தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு விஜய்க்கு எதிர்ப்புகள் அதிகரித்து இருப்பதால் இந்த பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து ஒய் பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் பலருக்கும் எழுந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு இசட் ப்ளஸ் பிரிவு, இசட் பிரிவு, ஒய் ப்ளஸ் பிரிவு, ஒய் பிரிவு என்று பல்வேறு கட்ட பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் முதலில் இருப்பது இசட் ப்ளஸ் பாதுகாப்பு. தேசிய பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய பாதுகாப்பு படை, மத்திய தொழிற் பாதுகாப்பு படை, இந்தோ திபேத் எல்லை பாதுகாப்பு படை ஆகியவற்றில் இருந்து வீரர்களை தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த இசட் பிளஸ் பிரிவு. முன்னாள் பிரதமர்கள், முன்னாள் குடியரசு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இந்த பிரிவு பாதுகாப்பு வழங்கிட்டு வருகிறது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் இந்த இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்புதான் வழங்கப்பட்டு வருகிறது. 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு வழங்கும் இந்த குழுவிற்கு மாதம் 33 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது.
அடுத்தது இசட் பிரிவு. இந்த பிரிவில் தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 6 பேர் மற்றும் காவல் துறையினரை சேர்த்து 22 பேர் பாதுகாப்பு கொடுப்பார்கள். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இந்த பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்தது ஒய் ப்ளஸ் பிரிவு. தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் மற்றும், 6 போலீஸார் இந்த பிரிவில் வருபவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். சல்மான் கான், கங்கனா ரனாவத், ஷாருக்கான் போன்றோருக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாதுகாப்பு படைக்காக மாதம் தோறும் 15 லட்சம் செலவளிக்கப்படுகிறது.
இதற்கு அடுத்ததாக வரும் ஒய் பிரிவு பாதுகாப்புதான் இப்போது விஜய்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில், தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் உட்பட 8 காவலர்கள் இடம்பெற்றிருப்பார்கள். இந்த பிரிவுக்கு மாதம் 12 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. விஜய் மீது முட்டை வீசப் போவதாக சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நிலையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.