தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய த்ரிஷா, இருபது வருடங்களுக்குப் பிறகும் கதாநாயகியாகவே நடித்துவருகிறார். இவரோடு அறிமுகமான பல நடிகைகள் இன்று அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தனது மார்க்கெட் லேசாக டல்லடித்த போதுதான், திருமணம் பற்றி த்ரிஷா யோசிக்க ஆரம்பித்தார்.
பிரபல தொழிலதிபரும், சினிமா தயாரிப்பாளராகவும் மாறிய வருண் மணியனுடன் இவருக்கு ஒரு நெருக்கமான உறவு ஏற்பட, இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்துடன் பழக ஆரம்பித்தார்கள். அது நிச்சயத்தார்த்தம் வரை நீண்டது.
ஆனால் வருண் மணியனுக்கும் பிந்து மாதவிக்கும் இடையே காதல் உருவானதால்தான், அந்த நிச்சயத்தார்த்தம் நின்று போனது என்பது கோலிவுட்டில் அடிப்பட்ட கிசுகிசு.
ஆனால் த்ரிஷாவும், வருண் மணியனும் இது குறித்து எந்தவித கருத்தையும் சொல்லவே இல்லை.
இதனால் த்ரிஷா திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தார். அவரது அம்மாவின் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொள்ள நினைத்த போதுதான் அவருக்கு ‘பொன்னியின் செல்வன்’ வாய்ப்பு வந்தது.
பொன்னியின் செல்வன் வரிசை படங்கள் த்ரிஷாவுக்கு கொடுத்த மவுசினால், இப்போது விஜய் க்கு ஜோடியாக ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்குப் பிறகு ‘லியோ’ படத்தில் நடித்திருக்கிறார்.
இதுமட்டுமில்லாமல் விஜய்க்கு சரியான போட்டியாக இருக்கும் அஜித்துடன் ‘விடாமுயற்சி’ படத்திலும் த்ரிஷா கமிட்டாகி இருப்பதாக கூறுகிறார்கள். இந்தப் படத்திற்கு அடுத்து மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு த்ரிஷாவுக்கு வந்திருக்கிறதாம்.
இரண்டு வாய்ப்புகளுமே மிகப்பெரிய வாய்ப்பு என்பதால், இப்போது தனது திருமணத்தைத் தள்ளிப் போட்டுவிட்டாராம். மேலும் அவரது குடும்ப சோதிடர் சொன்ன கணக்குப்படி இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தில் த்ரிஷா இருக்கிறாராம்.
’லியோ’ – புதுத்தகவல்கள்!
விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தயாராகிவரும் ‘லியோ’ படம் குறித்து எக்கச்சக்க எதிர்பார்பு.
அக்டோபர் 19-ம் தேதி வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் 36 நாட்கள் இருக்கும் நிலையில், இப்படத்தின் வியாபாரம் மற்றும் வசூல் எல்லாம் சேர்ந்தால் 1000 கோடியைத் தாண்டும் என ஆளாளுக்கு ஆருடம் கூறி வருகிறார்கள்.
படம் வெளியாவதற்கு முந்தைய வியாபார விஷயத்தில் லியோ பல சாதனைகளை முறியடிப்பதாகவும் பேச்சு அடிப்படுகிறது.
இங்கிலாந்தில் அட்வான்ஸ் புக்கிங் மூலமாக விஜய் நடித்த ’வாரிசு’ படம் முதல் நாள் வசூலாக சுமார் 1.63 கோடி [£164,962] வசூலித்தது. இப்போது லியோ அட்வான்ஸ் புக்கிங் மூலம் 1,75,000 பவுண்ட்களை வசூலித்திருப்பதாக கூறுகிறார்கள். வாரிசு படத்தை விட லியோவுக்கு அட்வான்ஸ் புக்கிங் அதிகம்.
லியோவின் தெலுங்கு பதிப்புக்கும் இங்கிலாந்தில் இப்போது நல்ல வரவேற்பு இருக்கிறதாம்.
லியோவின் ரிலீஸ் நெருங்குவதால், அப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை வெளியிட லியோ படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். இது குறித்த அறிவிப்பு அநேகமாக செப்டெம்பர் 15-ம் தேதி வெளிவர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சிங்கிளை அனிருத் இசையமைத்து இருப்பதோடு, பாடவும் செய்திருக்கிறார் என்கிறார்கள்.
வசூலில் இன்னும் புதிய சாதனைகளைப் படைக்க வேண்டுமென விதவிதமாக யோசித்து வருகிறது லியோ படக்குழு. இதையடுத்து, சென்னையில் லியோ படம் வெளியாவதற்கு முன்பே அதாவது அக்டோபர் 18-,ம் தேதியிலேயே, ரசிகர்கள் பெரும் பணம் கொடுத்து பார்க்க உதவும் பெய்ட் ப்ரீமியர் ஷோவை நடத்தலாமா என்று யோசிக்கப்பட்டு வருகிறதாம்.
ஆனால் இந்த மாதிரி காசு பார்க்கும் காட்சிகளுக்கு தமிழ்நாட்டில் முறையான அனுமதி இருக்கிறதா இல்லையா என்ற விவாதம் இப்போது லியோ படக்குழுவில் போய்கொண்டிருக்கிறது.
அப்படியொரு வாய்ப்பு இருந்தால், தமிழ் நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் பரவலாக முக்கிய நகரங்களில் ப்ரீமியர் ஷோக்களை நடத்தலாம் என முடிவாகி இருக்கிறதாம்.
கமல் போட்ட பக்கா ப்ளான்!
கமல் – ஹெச்.வினோத் இணையும் கமலின் 233-ஆஊ படம் பற்றிய தகவல்கள் கசிந்திருக்கின்றன.
இப்படம், அரசியலையும், அரசியல்வாதிகளை வெளுத்து கட்டும் கதையாக இருக்கும் என்கிறார்கள். அதிலும் குறிப்பாக விவசாயிகளை மையமாக கொண்ட கதையாக இருக்குமெனவும், விவசாயிகள் அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவுகளால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என திரைக்கதை விரிவடையுமாம்.
இதற்காகவே விவசாயிகள் மனதில் உள்ளவற்றையும், அவர்கள் சந்தித்த பிரச்சினைகளையும் பற்றி தெரிந்து கொள்ள கமலும், வினோத்தும் விவசாயிகளைச் சந்தித்து இருக்கிறார்களாம் என ஆரம்பத்தில் கூறப்பட்டது.
இப்படம் ராணுவ பின்னணியில் நடக்கும் கதை என்று இப்போது சொல்லப்படுகிறது. இதற்கு காரணம், கமலி துப்பாக்கி சுடுவது போல் வெளியான சில வீடியோக்கள்.
கமல் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் வீடியோவானது, படத்தில் இடம்பெறும் ஒரு சில காட்சிகளுக்காக மட்டுமே எடுக்கப்பட்ட பயிற்சியைப் பற்றியதாம். ஆனால் இதை வைத்து GutsAndGuns, #RiseToRule, and #FuriousAction மாதிரியான ஹேஷ்டேக்குகளுடன் படத்திற்கான எதிர்பார்ப்பை மக்களிடையே உருவாக்கினால், அது படத்தின் வியாபாரத்திற்கு கூடுதல் வருவாய்க்கு உதவும் என்று திட்டமிட்டு அந்த வீடியோவை வெளியிட்டு இருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.