தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு அறிமுகமாயிருக்கும் என்று உறுதியாக கூறலாம். இதை ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொல்லியல் துறை சார்பில், தயாரிக்கப்பட்ட ‘இரும்பின் தொன்மை’ நூலை முதல்வர் வெளியிட்டார். பின்னர் இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழர்களுடைய தொன்மையை உலகுக்கு கூறும் மாபெரும் ஒரு ஆய்வு பிரகடனத்தை இப்போது நான் அறிவிக்கப் போகிறேன். இங்கு கூடியிருப்பவர்களும், நேரலையில் இதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் கவனமாக கேட்கவும். தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது. இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே திரும்பவும் கூறுகிறேன், தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் ஆய்வுப் பிரகடனத்தை இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிக்கிறேன்.
5,300 ஆண்டுகளுக்கு முன்பே, உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது. இப்போது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம், அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக் கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு.4000ம் ஆண்டின் முற்பகுதிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு அறிமுகமாயிருக்கும் என்று உறுதியாக கூறலாம். இதை ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன்.
தமிழக அரசால் தொல்லியல் துறையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், உலகத்தின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. புனேவில் உள்ள பீர்பால் சகானி தொல் அறிவியல் நிறுவனம், அகமதாபாத்தில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், ஆகிய தேசிய அளவிலான புகழ்பெற்ற ஆய்வகங்களுக்கும், பன்னாட்டு அளவில் உயரிய நிறுவனமான அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இருக்கும் பீட்டா ஆய்வகத்துக்கும் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
தேசிய நிறுவனங்களில் ஓஎஸ்எல் பகுப்பாய்வுக்கும், பீட்டா ஆய்வகத்தில் கதிரியக்க கால பகுப்பாய்வுக்கும் ஒரே தாழியில் இருந்து மாதிரிகளை அனுப்பி வைத்தோம். இப்படியாக மூன்று நிறுவனங்களிடமிருந்தும் ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொல்லியல் துறை பல்வேறு ஆய்வு நிறுவனங்களுக்கு மாதிரிகளை அனுப்பி பெறப்பட்ட முடிவுகளை கூர்ந்து ஒப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியான முடிவுகள் கிடைத்துள்ளது.