நடிகர் விஜய் மாணவர்களை உற்சாகபடுத்தும் விழாவை நடத்தியிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் திட்டத்தோடு அவர்களுக்கு ரொக்கம் பரிசும், தங்க, வைரம் நகைகளும் கொடுத்து அசத்தி வருகிறார். இந்த ஆண்டும் அந்த விழா பிரமாண்டமான ஏற்பாட்டோடு நடந்து முடிந்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய பிறகு நடக்கும் விழா என்பதால் எல்லாமே பக்காவாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் விஜய். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை தமிழகம் எங்குமிருந்து தேர்வு செய்யப்பட்டு அவர்களை தனி பேருந்துகளில் அழைத்து வரும் பொறுப்பை அந்தந்த மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவ்ட்ட செயலாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் விஜய் பேசியது இதுதான்:
”நடந்து முடிந்த 10வது மற்றும் 12வது தேர்வில் சாதனை படைத்த என்னுடைய தம்பி, தங்கைகளுக்கும், பெருமையோடு வந்து இருக்கும் அவர்களின் பெற்றோர்களும், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கும், தமிழக வெற்றிக்கழகத்தின் தோழர்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா,நண்பிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மீண்டும் ஒருமுறை இளம் மாணவ,மாணவிகளை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
பாசிட்டிவ் எனர்ஜி இருப்பவர்களை பார்க்கும் போது, இயல்பாகவே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி,கெமிஸ்ட்ரி இன்று காலையில் இருந்து இருக்கிறது. எல்லாத்துறையும் நல்லத்துறைதான் அதில் முழு மனதோடு, கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம்தான். இதனால், உங்களுக்கு பிடிச்சத்துறை தேர்ந்து எடுங்கள். தமிழகத்தில் நல்ல மருத்துவர்கள், இன்ஜினியர்ஸ் இருக்கிறார்கள். ஆனால், தற்போது தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்.
நான் தலைவர்கள் என்று சொன்னதும் அரசியல் தலைவர்களை மட்டும் சொல்லவில்லை நமது தமிழகத்தில் உலகத்தரத்திலான மருத்துவர்கள், பொறியியலாளர்கள் அதிகமாகவே உள்ளனர். நமக்கு எது அதிகமாக தேவைப்படுகிறது என்றால், அது நல்ல தலைவர்கள். அரசியல் ரீதியாக மட்டும் இதை சொல்லவில்லை. ஒரு துறையில் சிறந்து விளங்கினால், அதன் தலைமையிடத்துக்கு நீங்கள் செல்ல முடியும். அதனை தான் இன்னும் நல்ல தலைவர்கள் தேவை என்றேன். அதுமட்டுமில்லை, எதிர்காலத்தில் அரசியலும் ஒரு தொழில் விருப்பமாக வர வேண்டும் என்பது எனது எண்ணம். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.
செய்தி என்பது வேறு, கருத்து என்பது வேறு. எது உண்மை, எது பொய் என்பதை ஆராய கற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் உண்மையிலேயே நமது நாட்டில் என்ன பிரச்சினை, மக்களுக்கு என்ன பிரச்சினை, சமூக தீமைகள் பற்றி தெரியவரும். அதை தெரிந்துகொண்டால் ஒருசில அரசியல் கட்சிகள் செய்கின்ற பொய் பிரச்சாரங்களை நம்பாமல், நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க கூடிய நல்ல விசாலமான உலக பார்வை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும். அது வந்துவிட்டாலே, அதைவிட ஒரு சிறந்த அரசியல் வேறு எதுவுமே இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள், தவறான பழக்க வழங்கங்களில் ஈடுபடும் நண்பர்களை நல்வழிப்படுத்துங்கள். நீங்களும் தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபடாதீர்கள், சமீபத்தில் பார்த்தால் தமிழகத்தில் போதை பொருட்களின் பயன்பாடு இளைஞர்களிடம் அதிகரித்துவிட்டது. பெற்றோராக, ஒரு அரசியல் கட்சி தலைவராக எனக்கே இந்த விஷயத்தில் பயமாக இருக்கிறது. சில நேரங்களில் அரசே எல்லாவற்றையும் பார்க்கும் என நினைக்காமல் நீங்கள் உங்களை நல்வழியில் வைத்திருக்க முயலுங்கள் Say no to temporary pressures. Say no to Drugs என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி விஜய் மாணவர்களுடன் சேர்ந்து உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.
கடந்த வருடம் 2022 -2023 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 5000 பேருக்கு காலை மற்றும் மதிய உணவு மற்றும் வெளியூரில் இருந்து வரும் மாணவர்களும் பெற்றோர்களும் தங்குவதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
2 நாட்கள் நடைபெறும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியானது, இன்று காலை 7.15 மணிக்கு தொடங்கி மாலை 6 வரை முதல் நாள் நடைபெற உள்ளது. இதே போல 2 வது நாள் நிகழ்ச்சியும் வருகிற 3 ம் தேதி காலை 7.15 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இதில் பங்கேற்க இன்று காலை 6 மணி அளவில் விழா நடைபெறும் அரங்கிற்கு வருகை தந்தார் நடிகர் விஜய். போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட குழப்பங்களை தவிர்க்க அதிகாலையிலேயே விழா அரங்கிற்கு சென்றார். தொடர்ந்து, நிகழ்ச்சி குறித்து ஏற்பாடுகளை அறிய தமிழக வெற்றிக்கழகம் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்துடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், 750 விருதுகள் வழங்கப்படுகிறது. இதில், 3500 மாணவ- மாணவிகளும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்க உள்ளதாக காவல்துறைக்கு அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தவகையில், மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக அனைத்து வகையான அடிப்படை வசதிகளுமே அந்தந்த தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்கள் சார்பாக செய்யப்பட்டுள்ளது.