இத்தனை நாள் மென்மையான போக்கில் ‘அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்’ எனச் சொல்லிவந்த இபிஎஸ், இப்போது ‘ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல’ என அடித்து ஆட ஆரம்பித்திருக்கிறார்.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணியை அமைத்த மேடையிலேயே, ‘எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர், ஆனால் கூட்டணி ஆட்சிதான்’ என்ற நெருப்பை பற்றவைத்துவிட்டு சென்றார் அமித் ஷா. அமித் ஷாவின் வார்த்தையை கெட்டியாக பிடித்துக்கொண்ட பாஜக தலைவர்கள் மேடைதோறும் கூட்டணி ஆட்சிதான் என பேசி வருகிறார்கள். பாஜகவின் வழியை பின்பற்றி பாமகவும் கூட்டணி ஆட்சிக்கு கொடி பிடிக்க ஆரம்பித்துவிட்டது.
அதிமுகவின் தலைவர்கள் எத்தனையோ முறை ‘கூட்டணி ஆட்சி இல்லை, அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்’ என சொன்னாலும், கூட்டணி ஆட்சி புகைச்சலை பாஜக கைவிடவே இல்லை. கூட்டணி ஆட்சி, அமைச்சரவையில் பங்கு என்றெல்லாம் பாஜகவினர் கனவுக் கோட்டையே கட்டிவிட்டார்கள். சமீபத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் ‘வருங்கால துணை முதல்வர்’ என சொல்லி நயினார் நாகேந்திரனையே அதிரவைத்தார் ஒரு நிர்வாகி. இப்படி நாளுக்கு நாள், அடுத்தடுத்த கட்டத்துக்கு பாஜக நகர்வதால், கிலியில் கிடக்கிறது அதிமுக வட்டாரம்.
இந்தச் சூழலில்தான் இபிஎஸ் இப்போது கிளர்ந்தெழுந்து ‘கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்கொள்ள நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல’ என அனல் கக்கியிருக்கிறார். கூடவே ‘கூட்டணி வேண்டுமென்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம்’ எனவும் தடாலடி காட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் ஆக்ரோஷத்தால் திகைத்து போயிருக்கிறது பாஜக தரப்பு. ‘அதிமுகவை பாஜக விழுங்க பார்க்கிறது, பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்துவிட்டார்கள். அதிமுகவிடம் அதிக தொகுதிகளை பாஜக மிரட்டி வாங்கும்’ என்றெல்லாம் திமுக பரப்பும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இபிஎஸ் அப்படி பேசினார் என அதிமுக தரப்பும், பாஜக தரப்பும் சமாதானம் சொல்லிக்கொண்டாலும், இரு தரப்பிலும் சலசலப்பு தெரிய ஆரம்பித்துவிட்டது.
முக்கியமாக, இது திமுகவுக்கு சொன்ன பதில் என்பதை விடவும், பாஜகவுக்கு இபிஎஸ் சொன்ன மெசேஜ் என்றே பார்க்கப்படுகிறது. இதன்பிறகாவது ‘கூட்டணி ஆட்சி’ என சொல்வதை பாஜக நிறுத்தும் என எதிர்பார்க்கிறது அதிமுக தரப்பு.
தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியது முதலே ‘கூட்டணி ஆட்சி’ என்ற விஷயத்தை பொறுமையாக மறுத்துவந்த இபிஎஸ், முதற்கட்ட பயணம் முடியும் தருவாயில் ‘ஏமாளிகள் அல்ல’ என பொங்கியெழுந்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணமாக வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் தனக்கு கிடைத்த வரவேற்பை பார்க்கிறார். ஏனென்றால் 2021 தேர்தலில் அதிமுக கூட்டணி பெரிய அடிவாங்கியது இந்த மண்டலங்களில்தான்.
2021 தேர்தலில் வட தமிழகத்தில் உள்ள 69 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 10-ல்தான் வென்றது. மத்திய மண்டலத்தில் உள்ள 46 தொகுதிகளில் 6-ல்தான் அதிமுக அணி வென்றது. இப்படி 2021-ல் கடுமையான பின்னடைவை சந்தித்த வட, மத்திய தமிழக பகுதிகளில் இப்போது கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பு, இபிஎஸ்ஸுக்கு பெரிய பூஸ்டாக மாறியுள்ளது.
மேலும், தொகுதி வாரியாகவும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களிடம் பேசி வருகிறார் அவர். அவர்களிடம் கிடைத்த ரெஸ்பான்சின் அடிப்படையில்தான் இப்போது பாஜகவுக்கு எதிராக அடித்து ஆட ஆரம்பித்துள்ளார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
‘கட்சியை கைப்பற்றியது முதல் எல்லா தேர்தலிலும் தோற்றவர் என இபிஎஸ் மீது திமுக தொடர்ந்து குற்றஞ்சாட்டுகிறது. இந்த விமர்சனத்தை இம்முறை மாற்றவேண்டும் என முடிவுக்கு வந்து விட்டார் இபிஎஸ். இந்த தேர்தல் பாஜகவுக்கு வேண்டுமானால் பரிசோதனை முயற்சியாக இருக்கலாம். ஆனால், அதிமுகவுக்கு வாழ்வா, சாவா தேர்தல்தான்.
ஒருவேளை 2026 தேர்தலிலும் அதிமுக தோல்வியை தழுவினால் முக்கிய நிர்வாகிகள் கூட, கட்சியில் நீடிப்பதை விரும்ப மாட்டார்கள். இதனால்தான், இப்போது எல்லாவற்றுக்கும் துணிந்து பாஜகவோடு மோதவும் தயாராகி விட்டார். அதேபோல விஜய், சீமான், பாமக என முக்கிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறார்’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
பலமுறை பல விதமாக சொல்லியும், ‘கூட்டணி ஆட்சிதான்’ என பாஜக தலைவர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பதால், கடும் எரிச்சலில் இருக்கிறது அதிமுக தரப்பு. ‘கூட்டணி ஆட்சி’ எனும் சொல் அதிமுக மீதான மக்களின் நம்பகத்தன்மையையே சிதைக்கும் என கருதுகிறார் இபிஎஸ். அதன் வெளிப்பாடாகவே இப்போது வெகுண்டு எழுந்திருக்கிறார் அவர்.