Freedom at midnight (ப்ரீடம் அட் மிட்நைட் – இந்தி) – சோனி லைவ்
இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தை மையப்படுத்தி லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லேப்பியர் ஆகியோர் எழுதிய புத்தகம் ’ப்ரீடம் அட் மிட்நைட்’. புத்தகமாக பலரையும் கவர்ந்த இது, இப்போது வெப் தொடராக சோனி லைவ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை தொடர்பாகவும், இந்தியாவின் முதல் பிரதமர் யார் என்பது தொடர்பாகவும் சுதந்திரத்துக்கு முந்தைய காலத்து தலைவர்களிடையே இருந்த கருத்துகளை இத்தொடர் வெளிப்படுத்துகிறது.
ஸ்டூடியோ நெக்ஸ்ட் உடன் இணைந்து எம்மே என்டர்டெயின்மெண்ட் இந்த தொடரை தயாரித்துள்ளனர். இந்த தொடரில் மகாத்மா காந்தியாக சிராக்வோஹ்ரா, நேருவாக சித்தாந்த் குப்லா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். நிகில் அத்வானி இயக்கியுள்ளார்.
வரலாறு சார்ந்த கதைகளை விரும்புபவர்களுக்கு ஏற்ற வெப் தொடர் இது.
Devara: Part 1 (தேவரா முதல் பாகம் – தெலுங்கு) – நெட்பிளிக்ஸ்
கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், பிரகாஷ்ராஜ், கலையரசன் உள்ளிட்டோர் நடித்த தேவரா திரைப்பட்த்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
ஆந்திராவில் நடந்த ஒரு துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்கும் உளத்துறை அதிகாரிகள் அதன் விசாரிணையில் பல அதிரடி சம்பவங்களை தெரிந்து கொள்கிறார்கள். ரத்னகிரி என்ற மலைகிராமத்தில் செங்கடல் பகுதியில் வசிக்கும் மக்கள் காலம் காலமாக கடற்பகுதில் பெரும் கடத்தல் செயலில் ஈடுபடுகிறார்கள். இது ஆளும் தரப்பை சேர்ந்த மந்திரிகள் தலையீட்டால் ஆயுதக்கடத்தலாக மாறுகிறது. இதுதான் அவர்களின் வாழ்வாதாரமாக மாறிப்போய் விடுகிறது.
இதனை ஒரு முடிவுக்குக் கொண்டுவர அந்த கிராமத்து இளைஞன் தேவரா ஒரு திட்டம் போடுகிறார். அதன்பட்டி இனிமேல் மீன் பிடித்து விற்பது என்கிற முடிவுக்கு வருகிறார்கள். ஆனால் இதனை எதிர்க்கும் பைரா, அவரை மீறி கடற்கொள்ளைக்கு போக வேண்டும் என்கிறார். இதனால் மோதல் ஏற்படுகிறது. இறுதியில் என்ன நடக்கிறது என்பதை ஆக்சன் காட்சிகளோடு சொல்லியிருக்கிறார் இயக்குனர் கொரட்டாலா சிவா.
ஆக்ஷன் கதைகளை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.
கோழிப்பண்ணை செல்லதுரை (தமிழ்) – அமேசான் ப்ரைம்
சீனு ராமசாமி இயக்கத்தில் யோகிபாபு, ஏகன், சத்யா, ப்ரிகடா சகா உள்ளிட்டோர் நடித்த கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
சிறுவயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட செல்லதுரைக்கும் அவனது தங்கை ஜெயசுதாவுக்கும் கோழிப்பண்ணை வைத்திருக்கும் பெரியசாமி ஆதரவளிக்கிறார். பின் பெரியசாமியின் கோழிக் கடையில் பணியாற்றி தங்கையைக் கல்லூரியில் படிக்க வைக்கிறான் செல்லதுரை. அவரை, அருகில் பானைக்கடை வைத்திருக்கும் தாமரைச்செல்வி, காதலிக்கிறார். சூழ்நிலை காரணமாக அதை அவன் புறக்கணிக்கிறான். இந்நிலையில் தன் கல்லூரியில் அறிமுகமாகும் ஒருவருடன் தங்கைக்கு காதல் ஏற்படுகிறது. இதனால் செல்லதுரை வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? அவன் பெற்றோர் என்ன ஆனார்கள் என்கிற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது மீதிக் கதை
பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் இல்லாத, அமைதியான கதையுள்ள படத்தை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.
vivekanandan viralanu (விவேகானந்தன் வைரலாணு – மலையாளம்) – அமேசான் ப்ரைம்
மனைவியை விட்டு வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருக்கும் நாயகன், உடல் ரீதியாக இருவரையும் கொடுமைப்படுத்துகிறான். அந்த 2 பெண்களும் சேர்ந்து அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
பெண்ணியம் பேசும் இந்தக் கதை, பெண்ணின் உடலில் அவளுக்கு உள்ள உரிமையை எடுத்துச் சொல்கிறது.