’பொன்னியின் செல்வன் – 2’ படம் திரையரங்குகளில் வெளியாவதற்காக ஒட்டுமொத்த தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும், நடிகர்களும், இயக்குநர்களும் காத்திருந்தார்கள்.
பொன்னியின் சுனாமியில் தங்களுடைய படங்கள் எடுப்படாமல் போய்விடுமோ என்ற முன்னெச்சரிக்கைதான் இதற்கு காரணம்.
விஜய் நடிக்கும் ‘லியோ’, ஆயுத பூஜைக்குதான் என்று படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் போதே சொல்லிவிட்டார்கள்.
இதனால் பிஎஸ்-2 ரீலிஸூக்கு பிறகு, ஜெயிலர் ரிலிஸூக்கு முன் என ஒரு பாதுகாப்பான ரிலீஸ் நாட்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
அந்த வகையில், ’மண்டேலா’ பட இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படம் சுதந்திர தின விடுமுறையொட்டி வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். காரணம் ரஜினியின் ’ஜெயிலர்’ செப்டெம்பர் மாதம் வெளியாகும் என்ற யூகம்தான்.
ஆனால் ’ஜெயிலர்’ ஆகஸ்ட் 10 தேதி களமிறங்குவதால், ’அதிக திரையரங்குகளில் மாவீரன்’ தாக்குப்பிடிக்க வேண்டுமென சொன்ன தேதிக்கு முன்பாகவே வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். சிவகார்த்திகேயனின் முந்தையப்படமான ‘ப்ரின்ஸ்’ தோல்வியடைந்ததால், இந்த முறை ரஜினியுடன் மோதி பார்த்து ரிஸ்க் எடுக்க தயாராக இல்லையாம்.
மறுபக்கம், ’ஜெயிலர்’, ’மாவீரன்’, ’லியோ’ என யாருடனும் மோதாமல், என் வழி இந்த வழிதான் என எல்லோருக்கும் முன்பாக மாமன்னன்’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ரஜினியின் ’அண்ணாத்தே’ ஃப்ளாப் என்றாலும், சிங்கம் வேட்டையாட வந்தால், புலியும் பதுங்கிவிடுகிறது, சிறுத்தையும் சிதறி ஓடுகிறது என்று கோலிவுட்டில் கமெண்ட் அடிக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் கதைக்கு இத்தனை கோடிகளா?
அநேகமாக கதை, திரைக்கதை, வசனம் எழுத சம்பளம் அதிக வாங்கியவர்கள் பட்டியலை எடுத்தால் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையை லோகேஷ் கனகராஜ் பெற்றிருக்கிறார் என்று சொல்லலாம்.
‘லியோ’ படத்திற்குப் பிறகு, ‘கைதி 2’, ’விக்ரம் 3’, ‘ரோலக்ஸ்’, ரஜினியுடன் ஒரு படம் என லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் படங்கள் பற்றி ஏற்கனவே எக்கச்சக்க யூகங்கள், கிசுகிசுக்கள், பில்டப்கள்.
இந்நிலையில் ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் இயக்கும் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுத ஒப்புக்கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதில் அனிருத் ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார்.
அன்பறிவும், அனிருத்தும் லோகேஷின் ஃபேவரிட் என்பதால், இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கவும் சம்மதித்து இருக்கிறாராம்.
கதை, திரைக்கதை, வசனம் எழுத லோகேஷ் கனகராஜூக்கு 10 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தளவிற்கு சம்பளம் வாங்கிய இயக்குநர்கள் இங்கு யாருமில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
எழுத்து வேலைக்கு 10 கோடி. அப்படியென்றால் லோகேஷ் கனகராஜ் நடிப்பதற்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்கிறீர்களா… மூன்று டி-சர்ட்கள் வாங்கினால் ஒன்று இலவசம் கதைதான் இதுவும்.
ப்ளைட் டிக்கெட் இலவசம் – கலக்கல் மீரா ஜாஸ்மின்
தயாரிப்பாளர்கள் இப்படியெல்லாம் காசு பண்ண முடியுமா என்று யோசிக்குமளவிற்கு விதவிதமாக செலவுகளையும், கணக்குகளையும் காட்டுவது இங்குள்ள நடிகர்கள், நடிகைகளுக்கு கைவந்த கலை.
படத்தில் நடிப்பதற்கு வாங்கும் சம்பளம் தவிர, ஷூட்டிங்கில் இவர்களுக்கு இத்தியாதி வேலைகளைப் பார்ப்பதற்கு உதவியாளர் தொடங்கி, எல்லா செலவுகளையும் தயாரிப்பாளர்கள் தலையில் கட்டிவிடுவார்கள்.
ஆனால் இந்த மாதிரி பஞ்சாயத்துகளையெல்லாம் தாண்டி, ரீஎண்ட்ரி ஆகியிருக்கும் மீரா ஜாஸ்மினைப் பாராட்டுகிறார்கள் ப்ரொடக்ஷன் மேனேஜர்கள்.
மீரா ஜாஸ்மின் இப்போது துபாயில் செட்டிலாகிவிட்டார். அதற்காக ஷூட்டிங்கை துபாயில் வைக்க முடியாது என்பதால், அவர் நடிப்பதற்கு இந்தியாவுக்குதான் வந்தாக வேண்டும். இந்த மாதிரி சூழல்களில் அந்த ஃப்ளைட் டிக்கெட்டையும் தயாரிப்பாளர்கள் தலையில் கட்டிவிடுவார்கள்.
ஆனால் மீரா ஜாஸ்மின் ஃப்ளைட் டிக்கெட் பணமெல்லாம் வேண்டாம். நானே பார்த்து கொள்கிறேன் என்று சொன்னதுதான் ப்ரொடெக்ஷன் மேனேஜர்களின் பாராட்டுக்கு காரணம்.
அதேபோல் தனது கால்ஷீட்டை பார்த்து கொள்ள இப்போது யாரையும் மேனேஜராக வைத்து கொள்ளவில்லை மீரா ஜாஸ்மின். முன்பு இந்த கால்ஷீட் மேனேஜரால்தான் ஏகப்பட்ட பிரச்சினைகள் என்பதால், இப்போது ரீஎண்ட்ரியில் தனது சகோதரி ஜெனியை கால்ஷீட்டை பார்க்க சொல்லியிருக்கிறார் மீரா ஜாஸ்மின்.