அஜித்தின் ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்டுள்ளனர்.பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, ஜனவரி 10-ம் தேதி வெளியாவதாக இருந்த அஜித்தின் ‘விடாமுயற்சி’ இப்போது மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
என்ன காரணத்துக்காக இந்த முடிவு, விடாமுயற்சி மீண்டும் எப்போது ரிலீஸாகும் என்பதைப் பற்றி படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்லவில்லை. பொங்கலுக்கு விடாமுயற்சியை பார்த்து ரசிக்கலாம் என்று ஆர்வமாக இருந்த அஜித் ரசிகர்கள் இதனால் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். ஒரு சிலர் படக்குழுவை, பட நிறுவனத்தை திட்டி தீர்த்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் பொங்கி வருகிறார்கள்.
விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப்போனதற்கு காரணம் நிதிப் பிரச்னையா? பட வேலைகள் முடியவில்லையா? இல்லை வேறு ஏதாவது பிரச்சினையா என்று விசாரித்தால், விடாமுயற்சி படம் தொடங்கியதில் இருந்தே ஏகப்பட்ட பிரச்னைகள் என்று பதில் வருகிறது.
படம் தொடங்கியதில் இருந்து லொகேஷன் பிரச்சினை, கால்ஷீட் பிரச்சினை, பைனான்ஸ் பிரச்சினை என பல சிக்கலில் இருந்து தப்பி, படம் ரிலீஸ் வரை வந்தது. ஆனால், இப்போதோ பட வேலைகள் முழுமையாக முடியவில்லை. அதனால் ரிலீஸ் தள்ளிப்போகிறது என்று ஒரு தரப்பு சொல்கிறது.
இன்னொரு தரப்போ ‘‘பிரேக் டவுண்’ என்ற ஆங்கில படத்தின் தழுவல்தான் விடாமுயற்சி. அந்த படத்தைத் தயாரித்த ஹாலிவுட் நிறுவனம் காப்பிரைட்டுக்காக பலகோடி கேட்டு நெருக்கடி கொடுப்பதால் பட ரிலீஸ் தள்ளிப்போனது என்கிறது.
அந்த நிறுவனத்துக்கு பணத்தை செட்டில் செய்ய, லைகாவிடம் நிதி வசதி இல்லை. அதனால் தள்ளிப்போகிறது என்று வேறொரு தரப்பு சொல்கிறது. எது எப்படியோ, சூழ்நிலையை புரிந்துகொண்டு இந்த முடிவை அஜித் ஏற்றுக்கொண்டாராம். வேறு வழியில்லை என்பதால், அந்த சோகத்தை மறக்க குடும்பத்துடன் ஆங்கில புத்தாண்டை கொண்டாட சிங்கப்பூர் சென்றுவிட்டார் என்றும் கேள்வி.
விடாமுயற்சி இந்த மாத இறுதியில் ரிலீஸ் ஆகுமா? அல்லது தள்ளிப்போகுமா என்ற கேள்விக்கும் பதில் இல்லை. பெரும்பாலும் ஜனவரி இறுதிக்குள், குடியரசு தின விடுமுறைக்கு படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப்போனதால், நிறைய தியேட்டர்கள் காலியாகிறது. அதனால, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம்ரவி, நித்யாமேனன் நடித்த ‘காதலிக்க நேரமில்லை’. விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்த ‘படைத்தலைவன்’, சுசீந்திரன் இயக்கும் ‘2 கே’ , விஷ்ணுவர்தனின் ‘நேசிப்பாயா’ ஆகிய படங்கள், பொங்கலுக்கு வருவதாக அறிவித்துள்ளன.