வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இப்போது ’கோட்’ படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 68-வது படம். இதற்கு அடுத்து ஒரு படம் மட்டும் நடிக்க இருப்பதாகவும், அதற்குப் பிறகு அரசியல் பிரவேசம் என்று விஜய் உறுதிப்பட கூறியிருக்கிறார்.
விஜய் மற்றுமொரு படம் நடிக்க இருப்பதாக கூறியிருப்பதற்கு காரணம், அந்தப் படம் ஏற்கனவே ஒப்பந்தமான ஒன்றா என்றால் இல்லையாம். அதில் நடிப்பது என்பது சமீபத்தில் எடுத்த முடிவுதானாம்.
கட்சி ஆரம்பித்தால், அதை தொடர்ந்து நடத்த கோடிக்கணக்கில் பணம் வேண்டுமென்பதால்தான் 69-வது படத்தில் நடிக்கவிருக்கிறாராம். மேலும் அரசியலுக்குள் இறங்குவதற்கு முன்பாக, தனது அரசியல் நிலைப்பாட்டை எடுத்துக்கூறும் வகையில், தனது கொள்கைகளை வசனமாக வைத்து, எடுக்கும் பக்கா அரசியல் படமொன்றில் நடிக்க விஜய் விரும்புகிறாராம்.
அந்தப் படமே தனது கொள்கைப் பரப்பு திரைப்படமாக இருந்தால் நன்றாக இருக்குமென விஜய் நினைக்கிறாராம். ஆனால் இதெல்லாம் எந்தளவிற்கு சாத்தியம் என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது என்பதையும் விஜய் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறாராம்.
இதனால் விஜயின் 69-வது படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி மீண்டும் கிளம்பியிருக்கிறது.
வெற்றி மாறன் பெயர் முதலில் அடிப்பட்டது. அவரும் ஒரு நாவலின் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். அந்த நாவலை அடிப்படையாக வைத்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் என்ற செய்தி அடிப்பட்டது
.
அடுத்து கார்த்திக் சுப்பராஜ். இவர் சொன்ன கதையில் சில மாற்றங்கள் தேவை இருப்பதாகவும், அதனால் விஜய் ஒகே சொல்லவில்லை என்றும் கிசுகிசு எழுந்தது.
இதற்கு பின்னால், திடீரென ஆர்; ஜே. பாலாஜியின் பெயரும் இப்போது அடிப்படுகிறது. அவர் விஜய்க்கு ஏற்கனவே ஒரு லைனை சொல்லியிருந்தார். இப்போது அந்த லைனை திரைக்கதையாக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் என்பது அவரது பாட்காஸ்ட்டில் சொன்ன போதுதான் எல்லோருக்கும் இந்த விஷயம் தெரியவந்தது.
ஆக வெற்றி மாறன், கார்த்திக் சுப்பராஜ், ஆர்;ஜே; பாலாஜி இந்த மூவரில் யார் அடுத்து விஜயை வைத்து இயக்கப் போவது என்ற கேள்வியைக் கேட்டு கொண்டிருக்கையிலேயே, இப்போது அட்லீயின் பெயரும் சேர்ந்திருக்கிறது.
அட்லீ விஜயை அண்ணா அண்ணா என்று அழைக்குமளவிற்கு நெருங்கி பழகியிருக்கிறார். விஜயும் அட்லீயும் இணைந்தப் படங்கள் இரண்டும் விஜய்க்கு ஹிட்டடித்த படங்களாக இருக்கின்றன.
இதனால் விஜய் – அட்லீ கூட்டணி இணைந்தால் அது பெரிய படமாக வரும் என்ற எதிர்பார்ப்பே அதன் வியாபாரத்திற்கு பெரும் ப்ளஸ் ஆக இருக்கும் என்பதால் இந்த கூட்டணிக்கே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்று விஜய் தரப்பில் யோசிக்கப்பட்டும் வருவதாக சொல்கிறார்கள்.
ஷாரூக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை முடித்த உடனேயே ஏற்கனவே மனதில் இருந்த அரசியல் பின்னணியிலான கதையை தூசித்தட்டி அட்லீ எடுத்திருக்கிறாராம். இந்த கதையைதான் இப்போது விஜய்க்கு ஏற்றபடி அரசியல் ஆக்ஷன் கலந்த கதையாக தயார் செய்து வருவதாகவும் தெரிகிறது
.
இன்னும் சொல்லப் போனால் இந்த கதைக்கு டைட்டிலை கூட அட்லீ யோசித்து வைத்திருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். அநேகமாக அனிரூத் ரவிச்சந்திரன் இசையமைக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்ற அளவிற்கு இப்போது பேச்சு அடிப்பட ஆரம்பித்திருக்கிறது.
ஆக அட்லீ பக்கம் காத்து அதிகம் அடிக்கிறது என்பதே இப்போதைய நிலவரம்.
ரஜினிக்கு வில்லனாகும் லாரன்ஸ்
ரஜினியின் ரசிகர் என்ற அடைமொழியை அதிகம் விரும்பும் லாரன்ஸ். ரஜினியை தலைவர் என்று கொண்டாடும் லாரன்ஸூக்கு ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு இதுவரையில் சரியாக செட்டாகவில்லை.
இந்த குறை இப்போது தீர்ந்து இருக்கிறது. ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா இயக்கவிருக்கும் புதியப் படத்தில் ரஜினி சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். லாரன்ஸ் நாயகனாக நடிக்கப் போகிறார் என்ற செய்திகள் பரவின.
ஆனால் இப்போது அந்தப் படத்தில் ரஜினிதான் நாயகன். லாரன்ஸ் முதல் முறையாக வில்லனாக நடிக்க இருக்கிறார். வில்லனாக நடிக்க காரணம் அது ரஜினி நடிக்கும் படம்.
ரஜினியின் இப்போதைய வயதிற்கு ஏற்ற கதை என்றும், அதில் வில்லனாக வரக்கூடிய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அதிகமிருக்கும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் கதை என்ன என்பது குறித்து செளந்தர்யா இதுவரையில் எதுவும் கூறவில்லை.
’வேட்டையன்’ முடித்தப் பிறகு ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே முடிவாகி இருந்தது. ஏப்ரல் மாதத்தில் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் படம் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.