கேரளம் மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என மீட்புக் குழுவினர் அச்சம் தெரிவித்துள்ளனர். 1000 பேர் வரை காணவில்லை என தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
இந்தளவு பலிகள் எண்ணிக்கை அதிகமாக என்ன காரணம்? தவறு எந்த இடத்தில் நடந்துள்ளது? பேரிடர் மேலாண்மையில் இந்தியா முன்னேறவில்லையா?
இந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ள பேரிடர் மேலாண்மை பொறியாளர் பிரபு காந்தி ஜெயின், “பொதுவாக வெளிநாடுகளில் ஒரு நகரத்தின் உட்கட்டமைப்பை முறையாக உருவாக்கிய பிறகுதான் மக்கள் குடியேற்றத்தை அனுமதிப்பார்கள். இந்தியாவில் என்ன நடக்கிறது என்றால், முதலில் குடியேற்றம் நடந்த பிறகு உட்கட்டமைப்பை உருவாக்குகிறார்கள். இதுவே அடிப்படையில் தவறு. இதுவே முக்கிய பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகிறது. வயநாட்டிலும் இதுவே நடந்துள்ளது.
மத்திய அரசு இதற்குப் பிறகு வயநாடு பகுதியை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகளை எடுக்கக் கூடாது. அதை வாழத் தகுதியற்ற பகுதியாக அறிவிக்க வேண்டும். கடந்த 2 வாரக் காலமாக வயநாட்டில் மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. கிட்டத்தட்ட 15 நாட்கள் தொடர் மழை. அந்த நீர் என்ன ஆகும்? மலைப்பகுதி நிலத்தின் வழியாக உள்ளே போகும். அது ஊற்றாக அப்படியே அடிவாரத்தில் மற்றொரு பகுதியில் வெளியேறும். அங்கே நிலச்சரிவு ஏற்படும். இந்த நிலச்சரிவு நடப்பது முதன்முறை அல்ல. 2019இல் ஏற்பட்டது. அடுத்து 2021இல் நிகழ்ந்தது. இப்போது 2024இல் மீண்டும் நிலச்சரிவை நாம் சந்திக்கிறோம்.
இதன் மூலம் இயற்கை சொல்வது என்ன? தொடர்ச்சியாக இந்தப் பகுதியில் ஆபத்து வர இருக்கிறது என்பதைத்தான். அதைப் புரிந்துகொள்ளாமல் வெறும் ஐஏஎஸ் அதிகாரிகளை மீட்புப் பணிக்கு அனுப்புவதன் மூலம் நடக்கப் போவது என்ன? அந்த அதிகாரிகளுக்குப் பேரிடர் மேலாண்மை பற்றி போதுமான புரிதலே இல்லை.
தொடர்ச்சியாக மழையை வயநாடு சந்திக்க தொடங்கிய போது மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், மிகப்பெரிய நிலச்சரிவு உண்டாகும் வரை மக்கள் அங்கேயே இருந்துள்ளனர். பாதுகாப்பான பகுதிகளுக்கு அவர்களை அரசு கொண்டு போகவே இல்லை. மொத்தமே 4 ஆயிரம் மக்கள்தான் அங்கே வசித்து வருகிறார்கள். அவர்களை அரசு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு போக முடியாதா?
ஆக, வயநாட்டில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு என்பது அரசு நிர்வாகம் செயல் இழந்துபோய் உள்ளது என்றே சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு தூத்துக்குடியில் மழைபெய்த போது 10 ஆயிரம் மக்களை வெறும் 4 மணிநேரத்தில் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அப்படிப் பார்த்தால் இந்த 4000 பேரை ஒரே நாளில் கூட பாதுகாப்பான முகாம்களில் கொண்டு போய் தங்க வைத்திருக்கலாம். அப்படித் தங்க வைக்கும்போது பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 10 கிமீட்டர் தொலைவில் முகாம் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். வயநாடு அரசு அதிகாரிகள் வயநாடு பகுதிக்குள்ளாகவே வேறு ஒரு முகாமில் தங்க வைத்துள்ளனர். மழை தொடர்ச்சியாக இருந்ததால், அந்த முகாம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீர்நிலைகள் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டாலும் அதை மீட்க முடியும் எனச் சட்டம் அனுமதி அளித்துள்ளது. அதே மாதிரி நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளை ஒட்டி கட்டடங்களைக் கட்ட அனுமதி அளிக்கக் கூடாது. அப்படி ஆக்கிரமித்துக் கட்டப்பட்டால் அவற்றை அப்புறப்படுத்த ஏதுவாக சட்டம் இயற்ற வேண்டும். பேரிடர் நிகழ்ந்த பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் அதிநவீன உபகரணங்களைப் பயன்படுத்தி வேகமாகச் செய்து முடிக்க வேண்டும். அப்போதுதான் உயிரிழப்பைத் தடுக்க முடியும்.
கேரளாவில் கயிறு கட்டி மீட்பதை நாம் பார்க்கிறோம். என்ன கொடுமை இது? புல்லட் ட்ரெயின் மூலம் மீட்புப் பணி நடக்கும் காலம் இது. ஹைப்பர் லூப் என்ற டெக்னாலஜி வந்துவிட்டது. அதில் சென்னையிலிருந்து 40 நிமிடத்தில் பெங்களூரு போய் விடலாம். மெட்ராஸ் ஐஐடியில் பல விதமான ட்ரோன்ஸ் வசதிகள் உள்ளன. அதைப் பயன்படுத்தலாம். அந்த ட்ரோன்ஸ் வெறுமனே மேல் இருந்து ஏரியல் வியூவ் படம் மட்டும் எடுத்து அனுப்பாது. மணலில் புதைந்துள்ள மனிதர்களின் உடலை உணர்ந்து உயிருடன் இருக்கிறார்களா இல்லையா? எனத் தகவல் சொல்லும். அதைவிட்டு விட்டு மோப்ப நாய்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இது மேசமான அணுகுமுறை.
வயநாடு பல முறை ஏற்கெனவே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள போது, முன்பே அங்கே தற்காப்பு உபகரணங்களுக்கான முகாமை எந்த நேரத்திலும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.