விக்ரம் மகா கலைஞனாக இருக்கலாம், ஆனால் சமீபகாலமாக அவர் நடித்தப் படங்கள் வசூல் விஷயத்திலும் சரி, தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டிக்கொடுக்கும் விஷயத்திலும் சரி கைக்கொடுக்கவில்லை.
இதனால் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்துவரும் ‘தங்கலான்’ படத்தையே பெரிதும் நம்பியிருக்கிறார். இந்தப்படத்தின் ஷூட்டிங் முடிந்து, அதற்கு பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. வருகிற 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது.
இதனால் விக்ரமின் மார்க்கெட் இப்பொழுது எப்படியிருக்கிறது என்பது ’தங்கலான்’ படத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே இருக்கும் என்பதால், வேறெந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை.
ஆனால் விக்ரமை வைத்து ‘இருமுகன்’ என்ற பெரும் பட்ஜெட்டிலான படத்தை எடுத்த ஷிபுதமீன் மீண்டும் விக்ரமுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளாராம். ஆனால் கதைதான் எதுவும் அமையாமல் இருந்தது.
சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. காரணம் இயக்குநர் எஸ்.யு. அருண் குமார். இவர் விக்ரமிற்கு ஒரு கதை சொல்லவே, விக்ரமிற்கு உடனே பிடித்துப் போயிருக்கிறது. உடனே அருண்குமாரை ஷிபுதமீன் உடன் பேச வைத்துவிட்டாராம்.
யாருமே எதிர்பார்க்காத வகையில் அந்த ப்ராஜெக்ட் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. ’தங்கலான்’ பற்றிய தகவல்கள் வெளிவந்த பிறகு, இப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட காத்திருக்கிறார்களாம்.
விக்ரம் இந்தப் படத்தின் கதைப் பிடித்து போய் நடிக்க ஒப்புக்கொண்டாலும், அமைதியாக மற்றொரு விஷயத்தையும் முடித்துவிட்டார். இதுவரை 20 கோடிவரை சம்பளமாக கேட்டு வந்த விக்ரம், இப்படத்திற்கு 40 வேண்டுமென கேட்டிருக்கிறாராம். தயாரிப்பாளரும் திடீர் சம்பள உயர்விற்கு ஒப்புக்கொள்ள விக்ரமின் சம்பளம் ஏறக்குறை இரண்டு மடங்கு அதிகமாகி இருக்கிறது.
அறுபது வயதிற்கு பிறகு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ரஜினி, கமலுக்குப் பிறகு விக்ரமும் இணைந்திருக்கிறார்.
பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கம்பானியன்!
பூஜா ஹெக்டேவுக்கு இப்போது முன்னணி ஹீரோக்களுடன் எந்தப் படமும் இல்லை. இவரது கால்ஷீட் டைரி நிரப்பப்படாமல், அப்படியே இருக்கிறது.
இதனால்தானோ என்னவோ கொஞ்சம் நிம்மதி வேண்டி, நாலைந்து பிகினி, ஷார்ட்ஸ், டாப்ஸ் உடன் மாலத்தீவுக்குப் பறந்துவிட்டார். அங்கே ஒரு வாரம் நிம்மதியாக பொழுதைக் கழித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்.
இங்கே வந்தவருக்கு அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை போலும். வங்கிக் கணக்கில் இதுவரை நடித்து சம்பாதித்தது போதுமான அளவு இருக்கவே, ஷாப்பிங்கிற்கு கிளம்பிவிட்டார்.
பூஜா ஹெக்டே வாங்கியது ஹேண்ட் பேக்கோ அல்லது காஸ்ட்யூமோ அல்லது காஸ்மெட்டிக் சமாச்சாரங்களோ அல்ல. அது ஒரு காஸ்ட்லி கார்.
சுமார் 4 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் எஸ்வி காரை வாங்கியிருக்கிறார் பூஜா ஹெக்டே. இந்த கார் மணிக்கு சுமார் 234 கிமீ வேகத்தில் ஜிவ்வென்று பறக்குமாம்.
பூஜா ஹெக்டே வீட்டின் போர்டிகோவில் ஏற்கனவே ஒளடி க்யூ7, ஜாக்குவார் செடான், போர்ஷா கேய்ன் மற்றும் பிஎம்டபிள்யூ 5 சிரீஸ் கார்கள் வரிசையாக நிற்கின்றன என்பது ஒரு ஆடம்பரமான தகவல்.
விஜய்க்காக காத்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ்!
விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் ‘லியோ’ வெளியாக கலவையான விமர்சனங்களை தொடர்ந்து பெற்று வருகிறது. இப்படத்தின் வசூல் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் வசூலை முறியடிக்குமா என்ற விவாதம் இன்னும் பரபரப்பை ஏற்றிக்கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த வசூல் பஞ்சாயத்துகளையெல்லாம் விஜய் கண்டுகொள்ளவே இல்லை. வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார்.
தனது படம் வெளியானதுமே, அடுத்தப்படத்திற்கான வேலைகளில் இறங்கிவிடுவதை விஜய் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார். இதனால் இப்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்திருக்கும் படத்திற்கு பிறகு, விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்பு கிளம்பியிருக்கிறது.
இந்நிலையில் ‘பிட்ஸா’, ’ஜிகர்தண்டா’, ‘பேட்ட’ என ஹிட் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், ‘நான் விஜய்க்கு ஏற்கனவே இரண்டு கதைகளை சொல்லியிருக்கிறேன். ஆனால் அந்த இரண்டு கதைகளும் விஜய்யை பெரிதாக ஈர்க்கவில்லை. அதனால் வெகு சீக்கிரமே விஜய்க்கு வேறு கதைகள் சொல்ல இருக்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கதை சொல்வதில் நான் பெரிய கில்லாடி இல்லை. ஆனால் எந்த கதையோ அதை திரைப்படமாக எடுத்துவிடுவேன். அதனால் எப்படியும் விஜய்க்கு பிடிக்கும் கதைகளை சீக்கிரமே சொல்வேன். அவருக்குப் பிடித்திருந்தால் வெகு சீக்கிரமே அவருடன் இணைந்து படம் பண்ணுவேன்’ என்று சொல்லியிருக்கிறார்.