கமலுக்கும், படப்பிடிப்பின்போது நிகழும் விபத்துகளுக்கும் ஏழாம் பொருத்தம் போல. ‘இந்தியன் 2’ படப்பிடிப்பின் போது, ஏற்பட்ட விபத்தில் சில நொடிகள் வித்தியாசத்தில் கமல் உயிர் தப்பினார். ஆனால் அந்த விபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்தவர் உயிரிழந்தார். இதனாலேயே அந்தப் படம் பல மாதங்கள் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
இப்போது மணிரத்னமுடன் கமல் இணைந்திருக்கும் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதிலும் ஒரு விபத்து நிகழ்ந்திருக்கிறது. இந்த முறை விபத்திற்கு உள்ளாகி இருப்பவர் பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ்.
’வாவ் தமிழாவில்’ நாம் கொடுத்த தக் லைஃப் அப்டேட்டில் பாண்டிச்சேரியில் நடக்கும் ஆக்ஷன் காட்சிகள் சம்பந்தமான தகவல்களைப் பகிர்ந்து இருந்தோம். ஆக்ஷன் காட்சிகளுக்காக பல கார்கள், 100-க்கும் அதிகமான துணை நட்சத்திரங்கள் என பாண்டிச்சேரியையே அலறவிட்டுக் கொண்டிருந்தது தக் லஃப் படக்குழு.
தமிழ் சினிமாவில் இப்படியொரு ஆக்ஷன் காட்சி எடுக்கப்படவில்லை என்று சொல்லுமளவிற்கு இருக்கவேண்டுமென திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனால் சண்டை காட்சிகளுக்கான இயக்குநர்கள் அன்பறிவ் இக்காட்சியை பல கோணங்களில் அதிக ஷாட்கள் இருக்கும் வகையில் எடுத்திருக்கிறார்கள். இந்த ஆக்ஷன் காட்சியை எடுக்கும் போது, ஜோஜூ ஜார்ஜூக்கு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. ஹெலிஹாப்டரில் இருந்து ஜோஜூ ஜார்ஜ் குதிக்கவேண்டும். இந்த காட்சியில் கமல், நாசர் ஆகியோரும் இடம்பெற்று இருந்தனர்.
ஜோஜூ ஜார்ஜ் ஹெலிஹாப்டரில் இருந்து குதிக்கும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். அவரால் எழுந்திருக்க முடியவில்லை. கமலும் நாசரும் பதறிவிட்டார்கள்.
அவரை பாண்டிச்சேரியில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஜோஜூ ஜார்ஜின் உடல் எடை அதிகம் என்பதால் இந்த எலும்பு முறிவு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
ஒரு வாரம் கட்டாய் ஓய்வு என்று மருத்துவர்கள் பரிந்துரைத்து இருக்கிறார்கள். இதனால் ஜோஜூ ஜார்ஜ் பாண்டிச்சேரியில் இருந்து கொச்சிக்கு திரும்பிவிட்டார். இந்த காட்சியை இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் தொடர தக் லைஃப் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.