தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டு 1967. அந்த ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் கடுமையாக மோதிக்கொண்டு இருந்தன. இரு கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்துகொண்டு இருந்த சூழலில், திமுகவின் நட்சத்திர பிரச்சாரகரான எம்ஜிஆர், துப்பாக்கியால் சுடப்பட்டார். இதனால் ஏற்பட்ட பெரும் எழுச்சி காங்கிரஸ் கட்சியை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கி, திமுகவை அரியணையில் ஏற்றியது. அமெரிக்காவிலும் இப்போது கிட்டத்தட்ட அதுதான் நடக்கிறது.
ட்ரம்ப் மீது தாக்குதல் – நடந்தது என்ன?
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 8-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான முதல்கட்ட பிரச்சாரம் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் தற்போதைய அதிபரும், ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஜோ பைடனும், குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்பும் இந்த தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ட்ரம்ப்பின் பிரச்சார கூட்டம் பென்சில்வேனியா நகரில் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் ட்ரம்ப் பேசிக்கொண்டு இருந்தபோது, திடீரென்று ஆவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி சத்தத்தைக் கேட்டதும் ட்ரம்ப் குனிந்ததால், நூலிழையில் அவர் உயிர் தப்பினார். அவரது வலது காதில் மட்டும் காயம் ஏற்பட்ட்து. ரத்தம் சொட்டச் சொட்ட எழுந்து நின்ற ட்ரம்ப், மீண்டும் எழுந்து நின்று தன் பிரச்சாரத்தைத் தொடர்ந்தார். இந்த சம்பவத்தில் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் மீது போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யார் இந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்
பென்சில்வேனியாவில் டொனால்ட் ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் அங்குள்ள பெத்தேல் பார்க் பகுதியை சேர்ந்தவர். இந்த பகுதி, டிரம்ப் கொலை முயற்சி நடந்த இடமான பட்லரிலிருந்து சுமார் 70கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அவர் வாழ்ந்த வீடு, ஒரு சாதாரண மூன்று படுக்கையறை செங்கல் கட்டிடம், 1998 முதல் அவரது பெற்றோர்களான மத்தேயு மற்றும் மேரி க்ரூக்ஸுக்கு சொந்தமானது. க்ரூக்ஸ் 2022 இல் பெத்தேல் பார்க் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றதாக கூறப்படுகிறது.
20 வயதே ஆன க்ரூக்ஸ், குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் என்றும், அதே நேரத்தில் 2021-ல் ஜனநாயக கட்சியின் பிரச்சாரக் குழுவான `ActBlue’ அமைப்புக்கு 15 டாலர்களை அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிபர் தேர்தலில் இனி என்ன நடக்கும்?
பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் மூலம், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் கை ஓங்கும் என்று அமெரிக்காவின் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
‘அடுத்த வாரம் வியாழக்கிழமை இரவு ட்ரம்ப் பிரசாரத்திற்காக மேடை ஏறும்போது அவர் மீது தேசத்தின் கவனம் இன்னும் அதிகமாக இருக்கும். ரத்தம் தோய்ந்த முகம், உயர்த்தப்பட்ட கையுடன் இருக்கும் படங்கள் மூலம் சமூக வலைதளங்களில் அவரது ஆத்ரவாளர்கள் பெரிய அளவில் பிரச்சாரத்தை முன்னெடுப்பார்கள். குடியரசுக் கட்சி ஏற்கனவே பைடனுக்கு எதிராக ‘வலிமை மற்றும் வீரம் நிறைந்த தலைமை’ என்ற தலைப்பில் தங்கள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள். சனிக்கிழமை நடந்த சம்பவம் அதற்கு புதிய ஆற்றலைக் கொடுக்கும். இது பைடனுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்’ என்று அமெரிக்க அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் அதிபர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளராக ஜோ பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ், அல்லது வேறு ஏதாவது புதிய வேட்பாளரை நிறுத்தலாமா என்ற விவாதம் ஜனநாயகக் கட்சி தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது.