தவெக ஆரம்பித்து ஓராண்டு முடிந்து இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் குறிக்கும் வகையில் அக்கட்சியின் நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகே இன்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது…
அரசியலை பொறுத்தவரை யார், யாரை எதிர்ப்பார்கள் என்று கணிக்கவே முடியாது. இங்கு நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது ஜனநாயக உரிமை என்று சொல்வார்கள். ஆனால் மக்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்துப் போன ஒருவன் அரசியலுக்கு வருகிறான் என்றால், அதை நல்லவர்கள் எல்லாம் வரவேற்பார்கள். ஒரு சிலருக்கு மட்டும் கொஞ்சம் எரிச்சல் வரத்தானே செய்யும்.
இதுவரை நாம் சொன்ன பொய்யை நம்பி மக்கள் நமக்கு ஓட்டு போட்டார்களே, ஆனால் இவன் சொல்வது மக்கள் மனதுக்கு நெருக்கமாக உள்ளதே, இவனை எப்படி க்ளோஸ் செய்யலாம் என்று நினைக்கின்றனர். அதில் என்ன பேசுவதென்று தெரியாமல், வர்றவன் போறவன் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறான் என்று சொல்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் நமக்கு எதிராக பேசுவதைப் போல. இப்படிப்பட்ட ஒரு அரசியல் களத்தில் கொஞ்சம் கூட பயம் இல்லாமல், வரும் எதிர்ப்புகளை இடது கையால் தள்ளிவிட்டு நம்முடைய தவெக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
நம்முடைய மாவட்ட நிர்வாகிகள் எல்லாருமே இளைஞர்களாக இருக்கிறார்கள் என்று சொல்கின்றனர். அண்ணா, எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது அதில் இருந்தவர்கள் இளைஞர்கள்தான். அதுதான் வரலாறு. கட்சி நிர்வாகிகள் எல்லாருமே சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்கிறார்கள். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான் பெரிதாக சாதித்திருக்கிறார்கள். நம் கட்சி பண்ணையார்களுக்கான கட்சி இல்லை. அந்த காலத்தில் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள். ஆனால் இப்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களாக மாறிவிடுகிறார்கள்.
மக்களின் நலனை பற்றியோ, நாட்டின் நலனை பற்றியோ கவலையில்லாமல் வெறும் பணம் பணம் மட்டும்தான். இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதுதான் நம்முடைய முதல் வேலை. ஜனநாயக முறைப்படி அதை செய்வதற்கு தான் 2026 தேர்தலை சந்திக்க இருக்கிறோம். தேர்தலை சந்திக்க பூத் கமிட்டி ஏஜென்ட் மிக முக்கியம். தமிழகத்தில் பெரிய பெரிய கட்சிகளுக்கு தான் பூத் கமிட்டி ஏஜென்ட் வலுவாக இருப்பதாக சொல்வார்கள். தவெகவும் பூத் ஏஜென்ட்களை நியமித்து, கூடிய பூத் கமிட்டி மாநாடு நடத்தப்போகிறது. அன்றைக்குத் தெரியும், தவெக எந்தவொரு பெரிய கட்சிக்கும் சளைத்தது இல்லை.
இப்போது ஒரு புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பிவிட்டுள்ளார்கள். மும்மொழி கொள்கை. மும்மொழி கொள்கையை அமல்படுத்தாவிட்டால் கல்விக்கான நிதியை மாநில அரசுக்கு கொடுக்கமாட்டார்களாம். எல்கேஜி, யூகேஜி பசங்க சண்டை போடுவார்கள் இல்லையா, அது போல் இந்த விஷயத்தில் நடந்துகொள்கிறார்கள். நிதியை கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை. வாங்க வேண்டியது இவர்களின் கடமை.
ஆனால் இவர்கள் இருவரும், அதான் நமது பாசிசமும், பாயசமும் பேசிவைத்துக் கொண்டு மாற்றி மாற்றி சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் அடித்துக் கொள்வது போல் அடித்துக் கொள்வார்களாம், அதை நாங்கள் நம்ப வேண்டுமாம். What Bro.. very Wrong Bro. யார் சார் நீங்கள் எல்லாம் எங்கே இருக்கிறீர்கள்.
இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். தமிழகம் சுயமரியாதை உள்ள ஊர். நாம் எல்லோரையும் மதிப்போம், ஆனால் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டோம். எல்லா மொழிகளையும் மதிப்போம். அதில் மாற்றுக்கருத்து கிடையாது. தனிப்பட்ட மொழிகளை யார் வேண்டுமென்றாலும் படிக்கலாம்.
அது அவர்களது தனிப்பட்ட உரிமை. ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை மீறி, மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழி கொள்கையை, கல்வி கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறொரு மொழியை வலுக்கட்டாயமாக அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால் தவறு. அதனால், தமிழக வெற்றிக் கழக சார்பில் பொய் பிரச்சாரங்களை புறந்தள்ளிவிட்டு உறுதியாக எதிர்க்கிறோம். நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும்.