழ்நிலைகளால் அந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக, பல சின்ன படங்கள் களத்தில் குதித்தன. வந்த படங்களில் ஷங்கரின் கேம் சேஞ்ஜர்தான் பெரிய பட்ஜெட்டில் உருவான படம். ஆனால், அது தெலுங்கு டப்பிங் என்பதால் தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தவிர, படத்தின் கதை, பாடல்களில் தெலுங்கு வாடை அடித்ததாலும், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததாலும் தமிழகத்தில் வெற்றி பெறவில்லை. தெலுங்கிலும் கூட பெரிய வசூலை அள்ளவில்லை.
மலையாளத்தில் ஓரளவு பிரபலமான ஷேன் நிகாம் நடித்த படம் ‘மெட்ராஸ்காரன்’. புதுக்கோட்டையில் கதை நடப்பதாக சீன்கள் அமைக்கப்பட்டன. ஆனால், ஹீரோவின் வாய்ஸ், போராடிக்கும் சீன்கள், சுமாரான கிளைமாக்ஸ் போன்ற காரணங்களால் மெட்ராஸ்காரனுக்கு தமிழகத்தில் பெரிய வரவேற்பு இல்லை. மலையாளத்திலும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் முரளியின் இளையமகன் ஆகாஷ் ஹீரோவாக அறிமுகமான படம் ‘நேசிப்பாயா’. யுவன் இசை, போர்ச்சுக்கல்லில் படப்பிடிப்பு என பெரிய எதிர்பார்ப்புடன் படம் வெளியானது. ஆனால், விஷ்ணுவர்தன் ஏமாற்றிவிட்டார். சில வெளிநாட்டு காட்சிகள், பாடல் ஓகே. மற்றபடி, கமர்ஷியல் விஷயம் அதிகம் இல்லை. ஹீரோயின் அதிதி ஷங்கர் படத்துக்கு மைனஸ் என்கிறார்கள் ரசிகர்கள்
கிருத்திகா இயக்கிய ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் ஜெயம்ரவி, நித்யாமேனன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்துக்கு இருவேறு கருத்துகள் ஏ கிளாஸ் ஆடியன்ஸ் சிலர், வித்தியாசமான சினிமாவை விரும்புகிறவர்களுக்கு படம் பிடித்துள்ளது. நித்யாமேனன் நடிப்பை, ரகுமான் இசையை அவர்கள் ரசிக்கிறார்கள். ஆனால் பொழுதுபோக்கை விரும்பும் பி, சி ஆடியன்ஸுக்கு இப்படம் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. படத்தில் இடம் பெற்ற சில சர்ச்சை காட்சிகள், அதிக ஆங்கில கலப்பு வசனங்கள் படத்தை வெகுஜன மக்களிடம் போய் சேர்க்க தவறிவிட்டது
பாலா இயக்கிய ‘வணங்கான்’ படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றுள்ளது. அருண்விஜய் நடிப்பு, ஹீரோயின் ரோஷிணி, தங்கை ரிதா கேரக்டர்கள் பலரால் பாராட்டப்படுகின்றன. இது அக்மார்க் பாலா படம் என்பதால், அந்த ஸ்டைலை ரசிக்கிறவர்களுக்கு படம் ஓகே. ஆனாலும், பெரியளவில் வசூலை படம் இன்னமும் ஈட்டவில்லை. நாட்கள் செல்ல, செல்ல பிக்அப் என நினைக்கிறது படக்குழு