தமிழ்நாட்டின் தொழில்நுட்பத் துறைஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் The Wire செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார். தற்போது அந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை வழங்குவோம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். அவரின் இந்தக் கருத்து தமிழ்நாட்டில் புயலைக் கிளப்பியது. புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு, 3,5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, தொழிற்கல்வி என்ற பெயரில் குலக் கல்வி ஆகியவைகளை நடைமுறைப்படுத்த புதியக் கல்விக் கொள்கைமூலம் மத்திய பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது எனக் குறிப்பிடும் தமிழ்நாடு அரசு, புதியக் கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறது.
இந்த நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் The Wire செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார். அந்த பேட்டியில் கேட்கப்பட்ட சில கேள்விகள் அதன் பதில்கள்…
மத்திய அமைச்சர் புதியக் கல்விக் கொள்கையின் அறிக்கையில் ‘இந்தி கட்டாயம்’ என்ற வார்த்தையைக் கூட குறிப்பிடாத போது தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அச்சப்படக் காரணம் என்ன?”
எங்களின் கல்வி என்பது கலாசார ரீதியாகவும், அரசியல், கொள்கை ரீதியாகவும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கல்வியில் கவனம் செலுத்துகிறோம். அதுதான் சமூக நீதியின் அடிப்படை. நூற்றாண்டுகளுக்கு முன்பே, அதாவது 1921-லேயே ஆண் – பெண்ணுக்கு கல்வி கட்டாயம் என்ற திட்டத்தை செயல்படுத்தியது நீதிக் கட்சி. எமெர்ஜென்ஸி காலத்தில் கல்வித்துறை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. ஆனாலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு கல்வித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. எனவே மத்திய அரசு தமிழ்நாட்டில் பள்ளியை எப்படி நடத்த வேண்டும் என்று வற்புறுத்த முடியாது என்பதை நம்புகிறோம்.
பொதுப் பட்டியலுக்குச் சென்ற கல்வித்துறை, மழலையர் பள்ளி முதல் 12-ம் வகுப்பு வரை மாநில அரசின் பாடத்திட்டத்தில்தான் படிக்க முடியும். பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும்போதுதான் அந்தக் கல்வி இந்தியா முழுமைக்கும் செல்லுபடியாகவேண்டும் எனும்பட்சத்தில் மத்திய அரசின் கல்விக் கொள்கையின்படி பாடத்திட்டம் அமைக்க வேண்டும். இதுதான் பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை இரண்டு அரசுகளும் சேர்ந்து நிர்வகிக்கும் முறை. நான் அந்த கல்விக் கொள்கை அறிக்கையைப் பலமுறை படித்திருக்கிறேன். அதில் எங்கெல்லாம் இந்தி என்ற வார்த்தை இருக்கிறது, எங்கெல்லாம் சமஸ்கிருதம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். எங்களை மக்கள் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். எங்கள் மக்களுக்கு எது தேவை என்பது எங்களுக்குத் தெரியும். இருமொழிக் கொள்கை மூலம்தான் நாங்கள் இந்த வளர்ச்சியை அடைந்தோம். எங்கள் மாநிலத்துக்கு மும்மொழிக் கொள்கை தேவையில்லை.
தமிழ்நாடு பிடிவாதமாக புதியக் கல்விக் கொள்கையை புறக்கணிக்க காரணம் என்ன? சிறுவயதில் மாணவர்களால் பல மொழிகளை இலகுவக கற்றுக்கொள்ள முடியுமே?
உங்களின் இந்த எண்ணத்துக்கு வாழ்த்துகள். ஆனால் உத்தரப்பிரதேசத்தில், பீகாரில், குஜராத்தில் எத்தனை மாணவர்களுக்கு மூன்று மொழி தெரியும். அது கூட வேண்டாம்… எத்தனை மாணவர்களுக்கு இரண்டு மொழித் தெரியும்? கடந்த 75 ஆண்டுகால இந்திய அரசில், மும்மொழிப் படிக்கும் மாநில மாணவர்கள் தமிழ்நாட்டை விட கல்வியில் சிறந்து விளங்குவதற்கான ஏதேனும் தரவுகள் உண்டா? தமிழ்நாடு அரசு இருமொழிக் கொள்கையில் தெளிவாக இருக்கிறது. அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, சமூக முன்னேற்ற ரீதியாக கல்விக்கொள்கையை சரியாக வழிநடத்தி அதில் முன்னேற்றத்தையும் காண்பித்திருக்கிறோம். எங்கள் கல்விக் கொள்கையை மாற்றுவதற்கு ஒரே ஒரு சரியான ஆதாரம்… தமிழ்நாட்டை விட கல்வித் தரத்தில் முன்னேறிய மும்மொழிக் கொள்கையில் படித்த ஒரு மாநிலத்தைக் காட்டுங்கள்… பார்க்கலாம்.”
இதற்கு முன்பான கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றிருக்கிறதுதானே… ஆனால் இந்தக் கொள்கையில் அதையும் தளர்த்தி, இந்தி கட்டாயம் எனக் குறிப்பிடக்கூட இல்லையே?
1952-ல் தமிழ்நாடு மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோதிலிருந்து தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை எப்போதும் ஏற்றதில்லை. மேலும், மும்மொழிக் கொள்கை என்று வரும்போதெல்லாம் இதற்கு முன்பிருந்த எந்த மத்திய அரசும் இந்தளவு கல்விக் கொள்கையில் மூக்கை நுழைத்து கட்டாயப்படுத்தியதில்லை. இவ்வளவு மூர்க்கமாக நிதியை தடுத்து வைத்துக்கொண்டு ஒரு கொள்கையை திணிக்க முயற்சிக்கவில்லை. எங்களிடம் 70 ஆண்டுக்கால கல்விக் கொள்கையின் தகவல்கள், அதனால் நடந்த முன்னேற்றங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் இருக்கிறது. அப்படி உங்களிடம் ஏதேனும் இருக்கிறதா என்பதுதான் எங்கள் கேள்வி. இந்தியா மட்டுமல்ல உலகின் எந்தப் பகுதியிலிருந்தேனும் மும்மொழிக் கொள்கையினால் நடந்த மாற்றங்கள் குறித்த தகவல்கள் இருந்தால் காண்பியுங்கள்.”
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மூன்று மொழி என்பது அந்தந்த மாநிலத்தின் விருப்ப மொழி என்று குறிப்பிடுகிறார். அப்படியானால் தமிழ், ஆங்கிலம், கிளாசிக்கல் தமிழ் ஆகிய மூன்றையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தலாமே?
இது அவரின் தனிப்பட்ட கருத்து. இதை அவர் தேர்தலில் நின்று, வென்று, ஆட்சியமைத்து செயல்படுத்தட்டும். அதில் எங்களுக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், அந்த மூன்றாவது மொழியின் மூலம் எங்கள் மாணவர்களுக்கு என்ன லாபம்? இப்போதைய காலகட்டத்தில் கற்றல் முறை என்பதும், கற்றுக்கொடுப்பது மிகவும் சிரமமான விஷயமாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசு இதில் தேர்ந்து, இரு மொழிக் கொள்கையில் முறையான வளர்ச்சியை பெற்றிருக்கிறது. எங்களின் கல்விக் கொள்கையில், பல்வேறு துறை சார்ந்தக் அறிவை, அறிவியலை, உயிரியலை, கலாசாரத்தை புரிந்துக்கொள்வதற்கு தாய்மொழிக் கல்வியான தமிழும், அதை உலகுக்கு சொல்வதற்கு ஆங்கிலமும் இருக்கிறது. இதில் எங்கள் அரசு திருப்தியாக பணியாற்றிவரும் போது மூன்றாவது மொழி எதற்கு?” என்று பிடிஆர் கூறினார்.