நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தெலங்கானா மாநில ஆளுநர் பதவியில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்துள்ளார். தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்த தமிழிசை, 2019-ம் ஆண்டு தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டில் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பதவியும் அவருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. அந்த இரு பதவிகளில் இருந்தும் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ராஜினாமா செய்துள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுவார் என்று கருதப்படுகிறது. அவரை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜனை களம் இறக்க பாஜக மேலிடம் திட்டமிடுவதாகவும், அதற்காகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் தான் துணை நிலை ஆளுநராக இருந்த புதுச்சேரியிலேயே எம்பி தேர்தலில் நிற்க தமிழிசை விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதை மனதில் வைத்தே அவர் சமீப காலமாக புதுச்சேரி அரசின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. தமிழிசை புதுச்சேரியில் போட்டியிடும் பட்சத்தில், அவர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறி பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டி வருகின்றன.
கோவையில் பாஜக போட்டி – எல்.முருகன் தகவல்
நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக தனது வேட்பாளரை நிறுத்தும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கோவையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் ரோடு ஷோ பொதுமக்கள் ஆதரவுடன் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி கடந்த ஒரு வார காலமாக தென் இந்தியாவை மையமாக வைத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சேலத்தில் நாளை நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளார். தென்னிந்தியாவில் முழுமையாக பிரதமர் மோடி தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இது பாஜகவினருக்கு மேலும் மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும் வகையிலும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் உள்ளது. மக்களவை. தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று 3- வது முறையாக பிரதமர் மோடி ஆட்சியமைப்பார். கூட்டணி இன்னும் இரண்டு மூன்று நாட்களில் உறுதியாகும். கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பாஜக. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
இரட்டை இலை இல்லாவிட்டால் வாழை இலை – மன்சூர் அலிகான்
ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான், வேலூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய மன்சூர் அலிகான், அந்த பேச்சுவார்த்தையின் முடிவு தெரிவதற்கு முன்பே வேலூரில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
வேலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் கூறியதாவது:
அதிமுக தலைவர்களிடம் போய் பேசிவிட்டு வந்தேன். அது குறித்து இன்னும் ஏதும் தகவல் இல்லை. நான் இங்கே வேலூரில் நிற்கிறேன். கொடுத்தால் இரட்டை இலை, இல்லை என்றால் வாழை இலை. வாழை இலை போட்டு உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதான். வாழை இலை உடம்புக்கு நல்லது, இரட்டை இலையும் உடம்புக்கு நல்லது; ஆனால் கறிவேப்பிலையாக மாறிவிடக்கூடாது.
அவர்களை குறை சொல்லக்கூடாது அது அம்மாவோட கட்சி; தாய் கழகம். வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு வேட்பு மனு ஏற்றுக் கொண்ட பின்பு என்னுடைய திப்பு சுல்தான் வாளை சுழற்றுவேன். இப்பவே வாளை சுழற்ற வைக்காதீர்கள் இது திப்புவின் வாள். இவ்வாறு மன்சூர் அலிகான் கூறினார்.