No menu items!

விஜய் – எஸ்.ஏ.சி மோதல் பின்னணி!

விஜய் – எஸ்.ஏ.சி மோதல் பின்னணி!

ஜூலை 3-ம் தேதி, தமிழ் சினிமாவில் தனக்கென மாபெரும் ரசிகர் படையை தொடர்ந்து தக்க வைத்திருக்கும் ‘தளபதி’ விஜயின் அப்பா இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் 80-வது பிறந்த நாள். இதனால் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தனது சதாபிஷேகம் விழாவை மனைவி ஷோபா மற்றும் சில உதவி இயக்குநர்களுடன் மட்டும் கொண்டாடினார் எஸ்.ஏ.சி. மறக்காமல் தங்களது மகன் விஜய் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு கிளம்பினார்கள் எஸ்.ஏ.சி.யும், ஷோபாவும்.

ஒரு கோலாகலமான, அமர்க்களமான விழாவாக கொண்டாடப்பட வேண்டிய சதாபிஷேகத்தில் எஸ்.ஏ.சி. மற்றும் ஷோபா தம்பதியின் மகன் விஜய், மருமகள் சங்கீதா மற்றும் பேரக்குழந்தைகள் ஆப்சென்ட்.

விஜய், தனது தந்தையின் 80-வது பிறந்த நாளில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி யூட்யூடிப்பில் வீடியோக்களானது. பத்திரிகைகளில் கட்டம் கட்டப்பட்ட செய்தியானது.

அடுத்த மூன்று நாட்களிலேயே, விஜயின் நற்பணி இயக்கத்தின் சந்திப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் பனையூர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்புக்கு விஜய் நற்பணி இயக்கத்தை ஆரம்பித்த இயக்குநர் எஸ்.ஏ.சி-க்கு அழைப்பு இல்லை.

அப்பா பிறந்த நாளில் மகன் இல்லை. மகனின் நற்பணி இயக்கத்தின் சந்திப்பில் அதை ஆரம்பித்த அப்பா இல்லை. அப்படியென்றால் விஜய் – எஸ்.ஏ.சி இடையில் என்னதான் பிரச்சினை என்ற கேள்வி பல தளங்களில் எதிரொலிக்கிறது.

1993-ல் தனது மகன் விஜய்க்காக ரசிகர் மன்றத்தை தொடங்கினார் எஸ்.ஏ.சந்திரசேகர். சில ஆண்டுகளில் கழித்து ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாகவும் மாற்றினார். அதுவரையில் விஜய் – எஸ்.ஏ.சி இடையேயான உறவு நன்றாகதான் இருந்தது.

ஆனால் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் விஜய் நற்பணி அமைப்பான விஜய் மக்கள் இயக்கத்தை ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சியாக தொடங்கினார் எஸ்.ஏ.சி. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் பொது செயலாளர் எஸ்.ஏ.சி. எனவும், பொருளாளர் ஷோபா எனவும், தலைவர் பத்மநாபன் என்றும் எஸ்.ஏ.சி தரப்பிலிருந்து அறிக்கை வெளியானது. மேலும் இந்தக் கட்சி தேர்தல் ஆணையத்திலும் முறைப்படி பதிவு செய்யபப்ட்டது.

கடந்த 25 வருடங்களாக இந்த இயக்கத்தை முன்னின்று நடத்தி வருகிறேன். இதில் விஜயின் ரசிகர்களும் அதிகமிருக்கிறார்கள். அவர்களுக்கும் எதிர்காலத்தில் ஓர் அங்கீகாரம் வேண்டும். அதற்காகதான் இந்த கட்சி என்று எஸ்.ஏ.சி. வெளிப்படையாகவே தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்த முடிவு முழுவதும் என்னுடையதே. இதற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார் எஸ்.ஏ.சி.

விஜய்க்கு சம்பந்தமில்லை என்று அவரது அப்பா சொன்னாலும், அப்பாவும் மகனும் சேர்ந்து திட்டமிட்டு இதை செய்திருக்கிறார்கள் என்று பேச்சு கிளம்பியது. மேலும் விஜயகாந்த், சரத்குமார் வரிசையில் விஜயும் அரசியலில் களம் காணப்போகிறார் என்ற செய்திகள் அடிப்பட்டன. இதனால் கொஞ்சம் கலவரமானது விஜய் தரப்பு.

மறுநாளே. என் தந்தை எஸ்.ஏ.சி அவர்கள் ஒரு அரசியல் கட்சியை தொடங்கியிருப்பதாக ஊடகங்களின் மூலமாகதான் தெரிந்து கொண்டேன்.. அவர் தொடங்கியிருக்கும் கட்சிக்கும், தனக்கும் எந்தவிதமான நேரடியான மற்றும் மறைமுகமான சம்பந்தமும் இல்லை. அரசியல் தொடர்பாக அவர் எடுக்கும் முடிவுகள் என்னை கட்டுப்படுத்தாது. எனது ரசிகர்களும் அதில் சேர வேண்டிய கட்டாயம் இல்லை என்று விஜய் தரப்பிலிருந்து ஒரு கடுமையான அறிக்கை வெளியானது. அதோடு மட்டுமில்லாமல், எஸ்.ஏ.சி தொடங்கியிருக்கும் கட்சியின் எந்தவொரு நிகழ்வோ அல்லது செயல்பாட்டிற்கோ என்னுடைய புகைப்படத்தையோ, பெயரையோ பயன்படுத்த கூடாது. எஸ்..ஏ.சி, ஷோபா இருவரும் என் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமென விஜய் தரப்பிலிருந்து சென்னை மாநகர் 5-வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து. எஸ்.ஏ.சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

28.2.2021 அன்று நடைபெற்ற விஜய் மக்கள் இயக்கப் பொதுக்குழு கூட்டத்தில், நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு தங்களது அடிப்படை உறுப்பினர் பதிவியிலிருந்தும், பொறுப்புகளிலிருந்து விலகி கொள்ள ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அதனால் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது. விஜய் மக்கள் இயக்கம் தற்போது உயிர்ப்புடன் இல்லை என எஸ்.ஏ.சி தரப்பில் சூடான அறிக்கை வெளியானது.

இப்படி அப்பா தரப்பும் மகன் தரப்பும் அறிக்கைகளை அள்ளி அள்ளிவிட, ஒரு கட்டத்தில் தமிழகக்தில் பற்றிக்கொண்ட பரபரப்பான ஒரு விஷயம். பழசாகிப் போனது. தமிழக அரசியலில் கள நிலவரங்கள் மாற, எஸ்.ஏ.சியையும், விஜயையும் மக்கள் மறந்தே போய்விட்டார்கள்.

இந்தப் பின்னணியில் தற்போது விஜய் – எஸ்.ஏ.சி இடையேயான மனஸ்தாபம் உச்சத்தை எட்டியிருக்கிறது என்கிறார்கள். சினிமா வட்டாரத்தில் விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் கேட்டால், விஜய்க்கு அரசியலில் ஆர்வம் உண்டு. அரசியல் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ண முடியும். என்று எண்ணுபவர். ஆனால் அவருக்கு அரசியலில் அதிர வைக்கவேண்டுமென்ற ஆசை கிடையாது.

தளபதியின் தந்தைக்கு பாக்ஸ் ஆபிஸில் கில்லியாக இருக்கும் தனது மகனை பொலிட்டிக்கல் மாஸ்டராக களமிறக்கி, தமிழ்நாட்டின் முதல்வராக பட்டாபிஷேகம் நடத்த ஆசை அதிகமிருக்கிறது.

விஜய் எப்பொழுதும் அரசியல் நிலவரங்களை தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களிடம் மனம் விட்டு பேசுவார். பல நேரங்களில் அரசியல் தனக்கு சரிப்பட்டு வருமா என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது உண்டு. அதனாலேயே அரசியலில் அதிகம் அக்கறை காட்டியதில்லை. ஆனால் மறுபக்கம் எஸ்.ஏ.சி. அரசியலில் இறங்கினால் கோட்டை நிச்சயம் என்று நினைத்தார்.

இதனால்தான் விஜய் நற்பணி இயக்கம் தேர்தலில் அணில் போல் உதவும் என்றெல்லாம் அறிக்கை விட்டார். தேர்தலை எதிர்கொள்ள பூத் கமிட்டி அமைக்கப்பட்டது. அரசியல் வாடை நற்பணி இயக்க அலுவலத்தில் தூக்கலானது. இங்கிருந்துதான் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் கருத்து வேறுபாட்டின் ஆரம்பப்புள்ளி விழுந்தது.

மேலும் ரசிகர் மன்றத்தை பல வருடங்களாக, ஒரு ராணுவத்தைப் போல எஸ்.ஏ.சி கட்டுக்கோப்பாக வைத்திருந்தாலும், அவரை நற்பணி மன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ‘அப்பா’ என்றே அழைத்தாலும், அடுத்த தலைமுறை ரசிகர்களிடம் மாறுபட்ட கருத்து நிலவியது. தளபதி வேண்டாமென்று சொன்னாலும், ஏன் சுயமரியாதையை இழந்து, அரசியலில் இறங்க வேண்டும். தளபதியே ஆசைப்பட்டால், நேரடியாக களத்தில் இறங்கலாம் என்று பேச்சு எழ. நற்பணி மன்றத்தில் களையெடுக்கும் பணியை விஜய் மேற்கொண்டார்.

எஸ்.ஏ.சி.க்கு நெருக்கமான திருச்சி பத்மநாபன் தலைவர் பதவியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். அவருக்கு பதிலாக விஜய் ‘புஸ்சி’ ஆனந்திற்கு’ முக்கியப் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

இதற்குப் பிறகுதான் அப்பா – மகன் இடையே பேச்சுவார்த்தை முற்றிலுமாக இல்லாமல் போனது. எஸ்.ஏ.சியும் ஷோபாவும் அடையாறில் இருக்கும் தங்களது பழைய வீட்டிலும், விஜய் தனது குடும்பத்துடன் ஈ.சி.ஆர்.ரிலும் இருக்க, இரு குடும்பமும் சந்தித்து கொள்வது கூட இல்லை.

விஜய்க்கும் எஸ்.ஏ.சி,க்கும் இடையில் இந்தளவிற்கு விரிசல் விழ காரணம் புஸ்சி ஆனந்த்தான். விஜய் மக்கள் இயக்கத்தில் பரபரப்பாக ஒருவராக மாறுவதற்கு முன்பு, இவர் புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் அஷ்ரப்பிற்கு உதவியாளராக இருந்தார். 2006- தேர்தலில் புஸ்சி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அதனால் புஸ்சி ஆனந்த் என்ற பெயர் இவருக்கு வந்தது. எம்.எல்.ஏ ஆனாலும் புதுச்சேரியில் விஜய் ரசிகர் மன்றப் பணிகளில் தீவிரமாக இருந்தார். ஒரு எம்.எல்.ஏ. நம்முடைய ரசிகரா என்ற ஒரே பாயிண்டில் விஜய் கொஞ்சம் அசந்து போனார். கொஞ்சம் கொஞ்சமாக விஜய்க்கு நேரடியாக நெருக்கமானார். இந்த நெருக்கமே எஸ்.ஏ.சி.யை விட்டு விஜய் விலக வைத்தது.

விஜய் மக்கள் இயக்கத்தில், இரண்டு கூடாரங்கள் உருவானது. ஒன்று எஸ்.ஏ.சி. கூடாரம். மற்றொன்று புஸ்சி கூடாரம். ஆனால் நாளுக்கு நாள் புஸ்சி ஆனந்தின் கை ஓங்கிக் கொண்டேதான் இருப்பதாக இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

புஸ்சியின் வளர்ச்சிக்கு காரணம், எஸ்.ஏ.சியின் அரைக்குறையான முயற்சிகளும், அவசரத்தனமான கமெண்ட்களும்தான். ஜெயலலிதா கலைஞர் என இரு துருவங்கள் இருக்க இடையில் விஜயை களத்தில் இறக்க முயற்சித்தது முதல் தவறு. இதனால் உண்டான அதிர்வுகளை விஜய் நன்றாகவே உணர்ந்திருந்தார். இருந்த போது கூட எஸ்.ஏ.சி தன்னுடைய அரசியல் தண்டோராவை அவசியமான காலம் வரை சைலண்ட் மோடில் வைக்கவில்லை. இதுவே அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் விரிசல் உண்டாக காரணமாயிற்று.

இரு குடும்பத்திற்குள்ளும் பேச்சு வார்த்தை இல்லாமல் போனது. அம்மா ஷோபா மட்டும் மகனுடன் அவ்வப்போது பேசிக் கொள்வார். ஷூட்டிங் இருக்கும் பிஸியில் வழக்கம் போல் இரண்டு வார்த்தைகளுடன் அன்பைக் காட்டுவார். என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...