உக்ரைன் விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா மறுப்பதாக டிரம்ப் விமர்சித்து வந்தார். இதற்கிடையே டிரம்பை எச்சரித்துள்ள ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ், மூன்றாவது உலகப் போர் வெடிக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் கடந்த 2022ம் ஆண்டு வெடித்தது. அப்போது ஆரம்பித்த போர் பல ஆண்டுக் கணக்கில் தொடர்கிறது. இந்த போரால் உக்ரைன் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் எடுக்கும் முயற்சிகளுக்குப் பெரியளவில் பலன் கிடைப்பதில்லை.
குறிப்பாக டிரம்ப் தீவிரமாகப் போரை முடிவுக்குக் கொண்டு வர முயன்று வருகிறார். இதற்கிடையே டிரம்ப் மீது முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அதாவது உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுக்கும் புதின் நெருப்புடன் விளையாடுவதாக அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். டிரம்பின் இந்த பேச்சை விமர்சித்துள்ள டிமிட்ரி, இதனால் உலகப் போர் வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளார்.
கடந்த 2008-2012 வரை ரஷ்யாவின் 3வது அதிபராக இருந்தவர் தான் டிமிட்ரி மெட்வெடேவ். இவர் விளாடிமர் புதினின் மிக நெருங்கிய நண்பர் ஆவார். ரஷ்யாவில் அப்போதிருந்த விதிகளின்படி ஒரு நபரால் தொடர்ச்சியாக 2 முறைக்கு மேல் அதிபர் பதவியில் இருக்க முடியாது. அப்போது 2000- 2008 வரை இரண்டு முறை புதின் அதிபர் பதவியில் இருந்ததாலேயே தனது நண்பர் டிமிட்ரியை ஒரு முறை அதிபர் பதவியில் இருக்க வைத்தார். அப்போது புதின் ரஷ்யப் பிரதமராக இருந்திருப்பார்.
இந்த டிமிட்ரி நெட்வெடெவ் தான் டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பை எச்சரிக்கும் வகையில், “புதின் நெருப்புடன் விளையாடுவதாகவும் ரஷ்யாவில் மிகவும் மோசமான விஷயங்கள் நடப்பதாகவும் ட்ரம்ப் கூறியிருக்கிறார். எனக்குத் தெரிந்து ஒரே ஒரு மோசமான விஷயம் என்றால் அது மூன்றாம் உலகப் போருக்கான ஆபத்து மட்டுமே. டிரம்ப் இதைப் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த சில ஆண்டுகளாகவே போர் தொடர்ந்து வருகிறது. இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார்.போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் டிரம்ப் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார். இருப்பினும், புதின் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபடவில்லை. இதன் காரணமாகவே புதின் மீது விரக்தி அடைந்த டிரம்ப் அவரை விமர்சித்திருந்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் புதின் நெருப்புடன் விளையாடுகிறார் என்று குற்றம் சாட்டினார். மேலும் இது தொடர்பாக டிரம்ப் ட்ரூத் சோஷியலில் போஸ்ட்டில் மேலும், “நான் இல்லையென்றால், ரஷ்யாவிற்கு ஏற்கனவே நிறைய மோசமான விஷயங்கள் நடந்திருக்கும் என்பதை புதின் உணரவில்லை.. மிக மோசமான விஷயங்கள் நடக்கும் என்றே சொல்கிறேன்.. புதின் நெருப்புடன் விளையாடுகிறார்!” என்று பதிவிட்டிருந்தார்.