No menu items!

வினேஷ் போகட் – அதிரடியாய் கலைந்த கனவு!

வினேஷ் போகட் – அதிரடியாய் கலைந்த கனவு!

வினேஷ் போகட் (Vinesh Phogat) சந்தோஷம் ஒரு இரவுக்கு மேல் நீடிக்கவில்லை.

பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு நேற்று இரவுதான் முன்னேறி இருந்தார் வினேஷ் போகட். இதனால் இறுதிப் போட்டியில் தோற்றாலும் வெள்ளிப் பதக்கம் நிச்சயம் என்ற மகிழ்ச்சியில் இருந்தார். அவருக்காக ஒட்டுமொத்த இந்தியாவே மகிழ்ச்சியில் இருந்தது. ஆனால் இன்று காலையிலேயே அந்த மகிழ்ச்சி காணாமல் போயிருக்கிறது. 50 கிலோ எடையை விட சில கிராம்கள் எடை அதிகமாக இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் வினேஷ் போகட்.

இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது. வினேஷ் தனது எடையைக் குறைக்க இரவு முழுவதும் பல முயற்சிகள் எடுத்தும் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவரது எடை 50 கிலோவுக்கு மேல் சில கிராம்கள் அதிகமாக இருந்தன. இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் இதுதொடர்பாக மேற்கொண்டு கருத்துகள் ஏதும் தெரிவிக்கப்படாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

“வினேஷ் 100 கிராம் கூடுதல் எடையுடன் இருப்பது இன்று காலை கண்டறியப்பட்டது. விதிகள் இதை அனுமதிக்காததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்” என இந்திய அணியின் பயிற்சியாளர் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?

ஒலிம்பிக்கில் ஒவ்வொரு நாளும் மல்யுத்த போட்டிக்கு முன்னர், அப்போட்டியில் பங்கேற்கும் வீர்ர்களின் எடை பரிசோதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று காலை பரிசோதித்தபோது வினேஷ் போகட் 50 கிலோ எடையுடன் இருந்தார். ஆனால் நேற்று இரவு அரையிறுதிப் போட்டி முடிவடைந்த பின்னர் வினேஷ் போகட் எடை சோதனை செய்துள்ளார். அப்போது அவரது எடை காலையில் இருந்த்தைவிட 2 கிலோ அதிகரித்து இருந்தது. அதாவது 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கும் அவரது எடை, நேற்று இரவு 52 கிலோவாக இருந்தது. ஒரே நாளில் 2 கிலோ எடை ஏறியதற்கான காரணம் தெரியவில்லை. நேற்று அவர் சாப்பிட்ட உணவு போன்ற விஷயங்களால் அவரது எடை கூடியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும், இன்று காலை இறுதிப் போட்டிக்கு முன்னதாக எடையை சோதனை செய்து பார்க்கும்போது அது 150 கிலோ எடைக்கு மேல் இருக்க்க் கூடாது என்பதால் எடையைக் குறைக்க இரவு முழுவதும் கடுமையாக போராடி இருக்கிறார் வினேஷ் போகட். ஜாகிங், ஸ்கிப்பிங், சைக்கிளிங் என்று தன்னால் முடிந்த எல்லா வழிகளிலும் உடல் எடையைக் குறைக்க கடும் முயற்சி செய்துள்ளார். அதிலும் இந்த பயிற்சிகளை செய்தபோது அவர் ஸ்வெட்டர் போட்டு பயிற்சிகளை செய்த்தாக கூறுகிறார்கள். ஆனால் இரவு முழுக்க அப்படி செய்தும் அவரது எடையில் 1.850 கிலோ மட்டும்தான் குறைந்திருக்கிறது. 50 கிலோவைவிட சில கிராம்கள் அதிகமாக எடை இருந்திருக்கிறது.

இந்திய குழுவினர் அவரது எடையைக் குறைக்க மேலும் சில நிமிடங்கள் கேட்டுள்ளனர். ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதை நிராகரித்து, வினேஷ் பொகட் தகுதி இழந்த்தாக அறிவித்துள்ளது. ஒரே நாள் இரவில் பதக்கத்தை இழந்ததால் விரக்தியின் உச்சத்தில் உள்ள வினேஷ், இரவு முழுக்க பயிற்சிகளும் செய்த்தால் நீரிழப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இந்திய மல்யுத்த பஜ்ரங் புனியா, “எந்த வீரரும் வெற்றியை முதலில் கொண்டாடுவதில்லை, முதலில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனத் தெரியும். ஆனால் 50 கிலோவுக்கு கீழ் எடையைக் கொண்டுவருவது கடினம். ஆண்களுக்கு விரைவில் உடல் எடை குறையும், காரணம் அதிகமாக வியர்க்கும். பெண்கள் தான் மிகவும் சிரமப்படுகிறார்கள். 50 கிலோவுக்கும் கீழ் எடையைக் கொண்டுவர அவர்கள் போராட வேண்டியுள்ளது. வினேஷ் கடந்த 6 மாதங்களாக உடல் எடையை குறைக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தார். கொஞ்சம் தண்ணீர் மற்றும் ஒரு ரொட்டி அல்லது இரண்டு ரொட்டிகள் மட்டுமே சாப்பிட்டார். ஆனாலும் உடல் எடையை குறைப்பது மிகவும் கடினம் தான்” என்றார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வினேஷ், நீங்கள் ஒரு சிறந்த சாம்பியன், நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிப்பவர். இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் வேதனை உணர்வை, என் வார்த்தைகள் வெளிப்படுத்தும் என நம்புகிறேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. வலுவாக மீண்டு வாருங்கள்! நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

இந்த வேதனையான சூழலில் இருந்து மீண்டுவந்து இந்தியாவுக்காக எதிர்காலத்தில் பல பதக்கங்களை வினேஷ் போகட் வெல்வார் என்று எதிர்பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...