No menu items!

பாக். அணு ஆயுத பூச்சாண்டிக்கு அஞ்ச மாட்டோம் – பிரதமர் மோடி

பாக். அணு ஆயுத பூச்சாண்டிக்கு அஞ்ச மாட்டோம் – பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணி அளவில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில நாட்களில் இந்தியாவின் வலிமையை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து வியப்பில் ஆழ்ந்தது. இந்த நேரத்தில் முப்படைகளுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறேன். நமது உளவு அமைப்புகள், விஞ்ஞானிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது லட்சியம் நிறைவேறி உள்ளது. நமது வீரர்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி தந்துள்ளனர். இந்த வெற்றியை நாட்டின் அனைத்து தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

நமது சகோதரிகள், மகள்களின் குங்குமத்தை அழிப்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பது அனைத்து தீவிரவாத அமைப்புகளுக்கும் தெள்ளத் தெளிவாக இப்போது உணர்த்தப்பட்டு உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் கிடையாது. இது கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்ச்சி. கடந்த 7-ம் தேதி அதிகாலை பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் துல்லிய தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டன. இதுபோன்ற தண்டனையை அவர்கள் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.

தீவிரவாத பல்கலைக்கழகங்கள்: நீண்டகாலமாக பாகிஸ்தானின் பாவல்பூரும் முர்டேவும் சர்வ
தேச தீவிரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக திகழ்ந்தன. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், லண்டன் சுரங்கப் பாதை ரயில்கள் மீதான தாக்குதல், பஹல்காம் தாக்குதல் உட்பட இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான சதித் திட்டங்கள் அனைத்தும் பாவல்பூர், முர்டேவில் உள்ள தீவிரவாத முகாம்களில் தீட்டப்பட்டன.

எனவே அங்கு செயல்பட்ட தீவிரவாத அமைப்புகளின் தலைமை அலுவலகங்களை அழித்து தரைமட்டமாக்கி உள்ளோம். இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.இந்திய எல்லைகளில் உள்ள குருத்வாராக்கள், கோயில்கள், கல்வி நிறுவனங்கள், வீடுகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவ தளங்களை குறிவைத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

பாகிஸ்தான் ராணுவம் பெரும் எண்ணிக்கையில் ட்ரோன்கள், ஏவுகணைகளை ஏவியது. அவை அனைத்தும் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்திய ராணுவத்தின் வலிமையைப் பார்த்து ஒட்டுமொத்த உலகமும் வியப்பில் ஆழ்ந்திருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தால் இந்தியாவின் எல்லைப் பகுதிகளை மட்டுமே தாக்க முடிந்தது. ஆனால் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் இதயத்தின் மீதே தாக்குதல் நடத்தியது. இந்திய ஏவுகணைகள், ட்ரோன்கள் பாகிஸ்தான் விமானப் படைத் தளங்களை மிகத் துல்லியமாக தாக்கின. கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பாகிஸ்தான் விமானப்படைத் தளங்கள் சேதமடைந்திருக்கிறது.

பாகிஸ்தான் தந்த உறுதிமொழி: இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியது. பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்தது. நிர்பந்தத்தின் காரணமாக கடந்த மே 10-ம் தேதி பாகிஸ்தான் ராணுவ டிஜிஎம்ஓ இந்திய ராணுவ டிஜிஎம்ஓ-ஐ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இனிமேல் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம். ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டோம் என்று பாகிஸ்தான் டிஜிஎம்ஓ உறுதி அளித்தார். இதன்பிறகே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.

ராணுவ நடவடிக்கையை நாங்கள் தற்காலிகமாக மட்டுமே நிறுத்தி வைத்திருக்கிறோம் அல்லது ஒத்திவைத்திருக்கிறோம். பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவு அளிக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறு எதுவும் கிடையாது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் எதிரிகளை துவம்சம் செய்தன. எங்களது அதிநவீன ஆயுதங்களை பார்த்து உலகம் வியப்பில் ஆழ்ந்திருக்கிறது.

பேச்சுவார்த்தை எப்போது?: உலக நாடுகளுக்கு தெளிவாக ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன். தீவிரவாதம், ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். வேறு எந்த விஷயம் குறித்தும் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது. தண்ணீரும் ரத்தமும் ஒரே நேரத்தில் பாயாது. வர்த்தகமும் தீவிரவாதமும் ஒருசேர பயணிக்க முடியாது. அணு ஆயுத பூச்சாண்டிக்கு அஞ்ச மாட்டோம். தீவிரவாத தாக்குதலுக்கு எங்களது பாணியில் தகுந்த பாடம் கற்பிப்போம். இது புத்தர் பிறந்த பூமி. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க விரும்புகிறோம். உலகத்தின் நன்மையை மட்டுமே விரும்புகிறோம்.

இறுதியாக இந்தியர்களின் வீரம், ஒற்றுமைக்கு மீண்டும் ஒருமுறை வீரவணக்கம் செலுத்துகிறேன்.இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...