No menu items!

தை மகளை வரவேற்போம் – தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

தை மகளை வரவேற்போம் – தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை செவ்வாய்கிழமை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முதல்வர் மு,க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது..

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு:

லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், மாக் பிஹு பண்டிகைகளை முன்னிட்டு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து நாட்டுமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளங்களாக இந்த பண்டிகைகள் திகழ்கின்றன. அவை உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும் இந்த திருவிழாக்கள் இயற்கையுடனான நமது இணக்கமான உறவை வெளிப்படுத்துகின்றன. மக்கள் புனித நதிகளில் புனித நீராடி இந்த சந்தர்ப்பங்களில் தொண்டு செயல்களைச் செய்கிறார்கள்.

பயிர்களுடன் தொடர்புடைய இந்த பண்டிகைகள் மூலம், தேசத்திற்கு உணவளிக்க அயராது உழைக்கும் கடின உழைப்பாளி விவசாயிகளுக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம். இந்த பண்டிகைகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நாம் அதிக தீவிரத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்

முதல்வர் ஸ்டாலின்:

சமத்துவமே தமிழரின் பண்பாடு என்பதை உரக்கச் சொல்கின்ற வகையில், சாதி, மத பேதமின்றி, இயற்கையைப் போற்றி, உழைப்புக்கு முதல் மரியாதை செலுத்தி, உழவுக்குத் துணை நின்ற கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மனிதநேயத் திருவிழாதான் பொங்கல். அது ஒன்றுதான் நம் பண்பாட்டுத் திருநாள் என்பதைத் திராவிட இயக்கம் நிலைநாட்டி, மக்களின் திருவிழாவாகக் கொண்டாடச் செய்து வருகிறது.

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, பரிசு வழங்க வேண்டும். மக்கள் பங்கேற்புடன் பண்பாட்டுத் திருவிழாவாக, பொங்கல் நன்னாளைக் கொண்டாடுவோம். ‘இன்பம் பொங்கும் தமிழ்நாடு’ என்று ஒவ்வொரு இல்லத்தின் வாயிலிலும் வண்ணக் கோலமிட்டு, தை மகளை வரவேற்போம். தமிழ்த் தாயைப் போற்றிடுவோம். மகிழ்ச்சிப் பெருவிழாவாகப் பொங்கலைக் கொண்டாடுவோம்.

எடப்பாடி பழனிசாமி:

மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளின் முதல் பண்டிகையாக, போகிப் பண்டிகை தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என நான்கு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.

அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், மக்கள் அனைவரும் குன்றா நலமும், குறையா வளமும், மங்கா புகழும், மாசிலா செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை:

‘உழவே தலை” என உழைக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து நிலத்தைப் போற்றிய மக்கள் நம் முன்னோர்கள். மனிதன் மட்டுமல்ல, மற்ற உயிரினத்தையும் தன்னோடு இணைத்து வாழ்ந்த சமூகம் நம்முடையது. இனம், மண், மக்கள், விளைச்சல், உணவு இவை அனைத்துக்கும் சேர்த்துக் கொண்டாடும் ஒற்றை விழாதான் பொங்கல் பெருவிழா. வருகிற பொங்கல் திருநாளை தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி, அனைத்து உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

உலகில் இயற்கையை கொண்டாடும் ஒரே இனம் தமிழினம் தான். வாழ்க்கைக்கும், முன்னேற்றத்திற்கும் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் இனமும் தமிழினம் தான். தமிழ்நாட்டை பீடித்திருக்கும் அனைத்து தீமைகளும் விலக வேண்டும். அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், நன்மை, அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம், சமூகநீதி ஆகியவை செழிக்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் தைத்திருநாளும், தமிழ்ப் புத்தாண்டும் எல்லா நன்மைகளையும் வழங்கட்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம்:

பொங்கல் திருநாள் தமிழர்களின் நன்றி மறவா பண்பினை உலகுக்கு உணர்த்தும் திருநாள். தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பார்கள். இதற்கேற்ப தமிழ்நாட்டு மக்களுக்கு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்து, இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல், இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள் என்று வாழ்த்தி, அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...