நடிகர் அஜித்திடமிருந்து இப்படியொரு செய்தி வரும் யாரும் எதிர்பார்க்கவில்லை. அஜித்தின் விடா முயற்சி திரைப்படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைப்படம் வெளியாகும் என்கிறார்கள். இந்த மாதம் 31ம் தேதி ரிலீஸ் ஆகும் என்ரு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது தள்ளிப்போயிருக்கிறது. அஜித் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. இதனை சரி செய்யும் விதமாக அஜித் தரப்பிலிருந்து ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திரைப்படம் ஒருபுறம் இருக்க அஜித் பயணம் மேற்கொள்வதிலும், கார் ரேஸ் – பைக் ரேஸ் உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபடுவதிலும் அதிக ஆர்வம் காட்டும் நபர் ஆவார். வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் நடிகர் அஜித் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ரசிகர்களுக்காக திரைப்படங்களில் நடிக்கும் அவர், தனது மனதிற்கு பிடித்ததை செய்யும் பொருட்டு இதுபோன்ற விஷயங்களிலும் அதிக ஈடுபாடுடன் இருக்கிறார். வாழ்க்கையை அதன் போக்கில் கொண்டாடும் நபராக அஜித் தோற்றமளிக்கிறார் எனலாம். அந்த வகையில், அவர் தனது பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பயணங்கள் குறித்து அவர் பேசிய ஒரு காணொலி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், “தனிப்பட்ட முறையில் பயணம் என்பது கல்வியின் சிறந்த வடிவமாக நான் கருதுகிறேன். மக்களைப் பயணிக்க வைப்பதே என் யோசனை. மதம், ஜாதி போன்றவை நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட உங்களை வெறுக்க வைக்கும் என்ற ஒரு கூற்று உள்ளது, இது மிகவும் உண்மை. நாம் ஒருவரை சந்திப்பதற்கு முன்பே அவர்கள் குறித்து முன்முடிவுக்கு வந்துவிடுவோம். ஆனால் நீங்கள் பயணம் செய்யும் போது, வெவ்வேறு தேசங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களை சந்திக்கலாம். மேலும் அவர்களின் கலாச்சாரத்தை அனுபவிப்பது உங்களை மக்களுடன் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தும். உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் நீங்கள் அதிக இணக்கம் காட்டத் தொடங்குவீர்கள். அது உங்களை ஒரு சிறந்த நபராக மாறச்செய்யும் ” என்று அவர் கூறியிருக்கும் கருத்து பலருக்கும் ஆச்சரியத்தை எற்படுத்தியிருக்கிறது. அஜித்தின் இந்த பேச்சுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
வட இந்தியாவில் எங்கோ எடுக்கப்பட்ட இந்த வீடியோ எப்போது, யாரால் எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை. இந்த வீடியோ நடிகர் அஜித்தின் உதவியாளரான சுரேஷ் சந்திராவின் வாட்ஸ்அப் சேனலில் பதிவிடப்பட்டிருந்ததாகவும், அதன்மூலம் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது. சுரேஷ் சந்திரா அதனை பின்னர் தனது எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்த நிலையில், இந்த வீடியோ தற்போது வாட்ஸ்அப் எக்ஸ் தளம் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல்வேறு சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் இதனை தங்களின் பக்கத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்.