தமிழ் படங்களை விட, தெலுங்கு படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுவது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான தண்டேல் படமும் சேர்ந்துள்ளது. சந்து இயக்கத்தில் நாகசைதன்யா, சாய்பல்லவி, பப்லு, கருணாகரன் நடித்த இந்த படம், பிப்ரவரி 7ம் தேதி வெளியானது. இப்போது ரூ 100 கோடி வசூலை நெருங்கியுள்ளது.
இது குறித்து சினிமா வட்டாரங்கள் கூறியது. ‘‘கடந்த சில ஆண்டுகளாகவே தெலுங்கு படங்கள் அதிகளவில் வெற்றி பெற்று வருகின்றன. பாகுபலி வெற்றிக்குபின் தெலுங்கு படங்களுக்கான வரவேற்பு, மற்ற மொழிகளிலும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 படம், ஆயிரத்து 800 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதை தொடர்ந்து இந்த ஆண்டு வெளியான தண்டேல் படத்துக்கும் நல்ல வரவேற்பு.
ஸ்ரீகாகுளம் என்ற கடலோர கிராமத்தில் மீனவராக இருக்கிறார் ஹீரோ நாகசைதன்யா. குஜராத் எல்லை சென்று மீன் பிடிப்பது அந்த மீனவர்களின் வழக்கம். அப்படி மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது வழி தவறி பாகிஸ்தான் கடல் எல்லைக்கு சென்றுவிடுகிறார்கள். பாகிஸ்தான் சிறையில் வாடுகிறார்கள். நாகசைதன்யா உள்ளிட்ட மீனவர்களை, சாய்பல்லவி எப்படி மீட்கிறார். இந்திய வெளியுறவுதுறை முயற்சி வெற்றி பெற்றதா? அவர்கள் இந்தியா திரும்பினார்களா என்பது தண்டேல் கதை. தண்டேல் என்றால் தலைவன் என அர்த்தம்.
காதல், தேசப்பற்று காட்சிகள், பாகிஸ்தான் சிறை காட்சிகள், மீனவர்களை விடுவிக்க நடக்கும் போராட்டங்கள் ஆகியவை படத்துக்கு பலமாக அமைந்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் இருந்தபோது நடந்த ஒரு உண்மை சம்பவத்தில் தழுவல் இந்த கதை என்பதால், ஆந்திரா, தெ லுங்கானாவில் படம் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, சாய்பல்லவி நடிப்பு, தேவிஸ்ரீபிரசாத் இசை படத்துக்கு பலமாக அமைந்துள்ளது.