வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்றைய தினம் தென்தமிழகத்தின் அநேக இடங்களிலும் வடதமிழகத்தின் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதேபோல, புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. நேற்றைய தினம் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6 செமீ மழை பெய்துள்ளது. அதேபோல, நேற்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 29 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
இதனிடையே, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமாதம் ஆகி வருகிறது. அது இன்று இரவு முதல் நாளை அதிகாலைக்குள் புயலாக மாறி வரும் நவம்பர் 30ஆம் தேதி கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கம் காரணமா, தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று (28.11.2024) தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும் உள்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும். அத்துடன் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (29.11.2024) தமிழகத்தின் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதி கனமழைக்கு (ரெட் அலர்ட்) வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டிசம்பர் 2ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரைக்கால் – மாமல்லபுரம் அருகே நவம்பர் 30 ஆம் தேதி கரையை கடக்கும்” எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருமாறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் உள்ளது. தெற்கு வங்கக் கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. நாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கில், 370 கி.மீ., தொலைவிலும் சென்னைக்கு தெற்கே, 550 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது. இது பெங்கல் புயலாக வலுவடைந்து, வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகரக்கூடும் என்பதால், தமிழகத்தில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் உள்ளதால் அடுத்த, 12 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் புயலாக மாறிய பின் கரையை நெருங்கும் போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பெங்கல் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நவ.30 ஆம் தேதி காலை கரையை கடக்கும் போது, மணிக்கு 50 முதல் 70 கி.மீ., வேகம் வரை காற்று வீசலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.