இந்த நூற்றாண்டில் இதுவரை காணாத மிகப் பிரம்மாண்டமான இறுதிச் சடங்கு லண்டனில் இன்று நடக்கிறது. பொதுவாக வயது முதிர்ந்த ஒருவர் காலமானால், அவரது இறப்பை, ‘கல்யாணச் சாவு’ என்று அழைத்து இறுதிச் சடங்கை கோலாகலமாக நடத்துவது வழக்கம், சாதாரண வீடுகளில் நடக்கும் பெரிய சாவுக்கே இந்த அளவு மரியாதை என்றால், இங்கிலாந்தை 70 வருடங்கள் ஆண்டு அந்நாட்டின் பல பிரதமர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்த ராணி எலசபெத்தின் இறுதிச் சடங்கு எந்த அளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்…
சவப்பெட்டியின் சிறப்பு:
ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைக்கப்பட்டது. ஓக் மரத்தால் செய்யப்பட்டுள்ள இந்த சவப்பெட்டியின் சுற்றுப்புறம் முழுவதும் ஈயத்தாலான கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. ராணியின் உடலை பாதுகாப்பாக வைப்பதற்காக இந்த கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலம்:
ராணி எலிசபெத்தின் உடல் அடங்கிய சவப்பெட்டி, லண்டன் நகரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் வழியாக குதிரை பூட்டப்பட்ட பீரங்கி வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் உள்ள வெலிங்டன் ஆர்ச் வரை எடுத்துச்செல்லப்படுகிறது. அந்த சவப்பெட்டியுடன் இங்கிலாந்தின் இப்போதைய மன்னர் மூன்றாம் சார்லஸும், இளவரசர்கள் வில்லியம், ஹாரி உள்ளிட்டோரும் ஊர்வலமாகச் செல்லவுள்ளனர்.
ராணியின் சவப்பெட்டியை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அதன்மீது ராணியின் தனிப்பட்ட கொடி, 2,868 வைரக்கற்கள் பதிக்கப்பட்ட கிரீடம், செங்கோல் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்படிருக்கும்.
விண்ட்சர் கோட்டை:
ராணியின் உடல், விண்ட்சார் கோட்டைக்கு அருகே உள்ள செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. அங்கு பிரார்த்தனை முடிந்த உடன் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி ‘ராயல் வால்ட்’ என்று அழைக்கப்படுகிற விண்ட்சார் கோட்டையில் தரைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள அடக்க அறையில் இறக்கப்படும்.
இறுதியில், அரச குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்கிற அடக்க பிரார்த்தனை, மன்னர் 6-ம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் நடக்கிறது. அதன் பின்னர் ராணியின் உடல் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே அடக்கம் செய்யப்படும்.
கடந்த 12-ம் நூற்றாண்டுமுதல் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் தங்கும் அரண்மனையாக விண்ட்சர் கோட்டை உள்ளது. மத்திய லண்டன் பகுதியில் இருந்து 40 கிலோமீட்டர் தூரம் தள்ளியுள்ள இந்த கோட்டை தேம்ஸ் நதிக்கரையில் 13 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இங்கிலாந்து அரச குடும்பத்துடன் இந்த கோட்டைக்கு தொடர்பு உள்ளதால் ராணியின் இறுதிச் சடங்கு இங்கு நடைபெறுகிறது.
எண்களில் இறுதிச் சடங்கு:
ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், இங்கிலாந்து அரச குடும்பத்தினர், கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். இதில் இந்தியாவின் சார்பில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார்.
இறுதி ஊர்வலத்தில் இங்கிலாந்து ராணுவத்தைச் சேர்ந்த 4,416 வீரர்கள், 847 கடற்படை வீரர்கள் மற்றும் 686 விமானப்படை வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
ராணியின் இறுதி ஊர்வலத்தைக் காண 10 லட்சம் பேர் லண்டனில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் வசதிக்காக லண்டனுக்கு 250 சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன.
இறுதி ஊர்வலம் நடைபெறும் நேரத்தில் லண்டன் நகரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதற்கு முன்பு கடந்த 2012-ம் ஆண்டில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின்போதுதான் இத்தனை போலீஸார் லண்டனில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு 36 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் உள்ள 125 திரை அரங்குகளில் ராணியின் இறுதிச்சடங்கை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அழைக்கப்படாத தலைவர்கள்:
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால், தற்போது ரஷ்யா மீது இங்கிலாந்து பொருளாதார தடை விதித்துள்ளது. இந்த சூழலில் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புடினுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. அதேபோல் பெலாரஸ், சிரியா, வெனிசுவேலா, ஆப்கானிஸ்தான், மியான்மர் ஆகிய நடுகளின் தலைவர்களுக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்படவில்லை. அதேநேரத்தில் வடகொரியா, நிகாரகுவா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தூதர்கள் மட்டும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.