’வாரிசு’ மனித உணர்வுகளை அழகாக சொல்லும் படமாக வந்திருக்கிறது. அண்ணன் தங்கை இடையேயான உறவைப் போல் இதிலும் உறவுகளுக்கான முக்கியத்துவம் இருக்கும். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எடுக்கப்பட்டிருந்தாலும், இது ஒரு பக்காவான தெலுங்குப்படம். படத்தில் பல தெலுங்கு நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் பார்ப்பதற்கு தெலுங்கு மக்களின் நேட்டிவிட்டியை பிரதிபலிக்கும் படமாக இருக்கும்.
வம்சி படிபள்ளி படங்களில் எப்பொழுதுமே உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களும் காட்சிகளும் இருக்கும். அடுத்து விஜய் சமீபகாலமாக குடும்ப கதைகளில் நடித்தது இல்லை. அதனால் அந்த குறையைப் போக்கும் படமாக ‘வாரிசு’ தயாராகி இருக்கிறது.’ என்று வாரிசு பற்றிய அப்டேட்டை கொடுத்திருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் விஜயின் அண்ணனாக நடித்திருக்கிறார்.
வாரிசு படம் பற்றி சொல்லியிருக்கும் ஸ்ரீகாந்த் விஜயையும் பற்றி கமெண்ட் அடித்திருக்கிறார்.
‘விஜய் ரொம்ப சைலண்ட். அவர் இருக்கிற இடம் தெரியாது. அதிகம் பேச மாட்டார். பெரிய ஸ்டாராக இருந்தாலும் கூட கேராவேன் பயன்படுத்த மாட்டார். அவர் கையில் மொபைல் போன் கூட இருக்காது. கடின உழைப்பாளி’ என்று சூப்பர் சர்டிஃபிகேட் ஒன்றும் கொடுத்திருக்கிறார்.
விஜய் கையில் மொபைல் ஃபோன் இல்லை என்கிறாரே அப்புறம் எப்படி ரசிகர்கள் இருக்கிற மாதிரி அடிக்கடி செல்ஃபி எடுக்கிறார் என்று கேட்டால், நீங்கள் அப்டேட்டாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
உத்தம வில்லன்தான் உண்மையான வில்லனா?
இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் முடங்கிப் போனதற்கான காரணம் தற்போதுதான் தெரிய வந்துள்ளது.
வழக்கு எண் 18/9, கும்கி, சதுரங்க வேட்டை, கோலி சோடா, மஞ்சப்பை என வரிசையாக தரமான படங்களை கொடுத்துவந்த இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், கமல் ஹாசனை வைத்து உத்தமவில்லன் படத்தை தயாரித்து வெளியிட்டது.
உத்தமவில்லன் படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அப்படத்தை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. பொருளாதார ரீதியிலான இந்த பின்னடைவால்தான் திருப்பதி பிரதர்ஸ் கடனில் மூழ்கியது. தொடர்ந்து படமெடுக்காமல் முடங்கிப் போனது என்று கோலிவுட்டில் பேச்சு அடிப்பட்டது.
ஆனால் உத்தமவில்லன் தோல்வி குறித்தோ அல்லது அதனால் ஏற்பட்ட நஷ்டம் குறித்தோ திருப்பதி பிரதர்ஸின் லிங்குசாமி இதுவரையில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிகினிங் என்ற படம் மூலம் மீண்டும் பட வெளியீட்டில் களமிறங்கி இருக்கிறது திருப்பதி பிரதர்ஸ்.
அப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், உத்தமவில்லன் வெளியாகி 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக உத்தமவில்லன் பற்றி மிகவும் வெளிப்படையாக பேசினார் லிங்குசாமி.
‘உத்தமவில்லன் படத்தை கடின உழைப்போடுதான் எடுத்தார்கள். ஆனால் அப்படம் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்தது உண்மைதான். கமல் முதலில் எடுப்பதாக ஒப்புக்கொண்ட படம் ‘பாபநாசம்’. அடுத்து வேறு ஒரு கமர்ஷியல் படம் பற்றியும் பேசப்பட்டது. ஆனால் கடைசியில் கமல் ஆசைப்பட்டதால் எடுக்கப்பட்டதுதான் உத்தமவில்லன். அது அவருக்கும் தெரியும். நான்கு மாதங்களுக்கு முன்பு கமலைச் சந்தித்தேன். அப்பொழுது உத்தம வில்லன் படத்தினால் உண்டான நஷ்டத்தை ஈடுசெய்ய கமல் திருப்பதி பிரதர்ஸூக்கு ஒரு படம் பண்ணித்தருகிறேன் என்று கூறினார்.’ என்று முதல் முறையாக மனம் திறந்திருக்கிறார் லிங்குசாமி.
விக்ரம் வெற்றிக்குப் பின் தற்போது அவருக்கு கிடைத்திருக்கும் மவுசினால் திருப்பதி பிரதர்ஸூக்கு மீண்டும் படம் பண்ணுவாரா மாட்டாரா என்பதை கமல் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் போதுதான் அது ஊர்ஜிதமாகும்.
சமந்தா மேல் நான் பொஸசஸிவ்வாக இருக்கிறேன் – ராஷ்மிகா
‘சமந்தா உடல் நிலை காரணமாக ஷூட்டிங் கலந்து கொள்வது இன்னும் தாமதமாகும் என்று ஒரு பக்கம் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
சமந்தா இன்னும் முழுமையாக குணமடையாததால் பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் நடிக்கும் ’சிட்டாடல்’ வெப் சிரீஸில் இருந்து சமந்தா நீக்கம் என்று மற்றொரு பக்கம் கிசுகிசு கிளம்பியிருக்கிறது.
இப்படியே விட்டால் சமந்தா மார்கெட்டையே காலி பண்ணிவிடுவார்கள் என்று சுதாரித்து கொண்ட சமந்தா தரப்பு, ‘ஜனவரி மாத இறுதியில் சமந்தா மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார். சிட்டாடல் வெப் சிரீஸ் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட பிறகு, விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் குஷி பட ஷூட்டிங்கிலும் சமந்தா நடிப்பார்’ என்று அவசர அவசரமாக தெரிவித்திருக்கிறது.
இப்படியெல்லாம் ஒரு நடிகையைப் பாடாய் படுத்துவார்களா என்று நொந்துப் போன ராஷ்மிகா சமந்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.